நெட்டிசன்களால் ரம்ஜானில் இணைந்த குடும்பம்

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் மனம் நலம் குன்றிய தங்கள் குழந்தையை மீட்ட பெற்றோர்

0
1023
views

நாடு முழுவதும் ரமலான் கொண்டாடி வந்தாலும், நெட்டிசன்களால் இந்த ரமலான் ஒரு குடும்பத்திற்கு மட்டும் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னால் தொலைந்து போன 25 வயதுமிக்க மனம் நலம் குன்றிய மகனை நெட்டிசன்கள் உதவியால் மீட்டு, இந்த ரம்ஜானை இரட்டை சந்தோசத்துடன் கொண்டாடி வருகின்றனர் உ.பி யில் உள்ள ஒரு ஏழைக் குடும்பம்.

அவுரங்காபாத்தில் மனம் நலம் குன்றிய இளைஞர் ஒருவர் பாதை தெரியாமல் நடந்து போவதை பார்த்துள்ளார் புனே வை சேர்ந்த யோகேஷ் மல்கரே. ஸ்மைல் பிளஸ் (Smile Plus Foundation) என்ற அமைப்பை நடத்தி வரும் யோகேஷ், மனம் நலம் குன்றிய இளைஞரை சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்றுள்ளார். எதையோ தேடுவதை உணர்ந்த அவர், அந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். நீங்கள் யார் பெயர் என்ன எந்த ஊர் என்ற எல்லா கேள்விகளுக்கும் தன் பெயரை தவிர எந்த பதிலும் அந்த இளைஞர் கூறவில்லை.

Yogesh Malkhare

இதனை வீடியோ எடுத்த யோகேஷ், அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். அவர் பதிவு செய்த அந்த வீடியோ 46000 மக்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. அந்த வீடியோ தான் அந்த இளைஞரை அந்த குடும்பத்துடன் இணைத்துள்ளது.

இது குறித்து யோகேஷ் அவர்களிடம் கேட்ட போது,

கடந்த ஜூன் 3 ஆம் தேதி அவுரங்காபாத்திற்கு ஒரு வேலையாக சென்றிருந்தேன். அப்போது மனம் நலம் குன்றிய இளைஞர் எதையோ தேடி அலைவதை கண்டு, அவரிடம் பேசினேன். நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அவர் தனது பெயரையே பதிலாக கூறினார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் என் தொடர்பு என்னோடு சேர்த்து பதிவு செய்தேன். அதன் மூலம் எதாவது தகவல் வருமா என்று காத்திருந்தேன் என்றார்.

வெறும் வீடியோ எடுத்து தன் கடமை முடிந்தது என யோகேஷ் விட்டுச் செல்லவில்லை. அவரை யர்வாடா என்ற ஊரில் இருக்கும் ஒரு மன நல காப்பகத்தில் சேர்த்துள்ளார். அவர் சேர்த்த அடுத்த நாள், யோகேஷ் அவர்களுக்கு போன் வந்துள்ளது. அந்த இளைஞர் எங்கள் குழந்தை தான் என்றும் அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டுள்ளார் இளைஞரின் தந்தை.

ஜூன் 14 ஆம் தேதி, காப்பகத்திற்கு வந்த பெற்றோர்கள் அந்த இளைஞரை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அந்த இளைஞரின் தந்தை கூறிய போது,

வாரத்தில் நான்கு நாட்கள் நான் கடுமையாக உழைப்பேன். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மீதமுள்ள 3 நாட்களில் என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு செலவழிப்பேன். எனக்கு எல்லாமே என் மகன் தான். புனிதமிக்க இந்த ரமளானில் என் மகன் மீண்டும் எங்களுக்கு கிடைத்துள்ளது இறைவன் எங்களுக்கு கொடுத்த அருள். இனி எங்கள் மகனை கவனமாக பார்த்துக் கொள்வோம் என்றார்.

மேலும் கூறுகையில்,

எங்கள் மகன் தொலைந்து போனது குறித்து புகார் கொடுத்தும் யாரும் உதவ முன்வரவில்லை. என் மகனை பிரிந்து இருந்த இந்த நாட்களில் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தோம். எங்கள் மகனை பத்திரமாக மீட்டு, உதவி செய்த யோகேஷ் அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண் கலங்கினார்.

தனது ஸ்மைல் பிளஸ் ஃபவுன்டேஷன் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் யோகேஷ் மல்கரே அவர்களின் இத்தகைய செயல் பாராட்டத்தக்கது. நன்றாக இருக்கும் குழந்தைகளையே தூக்கி வீசிச் செல்லும் இந்த காலத்தில், ஏழ்மை வாட்டினாலும், மனம் நலம் குன்றிய மகனை 25 வருடமாக வளர்த்து வரும் இந்த பெற்றோர்களும் பாராட்டிற்குரியவர்கள்.

சமூக வலைதளம் என்பது வெறும் பொழுதுபோக்கும் இடம் மட்டுமல்ல. சமூகத்திற்கு நம்மால் முடிந்ததை சமூக வலைதளம் மூலம் செய்ய முடியும் என்று நிரூபித்த நெட்டிசன்களும் பாராட்டிற்குரியவர்கள்.

ஒருவரால் மட்டும் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது நாம் அனைவரும் சேர்ந்தால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே இந்நிகழ்வு நமக்கு தரும் பாடம். யோகேஷ் மல்கரே (Yogesh Malkhare) அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

யோகேஷ் மல்கரே அவர்களின் முகநூல்:
https://www.facebook.com/yogesh.malkhare.7

மனம் நலம் குன்றிய இளைஞரை சேர்த்து வைக்கும் வீடியோ:

जय हिंद शेयर करा 8600000806 दिलीप कांबळे सर समाज कल्याण मंत्री यांच्या हस्ते नजीर आणि त्यांचा वडीलांची भेट घडून दिलीसगळ्या फेसबुक मिञांचे मनापासून आभार …

Posted by Yogesh Malkhare on Thursday, 14 June 2018

புனே மக்களால் ஹீரோ என்று அழைக்கப்படும் யோகேஷ் மல்கரே அவர்களை பாராட்டி பகிர்வோம். ஆதரவற்றவர்களை அரவணைத்து வாழ்வோம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here