மறக்கப்பட்ட தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு: மீண்டும் உருவாக்குவோமா

0
2001
views

சங்க இலக்கியங்களை திருப்பிப் பார்த்தால், அது கடவுள் புராணங்களை சொல்வதை விட, தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றியே அதிகம் பேசி இருக்கும். அந்த வகையில் தமிழர்களிடையே நிலவி வந்த விருந்தோம்பல் பண்பு, உலகையே வியக்க வைக்கும் அளவிற்கு இருந்துள்ளது.

ஒரு பெண்ணின் பெயரால் எழுந்த காப்பியம் என்றாலும், பொருளாதார சிந்தனையோடு சமூக அமைப்பை படம் பிடித்து காட்டும் காப்பியம் தான் மணிமேகலை.

“மண்ணில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் உணவும் உடையும் வீடும் தருவது தான் உயர்ந்த அறம்” என்று உரைக்கிறது மணிமேகலை. மேலும் யார், யாருக்கெல்லாம் உதவ வேண்டும் என்றும் தெளிவாக ஒரு பட்டியல் தருகிறது.

வழியற்றவர்கள், செவிப்புலன் இழந்தவர்கள், கால் முடமானவர்கள், ஆதரிப்பாரற்று அனாதையாக வீதியில் நிற்பவர்கள், நோயுற்று படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோருக்கு உணவூட்டி, அவர்கள் உண்ட மிச்சத்தை அருந்துவது தான், மனித அறம் என்று போதிக்கிறது மணிமேகலை. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது தான் அதன் முக்கிய கோஷம்.

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு”

என்கிறது திருக்குறள். விருந்திற்கு வந்தவர்களை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, வேறு விருந்தினரை வரவேற்க வாசலில் நின்றவர்கள் நம் முன்னோர்கள். அப்படி வாழ்பவர்கள் தான் இறப்பிற்கு பின்னர் வானவருக்கு நல் விருந்தாவார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

பெரிய புராணத்தில் இடம்பெறும் நாயன்மார்களில் பலர் அற்புதங்கள் செய்தவர்கள் இல்லை. பசித்து கிடந்த அடியார்களைத் தேடிப்பிடித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்கள் விருப்பதிற்கேற்ப விருந்து பரிமாறி, அவர்கள் பசியாறிய பின்பே, தங்கள் வயிற்று பசியை ஆற்றிக் கொண்டவர்கள் தான் நாயன்மார்கள். அதனால் தான் அவர்கள் போற்றப்படுகிறார்கள்.

விருந்தோம்பல் என்பது மனித பண்பாட்டின் மகத்துவமாகும். தமிழர்களிடையே வெவ்வேறு மதங்கள் இருந்து வந்தாலும், நம் முன்னோர்களின் விருந்தோம்பல் பண்பை இன்றைக்கும் பிரதிபலித்து வருவது பண்டிகைகள் தான்.

கொலு வைத்து, வீடு வீடாக சென்று அழைப்பு கொடுத்து, விருந்தினரை வரச் சொல்லி, உபசரிக்காமல் போனால் நவராத்திரி இல்லை. தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் தின்பண்டங்களை அள்ளிக் கொடுத்து, மகிழும் உள்ளம் இல்லாதவர்களுக்கு தீபாவளியின் அர்த்தம் புரியவில்லை. உழைத்தவனுக்கும், உதவியவனுக்கும் விருந்து வைத்து, நன்றி செலுத்தாத வீட்டில் பொங்கல் பொங்கி பயனில்லை. ஏழைகளுக்கு உதவி அகம் மகிழ தெரியாதவருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையால் பயனில்லை. 30 நாட்கள் இறைவனுக்காக நோன்பிருந்து, ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் கொடுக்காத மனிதன் ரம்ஜான் கொண்டாடி பயனில்லை.

பொங்கலும், தீபாவளியும், கிறிஸ்துமஸ் திருநாளும், ரமலான் பண்டிகையும் ஊரும், உறவும் சேர்ந்து மகிழ்வதற்காக உருவெடுத்த பண்டிகைகள் தான். ஆனால் இன்றைக்கு அப்படியா நாம் பின்பற்றி வருகிறோம். கணவனும், மனைவியும், பிள்ளைகளும் மட்டும் வாசல் கதவை பூட்டிக்கொண்டு, நான்கு சுவர்களுக்குள் உண்டு மகிழ்ந்தால், அதற்கு பெயர் பண்டிகையும் இல்லை. அவர்கள் உண்பது உணவுமில்லை.

ஒவ்வொரு நான்கு நொடிகளுக்கும், ஒரு குழந்தை பசியால் இறந்து போகிறது என்கிறது ஆய்வறிக்கை. அதே சமயம் உணவை வீணாக்குவதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வீட்டிற்கு திண்ணை அமைத்து வழிப்போக்கர்களை உபசரித்த நம் முன்னோர்களின் அந்த விருந்தோம்பல் பண்பை, முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்றாலும், பசியால் வரும் மக்களை அலச்சியபடுத்தி, அவர்களை புறந்தள்ளாமல், இன்முகத்தோடு அவர்களுக்கு உதவி, பசியால் இறந்து போகும் அவல நிலையை போக்குவோம். உலகிற்கு விருந்தோம்பல் பண்பை கற்றுக்கொடுத்த தமிழ் சமூகம், இதை மாற்றுவதற்கான முன்னெடுப்பையும் செய்யட்டும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here