தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை – பேரறிஞர் அண்ணா

1
4265
views

ஆப்ரிக்க நாட்டிலே ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுகொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டு தொழுவார்கள். கூடப் பிறந்தவர்களைக் கொண்டு சாமிக்கு படைப்பார்கள். கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சேர்ந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும், உங்களிடமாகட்டும் ஓர் ஆப்ரிக்க வாசியோ அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால், சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா விழாதா?

நாலுதலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமிகள், ஆறுதலைச் சாமி, யானை முகச்சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவனைகளிலே உள்ளனவே ! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இந்த சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கன்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு எப்படி மனம் துணியும்? ஆகவே தான், நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்.

நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயாசம், அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் எனக் கூறி, அக்கிரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து “தியாகத்தை” பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம். நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்சாதி என்று கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிகொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல!  நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. செறியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூடமதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படி தான் மனம் இடந்தரும்? எப்படி தான் துணியும்?

இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கறை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்கு தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மான வழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீல்வாரா? தாம் திராவிடர் எனத் தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமை ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழபெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!

1 COMMENT

  1. ஆமா….தமிழர்கள்(நாங்கள்) இந்துக்கள் இல்லை……அதே சமயம் நாங்கள் த்ராவிடர்களும் இல்லை…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here