பொங்கல் மதப்பண்டிகையா? பண்டைய தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடினர்?

0
396
views

பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல. நீங்கள் இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ ஏன் கடவுள் மீது நம்பிக்கையற்ற நாத்திகராகக் கூட இருக்கலாம். இவர்கள் அனைவருக்குமான பண்டிகை தான் பொங்கல். அது எந்த மதத்தையும் சேர்ந்த பண்டிகை அல்ல.

பொங்கல் உருவான வரலாறு:

பொங்கல் தென்னிந்திய மக்களின் தொன்மையான பண்டிகை. குறிப்பாக தமிழர்களின் பண்டிகை. சங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். தை முதல் நாளில் அந்த விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

உழவர்கள் மழையின் உதவியால், ஆடி மாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தனது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் விவசாயிகள், தங்கள் உழைப்பிற்கு உதவிய இறைவனுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரை பொங்கல் செய்து மகிழ்ந்தனர். இக்காலத்தில் தான் சர்க்கரை பொங்கல் என்பது சாதாரண உணவு. நமது முதாதையர் காலத்தில் சர்க்கரை பொங்கல் என்பது விசேச நாட்களில் மட்டுமே சமைக்கப்படும் அறிய உணவு ஆகும். இப்படி சமைத்து, தங்கள் உழைப்பை கொண்டாட ஆரம்பித்தது தான் பொங்கல் திருநாள்.

விவசாயி என்பவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், நாத்திகன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே பொங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தின் பண்டிகையோ அல்லது மதத்தின் பண்டிகையோ அல்ல. விவசாயி தன்னுடைய அறுவடையை கொண்டாடுவதே பொங்கல்.

சாமிக்கு பொங்கல் படைத்து, தற்போது கொண்டாடுவதை போல பண்டைய தமிழர்கள் கொண்டாடவில்லை. பண்டைய தமிழர்கள் பொங்கல் சமைத்ததே அன்றைய நாளை ஒரு விசேசமான உணவு உண்டு மகிழத்தானே தவிர பூஜை செய்து யாரும் பொங்க வைக்க வில்லை. இஸ்லாமியர்கள் எப்படி ரம்ஜான் அன்று பிரியாணி சமைக்கிறார்களோ அதே போன்று அந்த காலத்தில் விசேச உணவான பொங்கல் சமைத்து மகிழ்ந்தனர்.

மாடுகளுக்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, அதை வணங்குவதை தான் நாம் மாட்டுப் பொங்கல் என்கிறோம். ஆனால் பண்டைய தமிழர்கள் அப்படி செய்யவில்லை.

விவசாயம் செழிப்படைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லி பொங்கல் சமைத்து உண்டதைப் போல, மறுநாள் விவசாயத்திற்கு அயராது உழைத்த கால்நடைகளை குளிப்பாட்டி, மாடுகளுக்கு தேவையான சிறப்பான உணவு கொடுத்து மகிழ்ந்துள்ளார்களே தவிர மாடுகளை வணங்கவில்லை.

மாடுகளை வணங்குவது என்பது பண்டைய தமிழர்களிடையே இல்லாத ஒன்று. மாடுகளை அவர்கள் வணங்கி இருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தி இருக்க மாட்டார்கள். மாடுகளை வாங்கி விற்கும் மாட்டு சந்தைகள் உருவாகி இருக்காது. மதுரையில் கூட மாட்டுத்தாவணி என்ற பகுதியே மாடு விற்பனைக்கு பெயர் போன இடம். எனவே மாடுகளை அவர்கள் வெறும் கால்நடையாக தன் வீட்டில் ஒருவனாக பார்த்தார்களே தவிர, ஒரு போதும் அதை வணங்கவில்லை. பொங்கலை சாமிக்கு படைப்பது, சூரியனை வணங்குவது, மாடுகளை வணங்குவது என்பது ஆரிய வருகைக்கு பின்பு புகுத்தப்பட்டவையாகும்.

விவசாயி இயற்கையை சீராக தந்த இறைவனுக்கும், உதவிய கால்நடைக்கும் நன்றி செலுத்தி வந்ததே பொங்கல் பண்டிகை. எனவே இது விவசாயிகள் பண்டிகை. இது தமிழர்களின் பண்டிகை. பொங்கலை உணர்ந்து கொண்டாடுவோம்.

அனைவருக்கும் குட் நியூஸ் தமிழின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். இந்நாளில் விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட இறைவனிடம் பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here