கோவிலை இடித்தே பாபர் மசூதி உருவானது என்பது பொய் என்று மோடி அரசால் அம்பலமாகியுள்ளது

0
1722
views

அயோத்தி விவகாரம் தொடர்பாக 33 பக்கங்கள் கொண்ட ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. அந்த மனுவின் மூலம், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது என்பது பொய்யாக பரப்பப்பட்டு, மசூதி இடிக்கப்பட்டதை காட்டுகிறது.

பாபர் மசூதிக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை இந்துத்துவாக்கள் உரிமை கொண்டாடிய வழக்கில், 1991 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு, பாபர் மசூதி நிலத்தை சுற்றிலும் இருக்கிற 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

இந்த 67 ஏக்கர் நிலத்தில் 42 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி நியாஸ் என்ற இந்துத்துவா அறக்கட்டளைக்கு சொந்தமான இடம். மீதி இருக்கும் இடங்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. இந்த 42 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரவேண்டும் என்று வழக்குகள் நடைபெற்று வருகிறது.

1994 ஆம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க விரும்பினால் அதனை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் 2003 ஆம் ஆண்டு அயோத்தியில் கையகப்படுத்திய நிலம் அதே நிலையில் தொடர வேண்டும் என்று மறு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பங்குகளாக பிரித்து வழங்கும்படி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட குழு விசாரணைக்கு எடுத்தது. ஆனால் இந்த 5 பேர் கொண்ட குழுவில் இருந்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரமுடியாத காரணத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விசாரணை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் மத்திய மோடி அரசு ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

“1991 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதில் ராமஜென்மபூமி நியாஸ் என்ற அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது. எனவே கூடுதலாக கையகப்படுத்திய நிலத்தை அந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே 2003 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை இந்துத்துவா அமைப்பினர் வரவேற்றுள்ளனர். நிலத்தை அந்த உரிமையாளர்களிடம் வழங்கினால் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அது வழிவக்கும் என்றும் கூறியுள்ளனர் இந்துத்துவா அமைப்பினர்.

இதுபற்றி மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவுடேகர் கூறுகையில், ” பிரச்சனைக்குரிய நிலம் 0.313 ஏக்கர் நிலம் தான். இதில் மத்திய அரசு கைவைக்காது. இது தொடர்பான வழக்கில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 42 நிலம் ராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானது. அரசு அந்த நிலத்தை அவர்களிடம் திரும்பக்கொடுக்கும் போது அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த மனுவின் மூலம், பாபர் மசூதி இருந்த இடத்தை சுற்றிலும் உள்ள 42 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட இந்துத்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்பதை அறிய முடியும். ஆனால் பாபர் மசூதி எங்கு இருந்ததோ அங்கு தான் கோவில் இருந்தது என்று கூறிய இந்துத்துவா அமைப்புகள் தற்போது வேறு இடத்தில் கட்டுகிறோம் என்று கூறுவது, திட்டமிட்டு அந்த பள்ளிவாசலை இடிக்க வேண்டும் என்பதற்காகவே கோவில் இருந்தது என்று பரப்பியது பொய் என்பதை புரிய முடிகிறது.

அங்கு தான் ராமர் பிறந்தார், அங்கு தான் கோவில் இருந்தது என்று திட்டமிட்டு இஸ்லாமியர்களின் பள்ளிவாசலை இடித்துள்ளது அம்பலமாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த அந்த இடத்தை மட்டும் முடக்குவது மட்டுமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் நோக்கமாக தற்போது இருக்கிறது. ஒருவேளை நிலம் திரும்ப அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அந்த பகுதியில் கோவிலை எழுப்பி சர்ச்சைக்குரிய இடத்தையும் ஆக்கரமிப்பு செய்து மீண்டும் மதக்கலவரத்தை ஏற்படுத்த இந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு மேலும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என்பதால் உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று அனைவரும் உற்றுநோக்கியுள்ளனர்.

ராமர் பிறந்த இடம் என்று கூறி பள்ளிவாசலை இடித்து, தற்போது வேறு இடத்தில் கோவில் கட்ட நினைப்பது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமர் கோவில் கட்டுவோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை மோடி நிறைவேற்றத் தவறிவிட்டார் என்ற இந்துத்துவா அமைப்புகளின் விரக்தியை போக்கும் விதமாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட அந்த நிலம் மீண்டும் இந்து அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்டால், இன்னொரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி யில் வெற்றியடைய திட்டமிடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

பாபர் மசூதியை இடித்து ஜனநாயகத்தை தூக்கி எறிந்த இந்துத்துவா சக்திகளின் நோக்கம் பள்ளிவாசலை இடிப்பது மட்டுமே என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here