சார் போகாதிங்க: ஆசிரியரின் கால்களை பிடித்து கதறி அழுத மாணவர்கள்

பணிமாறுதல் பெற்று சென்ற ஆசிரியரை போகவிடாமல் கதறி அழுத மாணவர்கள். ஒரு மாணவர் ஆசிரியரின் பின்னால் நின்றவாறு கட்டி அணைத்து கதறி அழுதது நெஞ்சை உருக வைத்தது.

0
2559
views

மாணவர்கள் மட்டுமல்லாது ஒரு ஊரே ஒருவரை போகவிடாமல் இங்கயே இருங்கள் என கதறி அழுகிறார்கள். அந்த மனிதர் சினிமா நடிகர் அல்ல. அரசியல்வாதி அல்ல. ஒரு சாதாரண அரசு பள்ளி ஆசிரியர் தான்.

28 வயதே ஆன இளைஞர் தான் ஜி.பகவான். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வகுப்பெடுக்கும் ஆசிரியர். தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் இடம் மாறி செல்லவுள்ளார் என்று தெரிந்த மாணவ, மாணவிகள்  அவரை போகவிடாமல் கட்டி அணைத்தும், கால்களை பிடித்துக் கெஞ்சியும் எங்களை விட்டு போகாதீர்கள் சார் என்று கெஞ்சியது பார்ப்பவர்களை கண்கள் கலங்கச் செய்தது. மாணவர்களின் அழுகையை பார்த்த ஆசிரியர் பகவான் அவர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆசிரியர் பகவான் அவர்கள் தற்போது திருத்தணிக்கு அருகில் உள்ள அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் மாறுதல் அடைந்துள்ளார். ஆனால் இச்சம்வத்திற்கு பிறகு அவரது இடம் மாறுதல் ஆணை பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் வெள்ளியகரம் பள்ளியிலேயே பணி புரியலாம் அல்லது அருங்குளத்திற்கு செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பகவான் அவர்கள் நம்மிடம் பேசியது,

இது தான் எனக்கு முதலில் கிடைத்த வேலை. கடந்த 2014 ஆண்டு அரசு பள்ளி ஆசிரியராக இங்கு பணிக்குச் சேர்ந்தேன். மாணவர்கள்-ஆசிரியர் விகிதாசாரத்தை வைத்து பார்க்கும் போது, நான் இங்கு உபரியாக இருக்கும் கூடுதல் ஆசிரியர். எனவே தான் என்னை திருத்தணிக்கு இடம் மாறுதல் செய்திருக்கிறார்கள் என்கிறார்.

வெள்ளியகரம் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக இருக்கிறார் பகவான். கடந்த ஜூன் 12 முதல் 21 வரை நடந்த, ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொண்டு, தனது பணி மாறுதல் இடமாக அருங்குள்ளத்தை பகவான் தேர்வு செய்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல், பகவானை மாற்றும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் மாணவர்களின் பெற்றோர்கள்.

எனது மாணவர்கள் அனைவரும் என்னை கட்டிப்பிடித்தும், கால்களை பிடித்து கதறி அழுதும் போகாதீர்கள் சார் என கெஞ்சினார்கள். அதை பார்த்த போது என் இதயமே நொறுங்கி விட்டது. அவர்கள் அனைவரையும் ஒரு ஹாலுக்கு கூட்டிச் சென்று, இன்னும் சில நாட்களில் நான் திரும்பவும் வந்து விடுவேன் என்று சமாதானப்படுத்தினேன் என்றார் பகவான்.

இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் அவர்களிடம் பேசினோம்.

மாணவர்கள் பகவானை ஒரு பெற்றோராகவே பார்த்தனர். அதனால் தான் அவரை விட்டுப் பிரிய அவர்களால் முடியவில்லை. மாணவர்கள்-ஆசிரியர் விகிதாச்சார அடிப்படையில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களை, அரசு இடம் மாறுதல் செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். கடந்த வருடம் 281 மாணவர்களை இந்த பள்ளி பெற்றது. இந்த கவுன்சலிங் மூலம், இளம் ஆசிரியர்கள் அனைவரும் இடம் மாறுதல் அடைவார்கள். பகவான் மற்றும் இன்னொரு ஆசிரியரும் இந்த வருடம் இப்பள்ளியில் இருந்து இடம் மாறுதல் அடைகிறார்கள் என்றார்.

மாணவர்களிடம் பேசிய போது, எங்கள் பள்ளியில் இருந்து நிறைய ஆசிரியர்கள் இடம் மாறுதல் அடைந்திருக்கிறார்கள். ஆனால் பகவான் சார், எங்களை விட்டு போவதை எங்களால் தாங்க முடியவில்லை என்கிறார்கள்.

சாட்டை என்கிற சினிமா படத்தில் தான் இது போன்று காட்சிகள் வரும். நிஜத்திலும் இப்படி நடக்குமா என்று ஆச்சரியமடைந்தோம். ஏன் பகவான் என்கிற ஆசிரியரை மாணவர்கள் விரும்புகிறார்கள் என்று அவரிடமே கேட்டோம்.

வெறும் பாடத்தை மட்டும் சொல்லித் தராமல் என்னால் முடிந்த அளவிற்கு அவர்களிடம் நண்பனாக உரையாடினேன். கருத்துள்ள நல்ல கதைகளை அவர்களுக்கு கூறுவேன். அவர்களின் குடும்ப நிலையை உணர்ந்து அவர்களின் எதிர்காலம் குறித்து வழிகாட்டுவேன். பல விசயங்களை வாய் வழியாக கற்பிக்காமல் projector வைத்து சொல்லிக் கொடுப்பேன். இந்த projector வகுப்பறை தான் அவர்களை மிகவும் கவர்ந்தது. சினிமா தியேட்டரில் அமர்ந்து பார்ப்பதை போல உணர்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு படிப்பும் நன்கு வந்தது. இதனால் தான் அவர்களுக்கு நான் ஒரு ஆசிரியர் என்பதைத் தாண்டி ஒரு நண்பனாக, ஒரு சகோதரனாக ஒரு உறவை உருவாகிவிட்டது என்கிறார்.

ஆசிரியர்கள் வெறும் பாடம் கற்பிப்பவர்கள் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு சமூக வழிகாட்டி தான் அவர்கள். மாணவர்களை அடித்த ஆசிரியர், மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் என்ற செய்திகள் படிக்கும் இந்த காலத்தில், ஒரு ஆசிரியரை போக விடமாட்டோம் என்று ஒரு ஊரே கதறி அழுகிறது என்றால், ஆசிரியர்களின் பொறுப்பு எத்தகையது என்பதை காட்டிவிட்டார் பகவான். அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டிய ஒரு பாடப்புத்தகம் தான், பகவான் என்னும் அரசுப் பள்ளி ஆசிரியர்.

சாட்டைப் படத்திலும் ஆசிரியர் வேடத்தில் நடித்த சமுத்திரகனி இறுதியில் வேறு பள்ளிக்கு இடம் மாறிச் செல்வார். அந்த திரைப்படத்திலும் இதே போன்று மாணவர்கள் அழுவார்கள். அப்போது சமுத்திரக்கனி மாணவர்களுக்கு சொல்லும் அறிவுரை தான் நாமும் சொல்ல நினைக்கிறோம்.

பிரிவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இன்று நீங்கள் பகவான் ஆசிரியரை இழப்பீர்கள். நாளை உங்கள் கல்லூரி நண்பர்களை இழப்பீர்கள். பின்பு வேலை பார்க்கும் இடத்தில் இழப்பீர்கள். வாழ்கையில் ஒவ்வொரு தருணத்திலும் இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அந்த பிரிவின் போது ஏற்படும் வழியை அடுத்த இலக்கை நோக்கிய செல்லும் பயணமாக நினைக்க வேண்டும் மாணவ கண்மணிகளே. இது வெள்ளியகரம் மாணவர்களுக்கு மட்டுமல்ல பிரிவை தாங்க முடியாத அனைவருக்கும் தான்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here