காஷ்மீர் அரசு கவிழ்ப்பு | Article 370 யை ரத்து செய்யும் முனைப்பில் பாஜக

0
2381
views

காஷ்மீர் பள்ளத்தாக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரை மத ரீதியாக பிரித்து வெற்றி அடைந்துள்ளது பா.ஜ.க. ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க வும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. தற்போது பா.ஜ.க தனது ஆதரவை விலக்கிக் கொண்டு அரசை கவிழ்த்துள்ளது. இது தான் நடக்கும் என்றும், இத்தனை நாட்கள் இந்த கூட்டணி ஆட்சி நடந்ததே பெரிய விஷயம் என்பது தான் அங்குள்ள மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

இந்தியாவில் காஷ்மீர் என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இடம். ஒரு சாதாரண குடிமக்களை பொறுத்த வரை, காஷ்மீர் பிரச்சனை என்பது தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சனை என்று பார்க்கிறார்கள். ஆனால் இந்துத்துவாவை பொறுத்தவரை இது மத ரீதியான பிரச்சனையாகவே பார்க்கிறது. காஷ்மீர் மீதான சண்டை என்பது இஸ்லாம் என்ற மதம் மீதான போர் என்றே இந்துத்துவ சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். இந்த மதபோர் என்பது இன்று நேற்றல்ல ஏறக்குறைய 1200 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

காஷ்மீர் மீதான் இந்த தொடர் யுத்தம் என்பது ஈவு இரக்கமின்றி அரங்கேற்றப்படும் ஒரு யுத்தமாகும். அங்கு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இணக்கத்திற்கு இடமில்லை. அம்மக்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கி வருகிறார்கள் ஆட்சியாளர்கள். மோடி அரசோ காஷ்மீர் பிரச்சனையை ஆர்.எஸ்.எஸ் கொள்கையோடு அணுகுகிறது என்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்.

காஷ்மீர் மீதான வாஜ்பாயின் கொள்கை வேறு விதமாக இருந்தது. அவரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்றாலும், அவருக்கு மோடியை போல மெஜாரிட்டி என்பது இல்லை. மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி பிரதமராகவே அவர் இருந்தார். எனவே அவரால் தன்னிச்சையாக எதுவும் செய்யமுடியாத நிலை இருந்தது.

ஆனால் மோடிக்கு அப்படி அல்ல. யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை வைத்தே காஷ்மீரை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தோடு அணுக நினைக்கிறது மோடி அரசு.

மோடி ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை அனைவரும் அனுதினமும் படித்து வருகிறோம். மாட்டின் பெயரால், லவ் ஜிஹாத் என்ற பெயரால் முஸ்லிம்களை கொல்வது, முத்தலாக் பிரச்சனையை உருவாக்கியது, முஸ்லிம் பெயருள்ள தெரு மற்றும் ஊரின் பெயரை மாற்றியது. வரலாறுகளை திரித்து, முஸ்லிம்களை வில்லனாக சித்தரிப்பது என சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதையெல்லாம் கவனித்து வருகிற காஷ்மீர் இளைஞர்கள், நாமும் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தான், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அரசை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடி வருகிறார்கள்.

காஷ்மீர் இளைஞர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மெஹபூபா முப்தி, பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததன் மூலம், RSS யிற்கு காஷ்மீரின் கதவுகளை திறந்துவிட்டவர் என்ற குற்றம்சாட்டிற்கு உள்ளாகி இருக்கிறார். காஷ்மீரில் அதிக தொகுதிகளை வென்ற மெஹபூபா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் ஆட்சி கவிழும் வாய்பிருந்திருக்காது. ஆனால் பா.ஜ.க வை தேர்ந்தெடுத்து, தற்போது ஆட்சியை இழந்துள்ளதன் மூலம், காஷ்மீருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தப் போகிறது என்பதை தற்போது அவர் உணரத் துவங்கியுள்ளார். காஷ்மீர் மீது மத ரீதியான தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகிவிட்டது என்பதை ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தெரிந்து கொண்டார் மெஹபூபா.

காஷ்மீர் அரசின் ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றதற்கு பின்னால் மிகப்பெரிய உள்நோக்கம் உள்ளதாக அரசியல் அறிஞர்கள் நினைக்கிறார்கள். காஷ்மீரை தீவிரவாத தாக்குதல் பிரதேசமாக சித்தரித்து, அதன் மூலம் அம்மக்களின் மீது வன்முறையை புகுத்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் காஷ்மீர் மக்கள்.

2014 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது பா.ஜ.க வின் பிரதான வாக்குறுதியாகும். எனவே அதை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம் என நினைக்கிறது பா.ஜ.க.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இதை செய்திருக்கலாமே ஏன் இப்போது செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமானால், நாடாளுமன்ற இரு அவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அது முடியாத ஒன்று என்றாலும், ஒரு வேளை நிறைவேற்றினாலும், காஷ்மீர் அரசு தனது சட்டமன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அதை தடுத்து நிறுத்தும் வாய்ப்புகள் மிக அதிகம். அது போக, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இதை செய்ய நினைக்காததற்கு காரணம், குடியரசு தலைவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் அல்ல என்பதும் தான்.

எனவே காலம் கடந்து, சரியான வாய்ப்பை எதிர்பார்த்து அரசை கவிழ்த்துள்ளது பா.ஜ.க. குடியரசு தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கவர்னரின் ஆட்சி தற்போது காஷ்மீரில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே Article 370 யை ரத்து செய்ய குடியரசு தலைவரின் அதிகாரமே போதும். நாடாளுமன்ற அவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவை இல்லை. இந்த வாய்ப்பை பா.ஜ.க நிச்சயம் நழுவ விடாது.

எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட, தேச நலனே முக்கியம் என பா.ஜ.க காரணம் கூறினாலும், உண்மையான பின்னணி என்பது Article 370 யை ரத்து செய்யத்தான் என்கிறார்கள் அரசியல் விமர்ச்சகர்கள். ஏனெனில் இதற்கு முன்பு, காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டு, மக்கள் அனைவரும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட போது, தேச நலன் கருதி பா.ஜ.க அரசை கவிழ்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் Article 370 யை அவ்வளவு இலகுவாக பா.ஜ.க ரத்து செய்து விடாது. தீவிரவாதம் அதிகரித்து விட்டதாக கூறி, ராணுவம் மூலம் அம்மக்களை ஒடுக்கி நிர்கதியாக்கிய பின்னரே பா.ஜ.க இதை செய்யும். சாதாரண மக்கள் மனதில் Article 370 யை ரத்து செய்வதில் தவறில்லை என்று நினைக்கும் அளவிற்கு காஷ்மீரை வில்லனாக சித்தரிக்க துவங்கும் பா.ஜ.க.

இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாம் சுதந்திர காஷ்மீர் தான் வேண்டும் என்ற போராட்டம்

காஷ்மீர் என்பது பாகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்து, இந்தியாவை எதிர்க்கிறது என்பது தான் ஆர்.எஸ்.எஸ் உடைய பிரச்சாரம். ஆனால் எதார்த்த கல நிலவரம் என்பது வேறு விதமாக இருக்கிறது. அம்மக்கள் இந்தியாவை எந்த அளவிற்கு எதிர்க்கிறார்களோ அதே போல தான் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். அம்மக்களின் கோரிக்கை என்பது தனி நாடு தான். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அரசியல் தலையீடுகளால் அங்கு தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நடந்தேறி வருகிறது.

அமர்நாத் யாத்ரிகர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் காஷ்மீர் மக்கள்

அமர்நாத் யாத்திரைக்காக இந்து பக்தர்கள் சென்ற பேருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் விபத்திற்குள்ளானது. அப்போது, உயிரை பணயம் வைத்து அம்மக்களை காப்பாற்றிய சம்பவம் நாம் அனைவரும் அறிவோம்.

இதிலிருந்தே அம்மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் அறியலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெறுப்பு அரசியலுக்காக காஷ்மீர் பலியாக்கப்பட்டு வருவதே எதார்த்த உண்மை.

கவர்னர் ஆட்சியின் மூலம் காஷ்மீர் மீதான இந்துத்துவா அரசியலிலிருந்து, அம்மக்கள் மீள பல வருடங்கள் ஆகும் என்பதே அரசியல் விமர்ச்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here