காஷ்மீர் தாக்குதல்: முன்கூட்டியே உளவுத் துறை எச்சரித்தும் அலட்சியப்படுத்தினாரா மோடி

0
4725
views

காஷ்மீர் மாநிலம் புல்வாமா நெடுஞ்சாலையில் CRPF ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கார் மூலம் குண்டு வெடிப்பு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 40 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.

இந்த கோழைத் தனமான தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இது போன்ற தாக்குதல் காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மீது நடைபெறப்போகிறது என்று பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுவதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்ற தாக்குதலை சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்திய இதே அமைப்பு, விரைவில் காஷ்மீரிலும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்தது. இதை சுட்டிக்காட்டி காஷ்மீர் மாநில உளவுத் துறை, மத்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

புது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த தாக்குதல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் கொடூரம் எந்த அளவுக்கு என்றால், தாக்கப்பட்ட பேருந்து இப்போது இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகளாக மட்டுமே உள்ளது.

இதில் 44 ரிசர்வ் போலீஸ் படையினர் இருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காவல் பணியில் ஈடுபட வீரர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உளவுத் துறை முன் கூட்டிய எச்சரிக்கை விடுத்தும் மோடி அரசு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் மட்டும் பதன் கோட், உரி, புல்வாமா என 3 முறை ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது பாதுகாப்பு அமைச்சகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

காஷ்மீர் போன்ற எல்லைப் பகுதியில் மாநில ஆட்சி என்பது மிக முக்கியமானது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஆட்சியை கவிழ்த்த பாஜக, மீண்டும் தேர்தலை நடத்தி ஒரு நிலையான ஆட்சியை அங்கு ஏற்படுத்தாமல் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. அரசு நிர்வாகம் முறையாக இல்லாததும், உளவுத் துறை எச்சரிக்கை கண்டுகொள்ளாமல் போனதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மோடி ஆட்சியில் ராணுவ முகாம்கள் மீது நடந்த தாக்குதல்கள்:

கடந்த 2016 ஜனவரி மாதம் பதன்கோட் ராணுவ விமான படைத்தளத்தில் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்திய போது 7 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

கடந்த 2016 செப்டம்பர் மாதம் உரி பகுதியில் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் இறந்து போனார்கள்.

தற்போது புல்வாமா பகுதியில் 40 வீரர்கள் இறந்துள்ளனர். உளவுத் துறை எச்சரிக்கை விடுத்த பின்பும், 40 உயிர்களை இழந்திருப்பது துரதிஷ்டவசமானது. விரைவில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதிலும், பிரச்சாரம் செய்வதிலும், பாஜக அரசு காட்டும் ஈடுபாட்டை, உளவுத் துறை கொடுத்த எச்சரிக்கையில் காட்டியிருந்தால் நம் ராணுவ வீரர்களின் உயிர் அநியாயமாக போயிருக்காது.

இரவு பகல் பாராமல் நாட்டிற்காக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் அலட்சியமாக மோடி அரசு நடந்திருப்பதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் சன்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் இறந்தார்கள்.

நம் ராணுவ வீரர்கள் நடத்திய Surgical strike யை வைத்து அரசியல் செய்தவர்கள், அந்த ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க தவறிவிட்டார்கள் என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பதன்கோட்டில் நடத்திய தாக்குதலிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருந்தால் உரி, புல்வாமா தாக்குதலை நாம் தவிர்த்திருக்க முடியும்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த  இரங்கல். இனியாவது ராணுவ வீரர்கள் மீது மோடி அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Follow us:

Facebook- https://www.facebook.com/goodnews.emagazine/

YouTube: https://www.youtube.com/channel/UCNiSzUi3bHW4VuJDVHYL6ow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here