இப்தார் விருந்தளிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்

0
2009
views
இப்தார் விருந்தளிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்

பாகிஸ்தான் என்றாலே நம் சிந்தனைக்கு வருவது, அது ஒரு தீவிரவாத நாடு. இந்தியாவின் எதிரி நாடு என்பது தான். சாதாரண கிரிக்கெட் போட்டியில் கூட இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் தேசபக்தியோடு பார்க்க பழகிவிட்டோம். தற்போது இந்தியாவை ஆளும் பா.ஜ.கட்சியோ, இங்கு நாங்கள் தோற்றால், பாகிஸ்தானில் வெடி வெடித்து கொண்டாடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நம் பிரதமர் கூட, குஜராத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று பிரச்சாரம் செய்தார். அந்த அளவிற்கு பாகிஸ்தான் என்றாலே, நம் மனதில் வெறுப்பை விதைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

ஆனால் அந்த நாட்டில் நடந்து வரும் சம்பவங்களோ, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த நிகழ்வுகளை பற்றி கேட்கும் போது, எந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் நம் தேசபக்தியை வியாபாரமாக்கி, ஓட்டாக மாற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால் தான், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், இன்னபிற சிறுபான்மையினரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், இதுவே பாகிஸ்தானில் அப்படி இருக்க முடியாது. அங்கு இந்துக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்றும், தங்களை தேச பக்தர்களாக காட்டிகொள்ளும் இந்துத்துவ வாதிகள் கூறுவதை அடிக்கடி கேட்டும், அதை சிலர் நம்பியும் வருகிறார்கள்.

ஆனால், நம்மை விட பாகிஸ்தானில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை பாகிஸ்தானில் உள்ள மிதின் நகர் நமக்கு உணர்த்துக்கிறது.

சிந்து சமவெளியின் தார் பாலைவனத்தில் உள்ள ஊர் தான் மிதின் நகர். இங்கு புகழ்பெற்ற காசிம் ஷா பள்ளிவாசல் இருந்து வருகிறது.

இங்கு நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்காக, இஃப்தார் விருந்து தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், நோன்பையும் கடைபிடித்து வருகிறார்கள் இந்துக்கள். இதன் பராமரிப்பாளர் மோகன்லால் மாலி தனது இளம் வயது முதல் நோன்பு கடைபிடித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது,

எனது பெற்றோர் அன்பை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இது உன் மாமா, இது உன் தாத்தா, இது உன் அண்ணன் தம்பி என்றே சொல்லிக் கொடுத்தார்கள். இதில் இந்து, சீக்கியர், முஸ்லிம் என பிரித்துப் பார்க்க சொல்லித் தரவில்லை. இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம் என்றார்.

ரமலான் நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழிபாட்டு தளங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

காசிம் ஷா பள்ளிவாசலுக்கு வந்திருந்த மது மாலி என்கிற இந்து பக்தரிடம் பேசிய போது,

இந்துக்களும், முஸ்லிம்களும் இந்த பள்ளிவாசலுக்கு வருவார்கள். காசிம் ஷா ஒரு முஸ்லிம். அவரை வழிபடும் நாங்கள் அவரின் சமூகத்தினரை மதிக்காமல் எப்படி இருப்போம். இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அமர்ந்தே சாப்பிடுவோம்.

மிதின் நகரில் உள்ள மாலி சமூகத்தால் ஆன்மீக தலைவராக காசிம் ஷா போற்றப்படுகிறார். ரமலான் நோன்பு பெருநாள் மட்டுமல்ல பக்ரித் பெருநாளின் போதும் இஸ்லாமியர்களோடு இணைந்தே இங்கு இருக்கும் இந்துக்கள் கொண்டாடினார்கள்.

இதே போல, தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளை இந்துக்களோடு சேர்ந்து இஸ்லாமியர்கள் கொண்டாடி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இனி பாகிஸ்தான் குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்தால் அதை புறக்கணிப்போம். மிதின் நகரில் உள்ள மக்களை போல இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்ற வேறுபாடு இல்லாமல் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ்வோம்.

இவர் இந்து, இவர் கிறிஸ்துவர், இவர் முஸ்லிம் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தராமல் இவர் உன் அண்ணன், மாமா, மச்சான் என்று சொல்லிக் கொடுங்கள். மத நல்லிணக்கத்தை பேணும் பாகிஸ்தான் மிதின் நகர் நம் ஒவ்வொருவருக்கும் ஓர் முன் உதாரணம்.

நம்மிடையே இருக்கும் வழிபாடு முறை வேறாக இருக்கலாம். ஆனால் நம் அனைவரும் அண்ணன் தம்பிகள் தான். மிதின் நகரின் மக்களை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எல்லோரும் மத நல்லிணக்கத்தை பேண வழிவகுப்போம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here