வீட்டிற்கு ஒரு நொச்சி செடி கட்டாயம் ஏன்?

0
1068
views

ஒரு தாவரம் குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நன்மை பயக்கும் குணாதீசியம் கொண்டது என்றால் அது நொச்சி செடி தான். பழங்கால வைத்திய முறையில் முன்னணியில் இருந்த செடி இன்று நகரம் மட்டுமல்லாமல் கிராமத்திலும் வளர்க்கப் படாமல் போனதன் விளைவு தான் இன்று கொசுக்களினால் கூட நோய் பரவி வருகிறது.

உலக அளவில் நொச்சி செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வெப்ப நிலை மண்டலங்களில் நன்றாக வளரக்கூடியது இந்த நொச்சி செடி.

இன்று நம் ஒவ்வொரு வீடுகளிலும் இரவு நேரங்களில் மின்விளக்கை எரிய விடுவதை விட, கொசு சுருளையும், லிக்யூடையும் தான் அதிக நேரம் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு கொசு சுருள் மூலம் உருவாகும் சாம்பலின் அளவு என்பது, 75 முதல் 135 சிகரெட்டை எரித்தால் வரும் சாம்பலின் அளவிற்கு சமம் என்பது தெரியாமலேயே நாம் அதை பயன்படுத்தி வருகிறோம். எத்தகைய கேடு அது..

நொச்சி செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உள்ளது. சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களை பரப்புகிற ஏ.டி.எஸ் கொசுக்களுக்கு நொச்சி செடியின் இலையின் வாசனையே ஆகாது. அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய இந்த செடியை ஆடு, மாடு கூட சாப்பிடாது. இதனால் பண்டைய தமிழர்கள் தங்களது விளைநிலங்களுக்கு நொச்சி செடியை கொண்டே வேலி அமைத்தனர்.

சங்ககாலத்தில் உறையூரை தலைநகராக கொண்டு வந்த தித்தன் என்ற சோழ மன்னன் தன்னுடைய நாட்டின் எல்லைகளுக்கு நொச்சி வேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சிற்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால், கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்கால வைத்தியம். நொச்சி வேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைத் தீரும். மூட்டுவலி குறையும்.

“வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்” என்கிற நொச்சி வகை பெண்களுக்கு நல்லது. மாதவிடாய், கர்ப்பகால பிரச்சனைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஒடி (PCOD) எனப்படும் சினைப்பை நீர்கட்டிகள் போன்றவற்றிற்கு நல்லது.

நொச்சி இலைகளில் இருந்து வாலடைல் என்னும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக்கூடியது. இந்த எண்ணெய் கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது.

இத்துணை ஆரோக்கியம் உள்ள நொச்சி செடியை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். நகரத்தில் வசிப்பவர்கள் கூட இச்செடியை வளர்க்கலாம். இது மரமாகவோ, அல்லது வேரோ ஆழமாக பிடித்து வளராது. எனவே ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் நொச்சி செடியை வளருங்கள்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here