குரங்கு ராஜா | தற்கொலை செய்யப் போனவருக்கு இறைவன் தந்த வரம்

0
981
views

இவர் என்ன டார்சானா, குரங்கா, ஏலியனா என்று இவரை பார்ப்பவர்கள் எல்லோரும் கூறுவார்கள். இவர் ஸ்பைடர்மேன் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்றும் மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

யார் இவர்?

வீடியோ:

இவர் தான் குரங்கு ராஜா. உண்மையான பெயர் ஜோதி ராஜு. இவர் ஒரு professional climber. 29 வயதாகும் ஜோதி ராஜு பெரிய பாறைகள், மலைகள் ஏன் செங்குத்தான சுவர்களின் மீது கூட எந்த உதவியுமின்றி ஏறுகிறார். ஒரு குரங்கு எப்படி வேகமாக ஏறுமோ அதே போன்று இவரும் ஏறுகிறார்.

கால்களின் உதவியுடன் பெரும் உச்சியிலிருந்து தலைகீழாக தொங்குவது. விழுந்தால் மரணம் என்ற செங்குத்தான பகுதியில் கூட, தன் கைகளின் உதவியுடன் 360 டிகிரி தன் உடலை சுற்றுகிறார் ஜோதி. செங்குத்தான சுவரில் தலைகீழாக 90 டிகிரியில் வெறும் கையை மட்டும் ஊன்றி நிற்கிறார்.

இந்த திறமை இவருக்கு எப்படி வந்தது என்று பார்த்தால் மிகவும் விநோதமாக இருக்கும். வாழ்கையில் எந்த பிடிப்பும் இல்லாத ஜோதி ராஜு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மலையில் இருந்து குதித்து செத்து விடலாம் என்று முடிவு செய்து, பெரிய மலையை தேடி அலைந்துள்ளார். இறுதியில் தான் தற்கொலை செய்து கொள்ளும் இடத்தை பார்த்த ஜோதி ராஜுவுக்கு, அந்த மலையை சுற்றி சுற்றி வந்தும் அதன் மீது ஏறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன மலை என்று யோசிக்கலாம்.

அது ஒரு செங்குத்தான மலை. அந்த மலையின் மீது ஏறி, பின்பு அங்கிருந்து குதித்து செத்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். செங்குத்தான அந்த மலையில் எப்படி ஏறப்போகிறோம் என்று யோசித்து கொண்டிருந்த ராஜு, அந்த மலையின் மீது ஒரு குரங்கு ஏறுவதை பார்த்திருக்கிறார். அதனை பார்த்த ஜோதி ராஜுவுக்கு ஒரு ஐடியா வந்துள்ளது. நாம் ஏன் குரங்கைப் போல மலையின் மீது ஏறக்கூடாது என்று உடனே தனது கைகளில் மண்ணைப் பூசிக்கொண்ட ஜோதி ராஜு, மலையின் மீது குரங்கு ஏறுவதைப் போல ஏறியுள்ளார். வெற்றிகரமாக மலையின் உச்சிக்கு சென்ற ஜோதி ராஜுவுக்கு, பயங்கரமான கை வலி ஏற்பட்டுள்ளது.

சரி, கஷ்டப்பட்டு மலை ஏறியாச்சு, இனி குதித்து செத்து விட வேண்டியது தான் என்று திரும்பி பார்த்த ஜோதி ராஜுவுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. மலையின் கீழே இருந்த பொதுமக்கள் அனைவரும், ஜோதி ராஜு மலை ஏறுவதை பார்த்து ஆச்சரியத்துடன் கோசம் எழுப்பி, கைதட்டல் விசில் என உற்சாகப்படுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல், இவரின் திறமையை கரகோஷங்களை எழுப்பி உள்ளார்கள் மக்களும், சுற்றுலா பயணிகளும். குரங்கைப் போலவே ஒரு மனிதன் ஏறுகிறார். இவர் ஒரு குரங்கு மனிதன் என்று மாறி மாறி கோசம் எழுப்பி உள்ளனர் மக்கள்.

மக்கள் வெளிப்படுத்திய ஊக்கத்தை கண்டு, தன்னுள் இத்தகைய திறமை உள்ளதை உணர்ந்த ஜோதி ராஜு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு, அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குசிப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளார்.

சாதாரணமாக மலை ஏறுபவர்கள் தங்களுடன் எல்லா விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் வைத்திருப்பார்கள். உதாரணமாக, ஹெல்மட், நீளமான கயிறுகள், கொக்கிகள், என பல்வேறு கருவிகளை தங்களுடன் வைத்திருப்பார்கள். ஆனால் ஜோதி ராஜுவுக்கு இது எதுவுமே தேவைப்படவில்லை. இவர் தனது கைகளின் மீது நம்பிக்கை வைக்கிறார். இவரை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவதற்கு முக்கிய காரணமே, இவர் எந்த கருவியையும் பயன்படுத்தாமலேயே மலையின் மீது ஏறுகிறார். அது தான் இவரை உலகறிய செய்துள்ளது.

இவரின் இந்த சாகசத்தை பார்க்கும் மக்கள், தங்களால் இயன்ற பணத்தை இவரிடம் தருகிறார்கள். இவரின் சாதனை இதோடு நின்று விடவில்லை. இந்தியாவுடைய நீளமான அருவி என்று இரண்டாம் இடத்தில் இருக்கும் கர்நாடகாவின் ஜோக் அருவியின் மலை உச்சி மீது இவர் ஏறியுள்ளார். கிட்டத்தட்ட 630 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் வெறும் கைகளின் உதவியுடன் மட்டுமே ஏறி சாதனை படைத்துள்ளார் ஜோதி ராஜு.

இது மட்டுமல்ல, மலையின் மீது ஏறுவதில் இவரோடு குரங்கு போட்டிபோட்டால் கூட குரங்கே தோற்றுப்போகும். அந்த அளவிற்கு வேகமாக மலை ஏறுகிறார். மலை ஏறுவது என்பது குரங்குகளுக்கு மிக மிக எளிதானது. அவைகளின் கால்களின் அமைப்பு அழுத்தம் கொடுத்து நகர வசதியோடு இருக்கும். ஆனால் மனிதர்களின் கால்கள் அப்படிப்பட்டதல்ல. அழுத்தம் கொடுத்து அவ்வளவு எளிதாக எந்த பிடிமானமும் இல்லாமல் ஏறிவிட முடியாது. அதுமட்டுமல்ல, குரங்குகளை விட மனிதனின் எடை அதிகம். எனவே மலை ஏறுவது என்பது நடக்காத காரியம். ஆனால் ஜோதி ராஜு ஏறுகிறார். இது போன்று ஏறுவதற்கு உடல் வலிமையும், மன வலிமையும் வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஏறுபவருக்கு அடிபடமலா இருந்திருக்கும் என்று நினைக்கலாம். இது போன்று சாகசங்களை செய்யும் ஜோதி ராஜுவுக்கும் அடிபட்டுள்ளது. இதுவரை 9 முறை பெரும் உயரத்தில் இருந்து கீழே விழுந்து எலும்புகள் உடைந்துள்ளது. இவரின் உடலுக்குள் நான்கு ராடுகள் ஆபரேசன் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்படி மோசமாக அடிபட்ட பின்பும், தனது சாகசத்தை நிறுத்தாமல் செய்து வந்துள்ளார் குரங்கு ராஜா.

இவர் மலையின் மீது மட்டுமல்ல, உயரமான கட்டிடங்கள் மீதும் ஏறுகிறார். துபாயில் உள்ள புஜ் கலிபா கட்டிடத்தின் மீது ஏற வேண்டும் என்பதே இவரின் லட்சியம்.2722 அடி உயரம் கொண்ட புஜ் கலிபா கட்டிடத்தின் மீது ஏறி சாதனை படைக்க வாழ்த்துவோம் நமது குரங்கு அரசனை.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here