ஆம்புலன்ஸ் வாங்க இலங்கைக்கு 23 மில்லியன் டாலர் வழங்கிய மோடி

சொந்த நாட்டில் ஆம்புலன்ஸ் இல்லாமல், தினசரி அவலங்கள் நடக்கும் போது வெளிநாட்டிற்கு ஆம்புலன்ஸ் வாங்க பணம் தருவது தேவை தானா? ஆம்புலன்ஸ் இல்லாமல் உலக அளவில் இந்தியாவை தலைகுனிய செய்த நிகழ்வுகள் அதிகம் நடந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான்.

0
1877
views

இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக பிரதமர் நரேந்திர மோடி 23 மில்லியன் டாலர் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் அந்நாட்டு அமைச்சர் ஹர்ஷா டி சில்வா.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, இலங்கைக்கு இலவச ஆம்புலன்ஸ் இயக்க உதவுவதாக உறுதி அளித்தார். முதற்கட்டமாக 7.6 மில்லியன் டாலர் பணம் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு தரப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக 15.2 மில்லியன் டாலர் பணத்தை இலங்கைக்கு கொடுத்துள்ளது இந்தியா. இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை பொருளாதார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இலங்கைக்கு நான் ஏதாவது செய்ய நினைக்கிறேன் என்றார். அப்போது இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் இயக்க உதவி செய்யுங்கள் என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார். தற்போது ஆம்புலன்ஸ் இயக்க இந்தியா 23 மில்லியன் டாலர் தந்துள்ளது என்றார்.

மேலும் கூறுகையில்,

இந்திய மக்களால் இலவச ஆம்புலன்ஸ் சேவை இலங்கை மக்களுக்கு கிடைக்கப் போகிறது. ஏற்கனவே இந்திய அரசு வடக்கு மாகாணத்தில் 50,000 வீடுகளை கட்டிகொடுத்தது. 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த போதும், எங்கள் நாட்டை சீரமைக்க இந்தியா பெரிதும் உதவியது. இந்த பரிசை எங்களுக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் சில்வா.

இந்நிலையில் சொந்த நாட்டில் உள்ள மக்கள் ஆம்புலன்ஸ் இன்றி அவதிப்படும் போது, வெளிநாட்டிற்கு ஆம்புலன்ஸ் வாங்க பணம் ஒதுக்கும் பிரதமர் மோடியின் செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்தியாவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் அவதிப்பட்ட மக்களின் நிலையை தொகுக்குகிறது இக்கட்டுரை.

நிகழ்வு 1:

கடந்த மே 8, 2018 யில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை மறுத்ததால், மனைவியை தனது தோளிலேயே சுமந்து சென்ற அவலம் நடந்தது.

நிகழ்வு 2:

மே 4, 2018, அதே உ.பி யில் இருக்கும் கன்னோஜ் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், மனைவியை 9 கிலோமீட்டர் தூரம் வரை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு 3:

கடந்த ஜூன் மாதம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பெண்ணின் உறவினர் மோட்டார் சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்பெணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு, சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

நிகழ்வு 4:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை கிராம மக்கள் தூளியில் வைத்து 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு 5:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் வருடம், இறந்த தனது தாயை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வராததால், 12 கி.மீ தூரத்திற்கு பைக்கில் எடுத்துச் சென்றார்கள் அவருடைய இரு மகன்கள்.

நிகழ்வு 6:

ஓடிஸா மாநிலம், காலநதி மாவட்டத்தில் டிபி நோயால் சிகிச்சை பலனின்றி இறந்த மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், தனது மனைவியின் சேலையால் அவரது உடலை சுற்றி, தனது தோளில் சுமந்து சென்றார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

நிகழ்வு 7:

கடந்த ஏப்ரல் 7, 2018 யில், உ.பி மாநிலத்தில் உள்ள ஆக்ரா மருத்துவ கல்லூரியில், மூச்சு திணறல் ஏற்பட்ட மூத்தாட்டியை வார்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததாலும், மருத்துவ நிர்வாகம் உதவ மறுத்ததாலும், ஆக்சிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டு தனது தாயிற்கு ஆக்சிஜன் செலுத்தினார் அவருடைய மகன். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு 8:

உ.பி மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் இறந்த தனது குழந்தையை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் இரவு முழுவதும் தாய் பரிதவித்த சம்பவம் நடைபெற்றது.

நிகழ்வு 9:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் இருதய நோயால் இறந்து போன தனது மகளின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், பைக்கில் தனது மகளை தன் உடலோடு கட்டி எடுத்துச் சென்ற அவலம் நடந்தேறியது.

நிகழ்வு 10:

உ.பி மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த மூர்த்தி. புற்றுநோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த மூர்த்தியின் உடல்நிலை திடிரென மோசமடைந்தது. இதனால் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறினார். அதற்கு ஆக்சிஜன் பொருத்திய ஆம்புலன்ஸ் தேவை. ஆனால் ஆம்புலன்ஸ் இல்லாததால் அவர் மரணித்துவிட்டார்.

மேற்கண்ட நிகழ்வுகள் நமது நாட்டில் நடைபெற்ற சிறு உதாரணங்களே. ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் உயிரிழந்தவர்கள் அனைவரையும் குறிப்பிட்டால் எழுதிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நமது நாட்டில் உள்ளது. குறிப்பாக இச்சம்வங்கள் அதிகம் நடைபெறுவது உ.பி மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான்.

சொந்த நாட்டு மக்கள் ஆம்புலன்ஸ் இன்றி அவதிப்பட்டு வரும் சூழலில், இலங்கை நாட்டிற்கு 23 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? மேலும் ஆம்புலன்ஸ் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டது மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தான், நாடு முழுவதும் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருந்த போது, கென்யா நாட்டு விவசாயிகளுக்கு 683 கோடி ரூபாயை வழங்கினார் மோடி. இந்தியாவில் எது நடந்தாலும் கருத்துக் கூறாமல் அமைதி காத்து, அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடி அவர்கள், சொந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்ச்சகர்கள். இந்தியாவில் புல்லட் ரயில் விடும் மோடி அவர்கள், இந்தியாவில் ஆம்புலன்ஸ் விட்டால் நன்றாக இருக்கும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here