ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு | மாற்றான் போக்குடன் மோடி அரசு

0
441
views

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது காஷ்மீர் மாநிலம். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் ஆண்டிற்கு லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளை நம்பியே காஷ்மீர் மாநில மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பருவநிலை மாறுபாடு காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் நிர்வாக வசதிக்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் என்று இரண்டு தலைநகரை வைத்துள்ளது இந்தியா. ஆனால் ஒரு தலைநகரிற்கு வெண்ணெய்யும், மற்றொரு தலைநகரிற்கு சுண்ணாம்பும் என்ற மாற்றான் போக்குடன் செயல்பட்டு வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. அதற்கு ஒரு மத ரீதியான அரசியலும் காரணமாக உள்ளது.

ஜம்மு பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் மோடி அரசு, காஷ்மீர் பகுதிக்கு மட்டும் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை. அதற்கு காரணம் ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் இருப்பதால் மாற்றான்போக்கை வெளிப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

ஜம்மு விற்கு இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம் மோடி அரசால் 2016 யில் அறிவிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் பகுதியில் எந்த கல்வி நிறுவனங்களையும் துவங்கவில்லை. இதற்கு காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜம்மு பகுதியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வென்றது பா.ஜ.க. ஜம்மு பகுதியில் 61% மக்கள் இந்துக்களும், 33% மக்கள் இஸ்லாமியர்களும், மற்றவர்கள் சீக்கியர்களும் வசிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் பகுதியை நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டதை தற்போது மத ரீதியாக பிரித்து பார்க்கும் அரசியல் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜம்மு பகுதியில் வளர்ச்சி பணிகளும், காஷ்மீர் பகுதியில் ராணுவ கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பாகுபாட்டால் அந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, கடந்த ஆண்டில் மட்டும் ஜம்முவிற்கு 1.5 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ஆனால் காஷ்மீருக்கும் வெறும் 8.5 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 2017 ஆண்டில் கூட 11 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்துள்ளனர். ஆனால் இந்த வருடம் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது குறித்து சுற்றுலா துறை அதிகாரி கூறும் போது, ஜம்மு வில் பல கோயில்கள் உள்ளன. இயற்கை எழில்மிகு இடங்கள் உள்ளன. அதனால் இங்கு அதிகம் வருகிறார்கள். ஆனால் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதால் அங்கு சென்று தங்குவதற்கு மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறினார்.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலும், கல் வீச்சு சம்பவங்களும் சுற்றுலா பயணிகள் வருகை குறைய காரணமாக அரசு கூறினாலும், அதிகமான ராணுவ வீரர்கள் குவிப்பு, ராணுவ வீரர்களின் கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள், அடிக்கடி நடக்கும் ராணுவ வீரர்களின் துப்பாக்கி சூடுகள், ஆங்காங்கே இருக்கும் தடுப்பு பரிசோதனை மையங்கள் என்று ஒட்டுமொத்த காஷ்மீர் நகரும் ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் அங்கு நிம்மதியை தேடி சுற்றுலா வரும் பயணிகள் வருவதில்லை.

பயங்கரவாத தாக்குதல் என்பது காஷ்மீர் பகுதியில் மட்டும் நடைபெறுவதில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி, ஜம்மு பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று பலத்த சேதம் உருவானது. அதே போல உரி தாக்குதலும் நடந்தேறியது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெறதான் செய்கிறது. ஆனால் காஷ்மீருக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஜம்முவிற்கு கிடையாது.

காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதையும் ஆய்வு செய்த போது, ஜம்மு வில் உள்ள இஸ்லாமியர்கள் மட்டும் ஏன் கல்லெறி சம்பவங்களில் ஈடுபடவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமான அளவில் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது, எதிர்வினை காட்டுவது வரலாறில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரை போலவே காஷ்மீர் பகுதிகளிலும் ஆயுத சிறப்பு சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தை வைத்து எவரையும் எந்த ஆவணமும் ஆதாரமும் இன்றி கைது செய்யும் அதிகாரம் ராணுவதிற்கு உள்ளது. இப்படி காஷ்மீர் இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுவதும், பலர் என்கவுண்டர் செய்யப்படுவதும், ராணுவத்தால் காஷ்மீர் பெண்கள் கற்பழிக்கபடுவதும் தொடர்கதையாக நடந்து வருவதால் தான், அம்மக்களில் இருக்கும் ஒரு குழு ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்லெறி சம்பவங்களை நடத்தி வருகிறது. ராணுவமும் பெல்லட் குண்டுகளால் அவர்களை தாக்குகிறது.

நம்மில் பலர் இந்தியாவை விட்டு பிரிய வேண்டும் என்பதற்காக கல்லெறி சம்பவங்களை நடத்துகிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அங்குள்ள மக்களை சந்திக்கும் போது தான், அவர்கள் நிம்மதியாக வாழ ஆயுத சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதற்காகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அறிய முடிந்தது.

மணிப்பூரில் இரோம் சர்மிளா பல ஆண்டுகள் இருந்த உண்ணாவிரதம் ராணுவம் அம்மாநில பெண்களை மானபங்கமும், அடக்கு முறைகளையும் ஏவியதை கண்டித்து தான் நடந்தது.

தீர்வு என்ன?

இப்படி கல்லெறி சம்பவங்களில் நடைபெறும் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுவதால் அம்மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைவதும், மாணவர்கள் கல்வியை இழக்கும் சூழலும் உருவாவதால் பிரச்சனை மேலும் மேலும் பெரிதாகிக்கொண்டே தான் போகும் என்பதை உணர்ந்து, அந்த பகுதியில் கல்வி நிறுவனங்களை உருவாக்கியும், சிறப்பு ஆயுத சட்டங்களை ரத்து செய்வதன் மூலமும் அந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் மத்திய அரசோ ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும் மற்றொரு கண்ணிற்கு சுண்ணாம்பும் தருகிறது. அம்மாநில மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, அரசியல் காரணங்களுக்காக அம்மாநில அரசை கலைத்து மத ரீதியான அரசியலை புகுத்தி வருகிறது மத்திய அரசு.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here