கேள்விகளை கண்டு மிரளுபவர் ராகுல் அல்ல மோடி தான்

0
469
views
  • துபாயில் ஒரு சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நேரலையை நிறுத்தினார் ராகுல் என்று ஒரு போலிச் செய்தியை இந்துத்துவா பத்திரிக்கைகள் மற்றும் சிந்தனையாளர்கள் பரப்பினார்கள். ஒரு சிறுமியின் கேள்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை என்று தம்பட்டம் அடித்தனர். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அங்கு நடைபெற வில்லை என்றவுடன் தினகரன் நாளிதழ் மன்னிப்பு கேட்டது. ஆனால் தினமலர் அதுகுறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கேள்விகளை கண்டு அஞ்சுபவர் ராகுலா அல்லது மோடியா என்று வரலாற்று பக்கங்களை திருப்பிப் பார்க்கும் போது, பத்திரிக்கையாளர்களை கண்டும், கேள்விகளை கண்டும் மிரளுபவராக மோடியே உள்ளார்.

மோடி பிரதமர் பதவியை ஏற்று 5 ஆண்டுகள் முடிவு பெறவுள்ள நிலையில் இதுவரை ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை கூட அவர் நடத்தியதில்லை. ஆனால் 900 க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். ஏன் பிரதமர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்று எல்லா மீடியாக்களும் விவாதமே நடத்தின. அத்திபூத்தால் போல மோடியை பத்திரிக்கையாளர்கள் சந்தித்து கேட்ட கேள்விகளையும், அதற்கு மோடி அளித்த பதில்கள் பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை.

மோடி vs கேள்விகள்:

2007 ஆம் ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கரன் தாபர் அவர்கள் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியை அகமதாபாத்தில் வைத்து பேட்டி எடுத்தார். சி.என்.என் சார்பாக எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் குஜராத் கலவரம் தொடர்பாக கரன் தாபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார் மோடி.

குஜராத் கலவரம் தொடர்பாக கரன் தாபர் தொடர்ச்சியாக கேள்வி கேட்க, மோடியின் முகம் மாறியது. கண்கள் சுருங்கியது. நெழிய ஆரம்பித்த மோடி, ஒரு சமயத்தில் பேட்டியில் இருந்து நழுவ நினைத்தார். முதல்வன் பட பாணியில் இருந்தது அந்த பேட்டி. பேட்டி எடுத்துக்கொண்டிருந்த கேமராமேனை பார்த்து கேமராவை ஆஃப் செய்யுங்கள் என்றார். கரன் தாபர் ஏன் என கேட்க, எனக்கு ரெஸ்ட் வேண்டும் என்கிறார். பின்பு தண்ணீர் வேண்டும் என்று தண்ணீர் குடிக்கிறார். தொடர்ச்சியாக கரன் தாபர் கேள்வி எழுப்ப, மைக்கை கழற்றிக் கொடுத்துவிட்டு பேட்டியை விட்டு விலகினார் மோடி. இது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. அன்று நடந்த சம்பவம் குறித்து தனது டெவில் அட்வகேட் புத்தக்கத்தில் பதிவு செய்தார் கரன் தாபர்.

முதல்வராக இருந்த போது தான் கேள்விகளை எதிர்கொள்ள தயங்குறார் என்றால் பிரதமரான பின்பும் அது தொடர்ந்தது.

2015 ஜூலை மாதம், இந்திய பாராளுமன்றத்திற்கு முன்பு மோடி வருவதை பார்த்த பத்திர்ககையாளர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினர். அப்போது அவருடன் பா.ஜ.க எம்.பி க்கள் இருந்தனர். தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்த பத்திரிக்கையாளர்களுக்கு மோடி எந்த பதிலும் அளிக்க வில்லை. மாறாக தனக்கு எதுவுமே கேட்காதது போல அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார் மோடி. ஆனால் திடிரென ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விக்கு மட்டும் பதில் அளித்த மோடி, அதன் பின்பு வேறு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், உடனே திரும்பிச் சென்றார்.

தன்னிடம் கேட்கப் போகிற கேள்விகளை முன்பே கூறி இருந்தால் மட்டுமே பதில் அளிப்பார் மோடி என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக ஒரே ஒரு பத்திரிக்கையாளருக்கு மட்டும் பதில் அளித்த மோடி எந்த பத்திரிக்கையாளருக்கும் பதில் அளிக்க வில்லை.

2015 நவம்பர் மாதம், அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார் மோடி. அப்போது பிரதமராக இருந்த டேவிட் கேமரூனும், பிரதமர் மோடியும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்பு பத்திரிக்கையாளரை சந்தித்தனர். பத்திரிக்கையாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு ஹெட்செட் மோடிக்கு வழங்கப்பட்டது.

அப்போது பி.பி.சி மற்றும் தி கார்டியன் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி இந்திய மீடியாக்களை அலற விட்டது.

மோடியை நோக்கி கேள்வி எழுப்பிய பிபிசி பத்திரிக்கையாளர், “மோடி அவர்களே ஏன் தற்போது இந்தியா சகிப்பின்மையை இழந்து வருகிறது” என்று கேள்வி எழுப்ப நீண்ட நேரம் யோசித்த மோடி அவர்கள் இந்தியில் பதில் கூறினார். “இந்தியா புத்தர் வாழ்ந்த நாடு, காந்தி வாழ்ந்த நாடு. இங்கு ஒரு போதும் வன்முறைக்கு இடம் தரமாட்டோம், அவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்” என்றார். தற்போது பசுகுண்டர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை ஊர் அறியும்.

பின்பு தி கார்டியன் பத்திரிக்கையாளர் கேமரூனை பார்த்து, “இவர் குஜராத்தில் இனப்படுகொலை செய்ததற்காக இங்கிலாந்து அரசு, இங்கிலாந்தில் நுழைய இவருக்கு தடை விதித்திருந்தது. தற்போது இவரை வரவேற்கும் போது அதை உணர்ந்தீர்களா?” என்று கேட்டார். இந்திய மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு நபரை வரவேற்ப்பது நம் கடமை என்று முடித்துகொண்டார் கேமரூன்.

உடனே மோடியை பார்த்த அதே பத்திரிக்கையாளர், “நாளை wembley மைதானத்தில் உங்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு தரப்போகிறார்கள். அங்கு பல போராட்டக்காரர்களும் இருக்கிறார்கள். ஒரு இனப்படுகொலை நடத்திய நீங்கள் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவராக என்ன தகுதி உள்ளது என்று உங்களை நோக்கி அவர்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு இந்தியில் பதில் அளித்த மோடி, நான் 2003 ஆம் ஆண்டே இங்கு வந்துள்ளேன். எனக்கு எந்த தடையும் இங்கு இல்லை. நீங்கள் நிலைபாட்டை மாற்றிகொள்ளுங்கள் என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் விடுப்பட்டார் மோடி.

5 மாநில தேர்தல் தோல்வி அடைந்த அன்று, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை பார்த்த பத்திரிக்கையாளர்கள், 5 மாநில தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார். கேள்விகளை அமைதியாக கேட்ட மோடி, எதுவும் கேட்காதது போல திரும்பிச் சென்றார்.

தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருக்கும் மோடி அவர்கள், பிரதமராக இருந்த 5 ஆண்டுகளில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. ஊமை பிரதமர் என்று மன்மோகன் சிங்கை பா.ஜ.க வினர் அழைத்தார்கள். ஆனால் அவர் வருடத்திற்கு இரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். மேலும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கு பின்பு நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்தே பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் மன்மோகன் சிங். ஆனால் பிரதமர் மோடியோ கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவோம் என்பதற்காகவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை.

சென்ற ஆண்டு பிரதமர் மோடியுடன் நடத்தப்பட்ட விவாதங்கள் மற்றும் பேட்டிகள் கூட, என்ன கேள்விகள் கேட்கப்போகிறோம் என்பதை முன்னரே மோடிக்கு எழுதி கொடுத்துவிட்ட பின்பு தான் நிகழ்ச்சியே நடந்தது என்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டதற்காக, அக்டோபர் 2018 யில், என்.டி.டி.வி மீது ஐ.டி ரைடு நடந்து ஒரு பக்கம். கேள்விகளை கண்டு மோடி மிரள்வதை கண்டு மோடியிடம் ஒரு நாள் மட்டும் என்னை பத்திரிக்கையாளராக கேள்வி கேட்க அனுமதி கிடைக்குமா என்று நக்கல் செய்தார் ராகுல்.

ரபேல் ஊழல் குறித்து பிரதமர் மோடியை நோக்கி ராகுல் கேள்வி எழுப்பிய போது, எல்லையில் ராணுவ வீரர்கள் என்று அவரது கட்சியினர் சொல்வதை போல, ராணுவ வீரர்களை சந்தேக படலமா என்று பதில் அளித்தார் மோடி. ரபெல் ஊழல் குறித்து கேள்வி கேட்ட ராகுலுக்கு நேரடியாக பதில் கூறாத மோடி, நிர்மலா சீதாராமனை பேச விட்டு வேடிக்கை பார்த்தார்.

பத்திரிக்கையாளர்கள் கேட்கிற கேள்விக்கு தான் மிரளுகிறார் என்றால், தனது சொந்த கட்சிக்காரர் கேட்ட கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் வணக்கம் புதுச்சேரி என்று நழுவினார் மோடி.

டிசம்பர் 19 ஆம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளிடம் பேசினார் மோடி. அப்போது நிர்மல் குமார் ஜெயின் என்பவர், “நமது நாட்டில் உள்ள நடுத்தர மக்கள் அனைவரும் நீங்கள் வரி வசூல் செய்வதையே குறியாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே வரிவசூல் செய்வதில் காட்டும் அக்கறையை நாட்டு மக்கள் மீது காட்ட வேண்டும்” என்று மோடியிடம் கேள்வி கேட்டார் அவர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மோடி, “நிர்மல் நீங்கள் ஒரு வியாபாரி. வியாபாரம் சம்பந்தமாக கேள்வி கேட்பது தான் வழக்கம். சாமானிய மக்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனக்கு மட்டுமே கேட்கும்படியாக பேசிக்கொண்ட மோடி, அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், புதுச்சேரிகோ வணக்கம் என்றார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளானது.

இதிலிருந்தே கேள்விகளை கண்டு மிரளுபவர் ராகுல் அல்ல மோடி தான் என்பதை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ராகுல் மிரண்டார் என்று போலிச் செய்தியை பரப்பிய ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி உள்ளிட்டவர்கள், மோடி பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருப்பது குறித்து மௌனம் கலைப்பதே இல்லை.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here