தூது விட்ட காமராஜருக்கு, தேவர் அளித்த பதில்

0
504
views

13 ஏப்ரல் 1954 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார் காமராஜர். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. திருவில்லிபுத்தூர் மக்களவை தொகுதியின் எம்.பி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டார். குடியாத்தம் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு திமுக வும், தி.க வும் ஆதரவு கொடுத்தது. காரணம் முதல்வராக பதவி ஏற்றவுடன் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தார் காமராஜர். அதற்கு நன்றி சொல்லும் விதமாக திமுக வும், திக வும் ஆதரவு கொடுத்தது. எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார் காமராஜர்.

குடியாத்தத்தில் வெற்றி பெற்ற கையோடு கட்சியை தமிழகம் தோறும் வலுப்படுத்த நினைத்தார் காமராஜர். அதற்காக அவர் குறிவைத்தது பசும்பொன் முத்துராமலிங்க தேவரை. முக்குலத்தோர் மத்தியில் மிகுந்த செல்வாக்கு நிறைந்தவர். இன்னும் சொல்லப்போனால் காமராஜர் அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பப்புள்ளி வைத்தவர்களில் தேவரும் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த தேவர், சுபாஷ் சந்திர போஸ் மீது பற்று கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பார்வர்ட் பிளாக் கட்சியை நடத்திக் கொண்டிருந்தார். சிவகங்கை சீமையில் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான சிம்ம சொப்பனம் தேவர் தான். எப்படிப்பட்டாவது தேவரை காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் இணைத்துவிட்டால் போதும், அதன் பிறகு சிவகங்கை சீமையில் காங்கிரஸ் கட்சியை அசைத்துப் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல.

பலத்த யோசனைக்கு பிறகு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தூது அனுப்ப முடிவு செய்தார் காமராஜர். மூன்று அம்சங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது. மூன்றில் எதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் மகிழ்ச்சி. காமராஜரின் தூதுவராக தேவரிடம் சென்றவர் பின்னாளில் சபாநாயகரான செல்லப்பாண்டியன்.

முதல் அம்சம், தேவருடைய நீண்ட நாள் விருப்பமான உள்துறை அமைச்சர் பொறுப்பை கொடுப்பது. அதை அவர் விரும்பாத பட்சத்தில், அவர் விரும்புகின்ற 3 பேருக்கு அமைச்சர் பதவி தருவது, அதையும் அவர் வேண்டாம் என்று மறுக்கும் பட்சத்தில், ராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளின் பட்டியலை தேவரிடம் இருந்து கேட்டுப்பெற்று தீர்த்து வைப்பது.

இந்த அம்சங்களுடன் தேவரை சந்தித்தார் செல்லப்பாண்டியன். எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட தேவர்,

“மூன்று வாய்ப்புகளுமே நல்ல வாய்ப்புகள் தான். ஆனால் அவற்றை காமராஜரிடம் இருந்து பெற விரும்பவில்லை. 1957 யில் காங்கிரஸ் கட்சி சரியப்போகிறது. எங்கள் ஆட்சி வரப்போகிறது. அப்போது மூன்றையுமே எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் போகலாம்”

என்று காமராஜர் தந்த மூன்று வாய்ப்புகளையுமே நிராகரித்தார் தேவர். 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேவரின் பார்வர்ட் பிளாக் கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் சிவகங்கை சீமையை காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட அண்ணா தலைமையிலான திமுக, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்து 15 தொகுதிகளில் வென்றிருந்தது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here