ஜுனைத் நினைவு தினமும், தற்போதைய குடும்ப சூழலும்

0
1460
views

ஜூன் 22 புதிய இந்தியாவின் படைப்பை நோக்கிய மைல்கல் எனலாம். இதே நாளில் தான், கடந்த வருடம் 15 வயது சிறுவன், ஓடும் ரயிலில் இந்துத்துவ கும்பலால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டான். ஒரே காரணம் தான், அவன் ஒரு முஸ்லிம்.

எல்லோரும் போலவே புத்தாடை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ரயிலில் பயணித்து கொண்டிருந்த ஜுனைத், ஓடும் ரயிலில் கத்தியால் குத்தப்பட்டு, ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டான். ஜூன் 22 முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், ஜுனைத் உடைய வீட்டிற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் செளமியா லக்கானி சென்றுள்ளார். இன்னும் அந்த குடும்பம் சோகத்தில் இருந்து மீளவில்லை.

ஜுனைத் உடைய அம்மா சாய்ரா படுத்தபடுக்கையாகி விட்டார். தந்தை ஜலாலுதீன் உடல்நிலை குன்றி 25 கிலோ வரை எடை குறைந்து காணப்பட்டார். ஜுனைத் உடன் ரயிலில் பயணம் செய்த அவரது சகோதரன் சாகிர், இன்னமும் ஒரு கையை தூக்க முடியாமல் அவதிப்படுகிறார். அவருடைய சகோதரர்கள் பைசல், ஆதில், ஹாசிம் மற்றும் காசிம் ஆகியோர் தனது சகோதரன் ரயிலில் கொல்லப்பட்டதிலிருந்து லோக்கல் ரயிலில் ஏறுவதையே நிறுத்திவிட்டனர்.

ஜுனைத் வீட்டின் முன்பு எந்நேரமும் இரு போலீசார் நிற்கிறார்கள். வீட்டிலிருந்து யாரேனும் வெளியே சென்றால், வீடு திரும்பும் வரை தந்தை ஜலாலுதீன் இன்னமும் பதற்றத்துடனேயே இருக்கிறார். அவர் கூறியதாவது,

என்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் மெட்ரோ ரயிலில் மட்டுமே பயணம் செய்யச் சொல்வேன். பயணத்தின் போது யாரிடமும் பேசக்கூடாது சண்டையில் ஈடுபடக்கூடாது என்பேன். 30 நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு போன் செய்து பேசுவேன்.ஜுனைத் போன்று மற்ற யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற பயம் இன்னமும் எங்களிடம் இருக்கிறது என்றார்.

படுக்கையில் இருக்கும் சாய்ரா அவர்களிடம் பேசினோம், தனது மகனின் பெயரை சொல்லி அழுகிறார்.

இந்த வருடம் ரமலான் தற்போது தான் முடிந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. என்னால் சாப்பிடவும் முடியவில்லை. எல்லா நாட்களிலும் என் மகனை நினைத்துக் கொண்டே படுத்துக் கிடக்கிறேன். சென்ற வருடம் ரமலானில் தான் என் மகன் கொல்லப்பட்டார். அதிலிருந்து பெருநாளே நான் கொண்டாடுவதில்லை என்றார்.

அதே போல, ரமலான் திருநாளின் போது BBC HINDI பத்திரிக்கையாளர் நீலிஷ் தோத்ரே அவர்கள் ஜுனைத் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஆண்கள் யாரும் பைஜாமா அணியவில்லை. தலையில் தொப்பியும் போடவில்லை. அந்த உடை அணிந்து வெளியில் சென்றால் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் இன்னமும் அவர்களிடம் இருக்கிறது. ஆண் பிள்ளைகள் அனைவரும் சட்டை மற்றும் பேன்ட் அணிந்து வழக்கமான இந்தியர்கள் போல காட்டிக் கொண்டிருந்தனர்.

ஜுனைத் உடைய சகோதரன், பத்திரிக்கையாளர் தோத்ரே அவர்களிடம், நாங்கள் தொப்பி போடுவதில்லை. தொழுகை நேரம் வந்தால், தொழுகையின் போது கையில் இருக்கும் கர்சீப்பை எடுத்து தலையில் கட்டிக் கொள்வோம் என்றார்.

இது தான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடைய பிரதான கொள்கை. முஸ்லிம்களை தங்களது அடையாளத்திலிருந்து பொது அடையாளத்திற்கு மாற்றும் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

ஜுனைத் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டுச் சிறையில் இருக்கிறார்கள். ஒரே ஒரு மகன் மட்டுமே வெளியில் சென்று ஹோட்டல் ஒன்று நடத்தி, குடும்பத்திற்கு தேவையானதை செய்து வருகிறார். ஜுனைத் உடைய சகோதரர் ஹாசிம், தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

ஆனால் ஜுனைத் வீட்டிற்கு அருகில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். இந்த வருடம் ரமலானில் கூட, ஜுனைத் வீட்டிற்கு சென்று ஆறுதலையும், வாழ்த்தையும் தெரிவித்து உள்ளார்கள் என்கிறார் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர் லக்கானி.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த நிசார் அஹமது என்பவர், குற்றவாளிகளிடம் இருந்து பணம் பெற்றுத் தருவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், அவர்கள் தருவதாக சொன்ன பணம் மற்றும் நிலம் தங்களுக்கு தேவையில்லை என்று மறுத்திருக்கிறார்கள் ஜுனைத் உடைய பெற்றோர்கள்.

மோடியின் ஆட்சியில் இந்தியா தலைகீழாக மாறியுள்ளது. இது தான் புதிய இந்தியாவாக அங்கீகரிக்கப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் மாட்டும் இந்துத்துவ கும்பலால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது மட்டும் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

  • ஜூன் 20 ஆம் தேதி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கரில் துகைத் அன்சாரி என்பவர் அடித்தே கொல்லப்பட்டார்.
  • ரமளானுக்கு இரண்டு நாட்களுக்கு பின்பு, ஹாபூரில் இரண்டு முஸ்லிம்கள் அடுத்தே கொல்லப்பட்டனர்.
  • இது நடந்த 5 நாட்களுக்கு முன்னர் தான், ஜூன் 13 ஆம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் கொட்டா என்ற ஊரில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
  • ஒரு வாரத்திற்கு முன்பு, அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தையை கடத்தியாக கூறி இரண்டு முஸ்லிம்கள் அடுத்தே கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே, பொய்யாக பரப்பப்பட்ட வதந்திகளால் நடந்தவை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள இந்துத்துவ கும்பலால் செய்யப்பட்டவை.

தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தாகக் கூறி அடித்தே கொல்லப்பட்ட முதியவர் அக்லாக் முதல் இன்று வரை கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இப்படி நடக்கும் கொலைகளின் மீது பதியப்படும் வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போக செய்யப்படுகின்றன. இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டது ஐ.நா சபை. அதற்கு இந்தியா இன்னமும் வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு தான் இங்கு எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சகம் பதில் அறிக்கையை வெளியிட்டது.

நீங்கள் யாரவது கொல்லப்பட்ட அக்லாக், பக்லுகான், ஜுனைத் மற்றும் ஹாசிம் வீட்டிற்கு சென்று பாருங்கள், எப்படிப்பட்ட மாற்றும் அவர்களது வாழ்க்கையில் அந்த கொலைக்கு பிறகு ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று திணிக்கப்பட்டு, முஸ்லிம் என்ற அடையலாம் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் நம்மை கண்கலங்க வைக்கிறது. ஜுனைத் உடைய வீட்டில் இவ்வளவு சோகம் நடந்தேறிய பின்பும், அந்த சோகத்தை பிற முஸ்லிம்கள் பண்டிகைகள் கொண்டாடும் போது அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. தங்களது சோகத்தை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, கடந்த ரமலானில் அனைவர்க்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் ஜுனைத் குடும்பத்தினர்.

நாம் வாழ்ந்த இந்தியா முற்றிலும் மாறிவருகிறது. இந்த நிலையில் நாம் இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள். இது ஜுனைத் உடைய நினைவு தினத்திற்காக மட்டுமல்ல, அழிந்து வரும் நம் இந்திய பண்பாட்டிற்கும் சேர்த்து தான்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here