நீரவ் மோடியை காப்பாற்றுகிறதா மோடி அரசு – அம்பலப்படுத்திய இன்டர்போல் கடிதம்

0
1844
views

பஞ்சாப் நேசனல் வங்கியிடம் இருந்து ரூ.14000 கோடி கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல், கடந்த ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றவர் பிரபல தொழில் அதிபர் நீரவ் மோடி. பஞ்சாப் வங்கி அளித்த புகாரின் பேரில், அவரது சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, சகோதரர் மற்றும் இவரது உறவினர் உள்ளிட்ட நால்வர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, இவர்கள் நால்வரின் பாஸ்போர்ட்டை முடக்கியது இந்திய வெளியுறவுத் துறை.

தனது சொத்துக்கள் முடக்கப்பட்டதை தொடர்ந்து லண்டனிலும், சிங்கப்பூரிலும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார் நீரவ் மோடி. லண்டன் தூதுரக அதிகாரிகளின் ஒத்துழைப்பை அணுகியும், சி.பி.ஐ யால் நீரவு மோடியை நெருங்க முடியவில்லை.

இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) வழங்கும் படி இன்டர்போல் (Interpol) அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது. ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு நபருக்கு வழங்கப்பட்டால், அவர் எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்த நாட்டில் உள்ள காவல்துறை அவரை கைது செய்து, சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும்.

சி.பி.ஐ கடிதத்திற்கு, கடந்த ஜூன் 5 ஆம் தேதி இன்டர்போல் பதில் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தை படித்து சி.பி.ஐ மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்டர்போல் வெளியிட்ட கடிதத்தில், நீரவ் மோடி தற்போது லண்டனில் இல்லை என்றும், ஒரு மாதம் முன்பே அவர் லண்டனை விட்டு வேறு நாடு சென்று விட்டார் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து தான், அவர் வெளிநாடு சென்று விட்டார் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள்ளது. இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டன் வந்த நீரவ் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை வைத்து மார்ச் 15, 28, 30, 31 தேதிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங் காங் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்றும் அக்கடிதத்தில் இன்டர்போல் தெரிவித்துள்ளது.

பிரச்சனை இங்கு தான் எழுகிறது. இந்திய வெளியுறவுத் துறையால் திரும்பப் பெறப்பட்ட பாஸ்போர்டை வைத்து, எப்படி நான்கு நாடுகளுக்கு இவர் சென்று வந்தார் என்ற கேள்வி எழுகிறது. பிப்ரவரி 24 ஆம் தேதியே முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து, நீரவ் மோடியால் பயணமே செய்ய முடியாது. ஒரு நபரின் பாஸ்போர்ட்டை வெளியுறவுத் துறை முடக்கினால், அவர் ஏர்போர்ட் சென்று அதை காட்டினாலோ அல்லது வேறு இமிகிரேசன் இடத்தில் பாஸ்போர்ட்டை காட்டினாலோ செல்லாது. அவர் கைது செய்யப்படுவார். சட்டம் இப்படி இருக்கையில், நீரவ் மோடி எப்படி நான்கு நாடுகளுக்கு மார்ச் மாதம் சென்று வந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

அரசு முடக்கியதாக சொன்னது பொய்யா? என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். ஏற்கனவே லலித் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் தப்பித்து சென்றுள்ள நிலையில் நீரவ் மோடி தனது பாஸ்போர்டை வைத்து உல்லாச பயணம் மேற்கொண்டு வருவதை கண்டு சி.பி.ஐ அதிர்ச்சி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லலித் மோடியை பொறுத்தவரை, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் லண்டன் செல்ல வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களிடம் வேண்டுகோள் வைத்து, அவரின் மேற்பார்வையிலேயே தப்பித்து சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை போல நீரவ் மோடிக்கும், இந்திய அரசு ஏதேனும் உதவி வருகிறதா என்கிற கேள்வியை அரசியல் விமர்ச்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஏனென்றால், பாரதிய ஜனதா கட்சிக்கு நீரவ் மோடி தேர்தல் நன்கொடை அதிகமாக கொடுத்துள்ளார் என சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழகத்தில் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் சுதந்திரமாக உலவ விட்டிற்கும் அரசைப் போல, வங்கிக் கடன் மோசடி செய்த தொழிலதிபர்களை கைது செய்யாமல் வெளிநாடு தப்ப விடுகிறதா மத்திய அரசு என்ற கேள்வி எழாமல் இல்லை.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here