பாகிஸ்தானை பழிவாங்குகிறேன் என்று கடத்தலை ஊக்குவிக்கும் பா.ஜ.க

0
265
views

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கியது பா.ஜ.க அரசு. மேலும் பாகிஸ்தான் பொருட்களுக்கு அதிக வரியையும் விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், ஊழல் மற்றும் கடத்தல் அதிகரிக்கும் என்று ஐ.நா மற்றும் உலக வங்கியின் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நா வின் முக்கிய பிரதிநிதியான நாகேஷ் குமார் கூறும் போது, “இந்திய மற்றும் சீனா இடையில் கூடத்தான் எல்லை பிரச்சனை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக உறவில் அது எதிரொலிக்கவில்லை. எல்லை பிரச்சனைகள் வர்த்தகத்தை பாதிக்கவில்லை” என்றார்.

எல்லை பிரச்சனைகளை வர்த்தக உறவில் சீனாவிடம் எப்படி காட்டவில்லையோ அதே போல பாகிஸ்தானிடமும் இந்தியா காட்டக்கூடாது  என்றும் தெரிவித்தார் நாகேஷ் குமார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்த்துறை அமைச்சகத்தின் படி, இந்தியா 1.92 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பின்படி, 13,695 கோடியாகும். அதே போல பாகிஸ்தான் நாட்டில் இருந்து 4.88 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருட்களை இறக்குமதி செய்கிறது இந்தியா. இது இந்திய ரூபாயின் மதிப்பின்படி, 34.8 கோடியாகும்.

உலக வங்கியின் முக்கிய பொருளாதார அறிஞரான சஞ்சய் கதுரியா கூறும் போது, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரு நாட்டு வர்த்தகத்திற்கும் இடையே நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். எந்த அளவிற்கு என்றால், தெற்கு அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் வர்த்தகம் செய்யும் செலவை விட, அண்டை நாடான பாகிஸ்தானிடம் வர்த்தகம் செய்ய 18 மடங்கு அதிகம் செலவாகிறது” என்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நிறைய பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிடம் இருந்து 1209 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது பாகிஸ்தான். அதே போல, பாகிஸ்தானிடம் இருந்து 600 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இந்தியா.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் தற்போது 2 பில்லியன் டாலராக இருக்கிறது. பகைமைகளை மறந்து இரு நாடுகளும் செயல்பட்டால் 37 பில்லியன் டாலர் வரை வர்த்தகம் அதிகரிக்கும் என்கிறார்கள் உலக வங்கியின் பொருளாதார வல்லுனர்கள்.

ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறி, வர்த்தக உறவுள்ள நாடு அங்கீகாரத்தையும், பாகிஸ்தான் பொருட்கள் மீதான வரிகளையும் உயர்த்தியது இந்தியா.

ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளால், பல பொருட்கள் துபாய் மற்றும் சிங்கப்பூர் வழியாக கடத்தப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு முறையற்ற வணிகம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு நாடுகளின் கட்டுப்பாடுகளால் மூன்றாவது நாட்டின் வழியாகத்தான் பெரும்பாலான பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது இந்தியாவின் இந்த நடவடிக்கையால், மேலும் கடத்தலும், ஊழலும் தான் அதிகரிக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். பாகிஸ்தானை பழிவாங்குகிறோம் என்று இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் லாபம் காணப்போவது துபாய் மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகள் தான்.

முறையான வணிகம் மற்றும் முறையற்ற வணிகம் இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர்கள் இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் போது, முறையற்ற வணிகம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here