நோன்பாளிகளுக்கு ஆட்டோ இலவசம் – ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேயம்

0
2742
views

ஆட்டோவில் பிரசவத்திற்கு இலவசம் என்று எழுதி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ரமலான் நோன்பு வைத்திருப்பவர்களுக்கு ஆட்டோ இலவசம் என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கிறோமா? டெல்லியில் ஆட்டோ ஓட்டிவரும் பிரஹலாத் என்பவரின் ஆட்டோவில் இப்படி எழுதியிருக்கிறது.

அவரிடம் இது குறித்து கேட்டபோது,

கடுமையான வெப்பம் நிலவக்கூடிய இந்த காலத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்புக் காலம் வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு நோன்பு வைப்பதற்கே சிரமமாக இருக்கும் என்பதால் ,நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு இலவசமாக ஆட்டோ இயக்க முடிவு செய்தேன். இதன் மூலம் எனக்கு மக்களிடம் இருந்து ஆசிர்வாதம் கிடைத்தால் அதுவே போதும் என்றார்.

மேலும்

நான் ஒன்றும் பணக்காரன் அல்ல.. இன்று ஆட்டோ ஓட்டினால் தான் என் வீட்டில் அடுப்பெரியும். இருந்தாலும், இந்த வெயிலில் நோன்பு வைத்திருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம், மனிதநேயத்தில் என் பங்களிப்பை செய்ய நினைக்கிறேன். இதன் மூலம், மத வேற்றுமையை உருவாக்கும் இந்த காலத்தில், இரு சமூக நல்லிணக்கம் ஏற்படும் எனவும் நம்புகிறேன் என்றார்.

இந்த இலவச ஆட்டோ சேவையை ரமலான் மாதம் தொடங்கி, இறுதி வரை நோன்பு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இயக்குகிறார் பிரஹலாத்.

ஆட்டோவில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் என்னிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் நான் வாங்க மறுத்தவுடன், உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று அவர்கள் சொல்லும் அந்த ஒரு வார்த்தை, என் மனதில் அமைதியை ஏற்படுத்தும் என்கிறார் பிரஹலாத்.

டெல்லியில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேஷன் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் பிரஹலாத். இவரின் இந்த மனிதநேயத்தை பாராட்டி, அவரிடம் பயணம் மேற்கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் ட்விட்டரில் அவரை பற்றி பாராட்டி எழுதி வருகிறார்கள். இவரை பற்றி தெரிந்து கொண்ட பிற மக்களும், இவரை நேரிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருவது தற்போது வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் மத வேற்றுமையை வைத்து அரசியல் செய்து வரும் சூழ்நிலையில், ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனரின் இந்த மனிதநேய பண்பு, மதம் கடந்து அனைவரையும் ஒரு தாய் மக்களாக நினைக்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஆட்டோ ஓட்டினால் தான் உணவு என்கிற போதும், தன்னால் முடிந்ததை செய்து மனிதநேயத்தை வளர்க்கும் பிரஹலாத், நம் அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாக இருக்கிறார். நாமும் இவரை போல நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்வதன் மூலம், மனிதநேயத்தை இம்மண்ணில் விதைத்துக் கொண்டே இருப்போம்.

உங்கள் சமூக வலைதளங்களில் இதை ஷேர் செய்து நீங்களும் இவரை பாராட்டலாமே.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here