இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை முதன்முதலில் திருத்தம் செய்ய வைத்த தமிழ்நாடு

0
414
views

ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்டு குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாடினர். தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் அதை புறக்கணித்தது. திமுக வும் திராவிட நாடு கோரிக்கை வைத்தால் குடியரசு தினத்தை புறக்கணித்தது.

இந்நிலையில் ஜனவரி 26 அரசியல் சாசனத்தை கொண்டுவந்ததோடு புதிய சர்ச்சை ஒன்றும் கிளம்பியது. அது அரசியல் சாசனத்தின் 29(2) ஷரத்தின் சாரம்சம்.

“மதம், சாதி, இனம், மொழி ஆகியவற்றின் காரணமாகவோ அல்லது இவற்றில் ஒன்றின் காரணமாக மட்டுமோ எந்தவொரு குடிமகனுக்கும் அரசால் பராமரிக்கப்படுகிற அல்லது அரசின் நிதியுதவி பெறுகிற எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் அனுமதி மறுக்கப்படமாட்டாது”

இந்த ஷரத்தை அடிப்படையாக வைத்து செண்பகம் மற்றும் சீனிவாசன் என்ற இரண்டு பிராமணர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க இருவரும் விண்ணப்பம் செய்திருந்தனர். அப்போது சென்னை மாகாணத்தில் அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. அதன் காரணமாக அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கம்யூனல் ஜி.ஒ என்கிற வகுப்புவாரி ஒதுக்கீடு ஆணை என்பது அரசியல் சாசனத்தில் 29(2) ஷரத்துக்கு விரோதமானது என்பது தான் அவர்கள் எழுப்பிய வாதம். விசாரணையின் முடிவில் 28 ஜூலை 1950 அன்று தீர்ப்பு வெளியானது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திமுக வும் தீர்ப்புக்கு எதிராக களம் இறங்கினர். போராட்டம் வெடித்ததை தொடர்ந்து சென்னை மாகாண அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தோல்வி அடைந்தது.

அரசியல் அமைப்பை திருத்தினால் மட்டுமே இதை மாற்ற முடியும் என்ற நிலைமை உருவானது. அதை செய்ய அப்போதைய சென்னை மாகான அரசு தயங்கிய போது, பெரியார் மற்றும் அண்ணா இருவரும் ஓரணியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நேருவுக்கு நெருக்கடி முற்றியது. 1951 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஷரத்து 15 யில் 4 வது உட்பிரிவு உருவாக்கப்பட்டது.

“இந்த ஷரத்திலோ அல்லது ஷரத்து 29(2) லோ உள்ள எதுவும் குடிமக்களின் எந்தவொரு சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பின் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக எந்தவொரு சிறப்பு நடவடிக்கை எடுப்பதில் இருந்தும் அரசை தடுக்காது” என்பதே புதிதாக திருத்தப்பட்ட சாரம்சம்.

2 ஜூன் 1951 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்த திருத்தம் செய்யப்பட்டது. இது தான் சுதந்திர இந்தியாவில் செய்யப்பட்ட முதல் அரசியலமைப்பு திருத்தம். இதற்கு 18 ஜூன் 1951 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதன்படி அரசு பதவிகள் மற்றும் வேலைகளில் 60% பொது தொகுப்பிலும், 25% பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கும், 15% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்.

இந்தியாவிலேயே அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்ய வைத்தனர் பெரியாரும் அண்ணாவும். அதுவும் சமூக நீதிக்காக திருத்த போராடி வெற்றி பெற்றனர். இன்று பலரும் இட ஒதுக்கீடை அனுப்பவிக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாரும், அண்ணாவும் அன்றைக்கு வீதியில் இறங்கி போராடி உரிமையை பெற்று தந்ததால் தான்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here