என்னைப் பார் யோகம் வரும் அர்த்தம் என்ன?

0
1402
views
என்னைப் பார் யோகம் வரும்

20 வருடங்களுக்கு முன்னால் கிராமம் மட்டுமல்ல, நகரப்புறத்தில் உள்ள கடைகளில் கூட ஒரு போட்டோ தொங்குவதை பார்த்திருப்போம். கழுதையின் படம் போட்டு “என்னைப் பார் யோகம் வரும்” என்று அதில் எழுதி இருக்கும். இதன் அர்த்தம் புரியாத பலர் கழுதையை பார்த்தால் வாழ்க்கையில் யோகம் வரும் என்று நினைத்து தங்கள் கடைகளில் தொங்கவிட்டிருப்பார்கள்.

இதை பார்த்து, கழுதையை பார்த்தால் எப்படி ஐயா யோகம் வரும், இதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்பவர்களும் உண்டு.

கழுதையை பார்த்தால் யோகம் வரும் என்று இருந்திருந்தால், கழுதை யோகமான வாழ்கையைத் தானே வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அது அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டு கஷ்டமல்லவா படுகிறது. பின்பு எதற்காக இந்த வாசகம் உருவானது என்று பலருக்கும் கேள்வி எழும்.

இதன் உண்மையான நோக்கம் என்பது, வெறும் கழுதையின் படத்தை மட்டும் பார்ப்பதால் யோகம் வராது. கழுதையின் வாழ்க்கை முறையை நாம் பார்க்க வேண்டும். ஒரு துணி துவைப்பவர், தான் சேகரித்த அழுக்குத் துணிகளை எல்லாம் கழுதையின் மீது வைத்து, ஆற்றாங்கரைக்கு சென்று துணி துவைப்பார். அப்படி அழுக்குத் துணி ஏற்றும் போது, என் மீது இப்படி அழுக்குத் துணியை ஏற்றுகிறீர்களே ! துர்நாற்றம் வருகிறதே ! என்று அந்த கழுதை வருத்தப்படுவதில்லை. அதே போல, துணியை நன்றாக துவைத்து வெயிலில் உலர்த்திவிட்டு, மீண்டும் கழுதையின் மீது ஏற்றும் போது, ஆகா! என் மீது சுத்தமான துணியை ஏற்றி உள்ளார்கள். நறுமணம் வீசுகிறதே! என்று அந்த கழுதை மகிழ்ச்சியடைவதுமில்லை.

இதில் தான் நமக்கான படிப்பினை உள்ளது. கழுதை எப்படி கவலையும், மகிழ்ச்சியும் அடைவதில்லையோ அதைப் போல, மனிதன் தன் வாழ்க்கையில் கஷ்டமான காலங்கள் வரும்போது, துன்பம் அடைந்து சோர்ந்து விடக் கூடாது. அதே போல மகிழ்ச்சியான தருணத்தில், அதீத சந்தோசமும் அடையக்கூடாது.

பிரச்சனை வரும் போது அதீத துன்பமும் அடையக்கூடாது. அதே நேரத்தில், சந்தோஷமான நேரத்தில் அதீத மகிழ்ச்சியும் அடையக்கூடாது. அப்படி நாம் வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் கவலை என்பதே இருக்காது என்பதற்கு தான், கழுதையின் வாழ்கையை சுட்டிக்காட்டி “என்னைப் பார் யோகம் வரும்” என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எனவே கழுதையை பார்த்தால் யோகம் வரும் என்று நினைப்பவர்களும், இது மூட நம்பிக்கை என நினைப்பவர்களும் இனி சரியான புரிதலோடு அதை படியுங்கள்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here