கால்டுவெல்லின் திராவிடமும்; அயோத்தி தாசரின் திராவிடமும்

1
580
views

திராவிடத்தை பெரியார் கையில் எடுப்பதற்கு முன்பே, அதாவது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி மூன்றுக்கு முன்பே திராவிடம் என்ற சொல் வைத்து தொடர்ந்து பேசிகொண்டும், எழுதிக்கொண்டும் களமாடி வந்துகொண்டிருந்தவர்கள் அயோத்தி தாச பண்டிதரும், ஜான் ரத்தினமும். இங்கே ஒன்றை நாம் சரிவர புரிந்துக்கொள்ள வேண்டும். பெரியார் முன்வைக்கும் திராவிடம் வேறு. அயோத்தி தாசர் முன்வைக்கும் திராவிடம் வேறு.

பெரியார் முன்வைப்பது கால்டுவெல்லின் கண்டுப்பிடிப்பு.
ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற ஆங்கிலேய கலெக்டர் கி.பி 1777 ஆண்டுவாக்கில் தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்து 12 ஆண்டுகள் கழித்து ஒரு ஆய்வு நூலை கொண்டுவருகிறார். அந்த நூலின் பெயர் ‘திராவிட மொழிகள்’. இப்படிதான் முதன்முதலாக தமிழக அரசியலில் கால் வைக்கிறது திராவிடம். எல்லீஸ் வழியோற்றி வந்தவர்தான் நம்ம ராபர்ட் கால்டுவெல். அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற நூலில்
திராவிட என்பது, திரவிட என்றாகி, அது த்ரமிள என்றாகி, அது தமிள என்றாகி அதுவே தமிழ் என்றானது என்று திராவிடத்திற்கு வரையறை வைக்கும் ராபர்ட் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் தொகுப்பை திராவிடர் என்கிறார் (கி.பி. 1856). திராவிடத்தை எல்லீஸ் பிரபு அறிமுகப்படுத்தி இருந்தாலும் கூட திராவிட இயக்கங்களின் தத்துவ பேராசான் கால்டுவெல் தான். ஏனென்றால் கால்டுவெல் பார்வை என்பது குமாரில பட்டர் முன்வைக்கும் கருத்தியலில் இருந்து பிறக்கிறது.

யாரிந்த குமாரில பட்டர் ?

காலம் கி.பி. ஏழாம் ஆம் நூற்றாண்டு. ஊரும் பேரும் தெரியாவிட்டாலும் அவர் வேதவிற்பனர். விவாதங்ககளில் பெரிதும் ஈடுப்பாடு உடையவர். இறை மறுப்பாளர். காஞ்சிபுரத்தில் தங்கி பயின்றவர் என்கின்றன அவர் பற்றிய குறிப்புகள். இவர் மீமாம்சத் தத்துவத்திற்கு ஒரு உரை நூல் எழுதுகிறார் அதன் பெயர் ”தந்திர வார்த்திகா”. இந்த நூலைதான் தன் ஆய்வுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார் கால்டுவெல்.

அதில் குமாரில பட்டர் என்ன சொல்கிறார் என்றால், சமஸ்க்ருதச் சொற்களது அர்த்தத்தைக் கொண்டும், அதே நேரம், அந்தச் சொல்லின் கடை எழுத்தைச் சிறிது மாற்றியும் இந்தச் சொற்கள் தமிழில் வந்திருக்கின்றன என்கிறார். அதாவது த்ராவிட என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து, தமிழ் என்ற சொல் வந்தது என்கிறார்

சொல் எப்படியெல்லாம் திரியும் என்கிற சூத்திரத்தை நம் முப்பாட்டன் தொல்காப்பியன் வகுத்து வைத்திருக்கிறான். அதன்படி ஒலிக் குறிப்பில் ‘த’கரம், தகரம் ஆகலாம். அதாவது தமிள என்பது தமிழ என்றாகலாம். ஆனால் திரமிள என்றால் அது திரமிழம் என்றுதான் ஆகும். த்ரமிள என்றாலும், திரமிழம் என்றுதான் ஆகும். திராவிட தேய்ந்து ஒலித்து தமிழ் ஆகும் ? ளகரம் ழகரமாகலாம் (சோள = சோழ) ஆனால் திர அல்லது த்ர என்பது தகரம் ஆகாது.

அதுமட்டுமல்ல அவர் சொல்லுகிறபடி இந்த சொற்கள் இதே அர்த்தத்தில் கன்னடத்தில் இருக்கவேண்டும், தெலுங்கில் இருக்கவேண்டும், மலையாளத்தில் இருக்க வேண்டும். ஆனால் இல்லையே, அப்படியெனில் இந்த மொழிகள் அனைத்துமே திராவிட பாஷை என்று சொல்வது எங்ஙனம் பொருந்தும் ?

ஆக இப்படிதான் போகிறது குமாரில பட்டரின் ஒரு உரை நூல். அப்படியிருக்க குமாரில பட்டரைப் பின் பற்றியும், வட சொல் திரியும் முறையை அறியாமலும், கால்டுவெல் செய்த சொற்பிரயோகம் ஒத்துக் கொள்ளத் தக்கதா? என்றால் இல்லவே இல்லை.

தமிழ் பாரம்பரியத்தின் தொன்மைகள் அறியாமல், சொல்லிக்கணம் அறியாமல் அவை பேசும் உள்ளுறை உவமைகளை அறியாமல் ஒரு மேம்போக்காக நுனிபுல் மேய்ந்த கதையாக தமிழை படித்தவர்கள் அதிலும் எங்கிருந்தோ வந்த ஐரோப்பியர்கள் என்ன புரிதலோடு மொழியை, வரலாறை ஆராய்ந்திருக்க முடியும். வாய்க்கு வந்தபடி ஒரு அர்த்தம் கற்பித்து விட்டுப் போய் விட்டார்கள். அதை கொண்டு திராவிடத்திற்கு வரையறை பின்னிக்கொண்டிருக்கிறார்கள் நம் அறிஞர் பெருமக்கள்.

அதிலிருந்து எங்ஙனம் மாறுபடுகிறது பண்டிதரின் பார்வை.
1881ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிற வெள்ளையர்களிடம் அவர் வலியுறுத்துகிறார்.

“இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும், இத்தேசப் பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டும், பூர்வ குடிகளை சாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்திரவளிக்க வேண்டுகிறோம்.” என்று வலியுறுத்துகிறார் அயோத்திதாச பண்டிதர் (14- 12- 1910).

அவர் சொல்லும் பூர்வ சரித்திரங்கள் எது? அந்த பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்கள் எது? என்றெல்லாம் தேடுவதற்கு முன் ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தமிழக அரசியலில் திராவிடம் என்ற வார்த்தையை கொண்டு வந்து சேர்த்த எல்லீஸ் பிரபு வீட்டில் வேலைபார்த்து திருக்குறள் உள்ளிட்ட மிக பழைமை வாய்ந்த தனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த பற்பல அரிய ஓலைசுவடிகளை எல்லாம் அவரிடம் கொடுத்து தமிழ் காத்த பெருந்தமிழன் பட்லர் கந்தப்பன். யாரென்றால் அவர் அயோத்தி தாசருக்கே அப்பன்.
தேவசேனர் என்பவர் ஒரு நூல் எழுதுகிறார் அதன் பெயர் தர்சனசாரம். இந்த நூல் என்ன சொல்கிறதென்றால், சமணரான வச்சிரநந்தி கி.பி. 470 ஆண்டு ஆண்டுவாக்கில் ஒரு சங்கம் அமைத்து அதற்கு திராவிட சங்கம் என்று பெயர் சூட்டுகிறார்.

தம் கைவசம் இருந்த இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்ததின் அடிப்படையில் தான் திராவிடம் என்ற சொல்லை வைத்து களமாடுகிறார் அயோத்தி தாச பண்டிதர்.

சரி !
நீங்கள் திராவிடத்திற்கு பொருள் தேட விரும்பினால் முதலில் உங்களுக்கு இதுவரை போதிக்கப்பட்ட திராவிட அரசியல் பார்வையிலிருந்து முற்றிலுமாக வெளிவரவேண்டும், ஓகே வா ?

பத்திரிக்கையாளர்

1 COMMENT

  1. திராவிடம் குறித்தான எமது பதிவை வெளிட்டமைக்கு ஆசிரியர் குழு உள்ளிட்ட தோழர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ❗️

    சமரன் நாகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here