கோவிலுக்கும் பள்ளிவாசலுக்கும் ஒரே மதில் சுவர்

0
3501
views

உ.பி என்றாலே நம் நினைவுக்கு வருவது மதக்கலவரம் தான். அங்கு வாழும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு கலவரம் ஏற்படுகிறது. குறிப்பாக, 1992 யில் அயோத்தியில் பாபர் மசூதி இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பின்பு, மதக்கலவரமும் செய்தார்கள். அப்படிபட்ட உ.பி யில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், கோவிலுக்கும், பள்ளிவாசலுக்கும் ஒரே மதில் சுவருடன் இருக்கிறது ஓர் அழகிய கிராமம். உ.பி மாநிலத்தில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தான் தேக்ரியவன் (Dehriyawan).

அயோத்திக்கு மிக அருகில் இருக்கும் இந்த கிராமத்தில், கோவிலுக்கும்,பள்ளிவாசலுக்கும் ஒரே மதில் சுவர் இருக்கிறது. அங்குள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் பேசிய போது,

பள்ளிவாசலில் 5 வேளை தொழுகை நடக்கும். அவர்கள் தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன் கோவிலில் முரசு சத்தமும் மணி சத்தமும் நிறுத்தப்பட்டு தொழுகை முடியும் வரை அமைதியாக இருக்கும். அதே போல கோவில் விசேஷங்கள் வரும்போதும் பள்ளிவாசலில் அமைதி காக்கப்படும் என்கிறார்கள்.

இது மட்டுமல்ல, இங்கு இந்துக்கள் முஸ்லிம்கள் பண்டிகை என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் இணைந்தே எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். 92 ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அயோத்தி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது கூட இங்கு எந்த கலவரமும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.

கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று மத வெறுப்புணர்வை பரப்பி, அதன் மூலம் அரசியல் செய்து வரும் இந்த காலத்தில், கோவிலுக்கும், மசூதிக்கும் ஒரே சுவருடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இம்மக்கள், ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

வெவ்வேறு வழிபாடு முறைகளை கொண்டிருந்தாலும், இம்மக்களை போல ஒற்றுமையுடன் வாழ்ந்து மத நல்லிணக்கம் பேணுவோம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here