சமூக நீதி மசோதாக்களில் பிராமண கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு | இன்றும் அன்றும்

1
409
views

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகள் என்று உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடை பா.ஜ.க அரசு மசோதாவாக கொண்டு வந்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் கம்யுனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆதரித்து பேசி வாக்கு அளித்தார். அவர் பேசும் போது, கனிமொழி அவர்கள் என்ன அநியாயம் இது என்று தடுக்கப் பார்த்தார். அந்த அளவிற்கு தமிழக கம்யூனிஸ்ட்கள் அப்படி செய்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்க வில்லை.

ஆதரித்து பேசிய டி.கே ரங்கராஜன் ஒரு பிராமணர் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர்கள் சமூக நீதி திட்டத்திற்கு அதீத அக்கறை செலுத்தமாட்டார்கள் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர்.

தற்போது டி.கே.ரங்கராஜன் செய்தது போல அன்று இதே போன்ற ஒரு முக்கியமான மசோதாவின் போது, ஒருவர் தவறு செய்தார். அவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிராமணர் தான்.

குலக்கல்வித் திட்டம்:

குலக்கல்வி திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த போது, தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி முதல் திமுக, தி.க என்று எல்லோரும் ஓரணியில் நின்று எதிர்த்தார்கள்.

தமிழகத்தில் குலக்கல்விக்கு ஆதரவாக இருந்த ஒரே குரல் ம.பொ.சி மட்டுமே. குலக்கல்விக்கு ஆதரவாக அறிக்கை விட்டதோடு நில்லாமல், வீதி வீதியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். மயிலாடுதுறையில் தமது தமிழரசுக் கழகம் சார்பில் மாநாடு போட்டு, குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவாக அவர் பேசிய போது, அவர் கட்சியினரே எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.

குலக்கல்விக்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தாலும், பதவியே போனாலும் பரவாயில்லை திட்டத்தை கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராஜாஜி.

1953 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, குலக்கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது திமுக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை.

தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் கல்யாண சுந்தரம் மற்றும் கே.பி.கோபாலன். பல மணி நேர விவாதம் நடந்தது. இறுதியில் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

குலக்கல்வி திட்டத்திற்கு காமராஜர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால், தீர்மானம் கண்டிப்பாக வெற்றிப் பெறும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்பிக்கையோடு இருந்தனர்.

ஆனால் தீர்மானத்திற்கு ஆதரவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் வாக்கெடுப்பு சமஅளவில் முடிந்தது. தலா 138 வாக்குகள் கிடைத்தது. சம அளவு ஏற்பட்டதால் சபாநாயகர் வாக்கு கோரப்பட்டது. அவர் ராஜாஜி பக்கம் சாய்ந்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

ஒரு வாக்கு கூடுதலாக கிடைத்திருந்தால் தீர்மானம் வெற்றிப் பெற்றிருக்கும். குலக்கல்வி திட்டம் குலைந்து போய் இருக்கும். அப்போது எல்லோருடைய பார்வையும் ஒருவர் மீதே இருந்தது. அவர் தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ராமமூர்த்தி. ஒரு எதிர்கட்சித் தலைவராக இருந்து கொண்டு, முக்கியமான வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிந்தும் அவர் அவைக்கு வரவில்லை.

பிராமணரான பி.ராமமூர்த்தி தன்னுடைய சக பிராமணரான ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்திற்கு மறைமுமாக ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் வாக்கெடுப்பைத் தவிர்த்து விட்டார் என்று திமுக வினர் விமர்சித்தனர்.

ஆனால் பி.ராமமூர்த்தி அந்த குற்றச்சாட்டை மறுத்தார். காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் சேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை எனக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால் தான் அவைக்கு வரவில்லை என்று விளக்கம் கொடுத்தார் பி.ராமமூர்த்தி. அவர் கூறிய காரணம் ஏற்கும்படியாக இல்லை என்று பலரும் கூறினார்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் இல்லாதது ராஜாஜிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இனி குலக்கல்வி திட்டத்தை கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது என்றனர் ராஜாஜி ஆதரவாளர்கள்.

பொருளாதார நலிவுற்ற ஏழைகள் என்று உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமணரான ரங்கராஜன் பேசி வாக்களித்தது போல, தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியமான தீர்மானத்தின் போது, அவையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமணரான பி.ராமமூர்த்தி.

தமிழக கம்யூனிஸ்ட்கள் ஒன்று நினைக்க, கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர்களோ வேறு விதமாக செயல்படுகின்றனர். இந்த மசோதாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டிருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிமணி குரல் எழுந்தது. ஆனால் டி.கே.ரங்கராஜனை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஒருகுரல் கூட எழவில்லை என்பதே எதார்த்த உண்மையாகும்.

Young ambitious writer

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here