கம்யூனிசம் என்றால்-5: மாறாத மாற்றமும், இயக்கவியல் பொருளியமும்

0
895
views

பொதுவுடைமைவாதிகள் மட்டுமல்லாமல், பொருளாதார அறிஞர்கள் எல்லோருமே பயன்படுத்துகிற இன்னொரு சொல்லாடல் “உற்பத்தி சக்திகள்”, “உற்பத்தி வழிகள்”, “உற்பத்தி உறவுகள்”  என்பவையாகும். இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற அடிப்படையில் மனித சமுதாய வளர்ச்சியை ஆராய்கிற மார்க்சிய அறிவியல் இந்த “உற்பத்தி சக்திகள்”, “உற்பத்தி வழிகள்”, “உற்பத்தி உறவுகள்” பற்றிய விளக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

ஆம், மார்க்சியம் என்பது மனப்பாடம் செய்வதற்கான வெறும் தத்துவம் அல்ல, புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான அறிவியல் அது. புவியீர்ப்பு விசை என்ற இயற்கை உண்மையை நியூட்டன் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்தார். அவரது அறிவியல் கோட்பாட்டைப் புரிந்துகொண்டதால்தான் புவியீர்ப்பை மீறிச் செல்கிற விமானங்கள் முதல், புவியின் ரகசியங்களைக் கண்டறிந்து சொல்கிற  செயற்கைக்கோள்கள் வரை பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

புவியீர்ப்பு விசை உள்ளிட்ட இயற்கை உண்மைகள் பற்றிய அறிவியல் எப்படி குறிப்பிட்ட மதத்திற்கோ இனத்திற்கோ நாட்டிற்கோ உரியதல்ல, உலக மக்களுக்கெல்லாம் பொதுவானது. அதேபோலத்தான் மானுட இயற்கை உண்மையாகிய மார்க்சியமும் எந்தவொரு நாட்டுக்கும் கட்சிக்கும் உரியதல்ல, உலக மக்களுக்கெல்லாம் பொதுவானது.

மார்க்சியம் சொல்கிற “உற்பத்தி சக்திகள்”, “உற்பத்தி வழிகள்”, “உற்பத்தி உறவுகள்” ஆகியவற்றுக்குப் போவதற்கு முன்பாக மார்க்சிய ஆய்வுமுறைக்கு அடிப்படையான இயக்கவியல் பொருள்முதல்வாதம் (டயலக்டிகல் மெட்டீரியலிசம்), வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (ஹிஸ்டாரிகல் மெட்டீரியலிசம்) ஆகியவை என்னவென்று பார்ப்போம்.

பொருள்முதல்வாதம் என்றால் என்ன? மெட்டீரியலிசம் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அன்று  இப்படித் தமிழாக்கம் செய்துவிட்டார்கள்.

நாம் வாழும் பூமி உள்ளிட்ட இந்தப் பேரண்டம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது ‘கருத்துமுதல்வாதம்’. அதாவது, கடவுள் என்பது ஒரு கருத்து. ஆதாரமில்லாத, சாட்சியமில்லாத, ஆனால் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் வலுவான நம்பிக்கை சார்ந்த கருத்து அது. கடவுள் நம்பிக்கையை மையமாகக் கொண்ட மதங்கள் சிலவற்றில் கடவுளுக்கு உருவம் தரப்பட்டிருக்கிறது, பல மதங்களில் உருவம் தரப்படவில்லை. எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களில் கூட மனிதர்களுக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்திதான் அனைத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறவர்கள் உண்டு. இயற்கைதான் கடவுள் என்பாரும் உண்டு. அதுவும் ஒரு கருத்துதான்.

இறுதியாகக் கேட்டால்,  கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை என்றும், கடவுளை உணரத்தான் முடியும், பார்க்க முடியாது என்று வாதம் முடித்துக்கொள்ளப்படும். அந்த வாதத்திற்குச் சான்றாக, மின்சாரத்தைப் பார்க்க முடியாது ஆனால் மின்சாரம் இருக்கிறது என்பதைப் போன்றதுதான் இது என்பார்கள்.

இப்படிக் கடவுள் அல்லது சக்தி என்ற கருத்தை முதன்மையானதாகக் கொண்டது ‘கருத்துமுதல்வாதம்’ என்ற ‘ஐடியலிசம்’. சுருக்கமாக இதைக் ‘கருத்தியம்’ என்றும் கூறலாம்.

பேரண்டம் அல்லது பிரபஞ்சம் யாராலும் படைக்கப்படவில்லை, நிலையாக இருந்துகொண்டிருக்கிற, மாற்றமடைந்துகொண்டே இருக்கிற பொருளால் (மேட்டர்) தானாக உருவானதுதான் அது என்பது இந்தத் தத்துவ மோதலின் எதிர்த்தரப்பு. சூரியன் போன்ற நட்சத்திரங்களும் பொருள்தான், சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கோள்களும் பொருள்தான், பூமியில் வாழும் உயிரினங்களும் பொருள்தான், உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற நிலமும் மலையும் காடும் நீரும் பாலையும் எல்லாமே பொருள்தான்.

கண்ணுக்குப் புலப்படுகிற எந்தப் பொருளிலும் பல அளவுகளில் கண்ணுக்குப் புலப்படாத சேர்மானமாக இருக்கிற அணுக்கள் பொருள்தான். அணுக்களாகிய பொருள்களின்  சேர்மானத்தைப் பொறுத்தே மண்ணும் தங்கமும் தண்ணீரும் பெட்ரோலும் பாறையும் உயிரினமும் உருவாகியிருக்கின்றன. கடவுளை நம்பாதவர் உடலில் இருப்பதும் பொருள்கள்தான், நம்புகிறவர் உடலில் இருப்பதும் பொருள்கள்தான்…

இப்படி, பொருளை மையமாகக் கொண்ட, அனைத்தும் பொருளால் ஆனதே என்ற வாதம்தான் பொருள்முதல்வாதம் என்ற ‘மெட்டீரியலிசம்’. சுருக்கமாக இதைப் ‘பொருளியம்’ என்றும் கூறலாம். பொருள்முதல்வாதம்’ என்றால் ‘பொருளாதாரமே முதன்மையானது’ (எகனாமிக்ஸ்) என்று புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

தமிழில் ‘பொருள்’ என்றால் ‘மேட்டர்’ எனப்படும் பருப்பொருள் என்ற பொருளும் இருக்கிறது, ‘பிராப்பர்ட்டி’ எனப்படும் ‘செல்வம்’ என்ற பொருளும் இருக்கிறது, ‘மீனிங்‘ எனப்படும் அர்த்தம் என்ற பொருளும் இருக்கிறதே! “பொருள் குவித்தவர்” என்றால் சொத்து சேர்த்தவர் என்று புரிந்துகொள்ளப்படுகிறதே! அந்த வகையில் பொருள் என்றால் பணம், சொத்து என்ற பொருளாதாரப் பொருளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

மார்க்சிய அறிஞர் பேராசிரியர் அருணன் மெட்டீரியலிசம் என்பது மேட்டர் என்ற பிரபஞ்ச மூலப் பொருளையே குறிப்பிடுகிறது என்பதால் அதைப் பிரபஞ்சவாதம் என்று குறிப்பிடலாம் என்கிறார்.

கடவுளால் படைக்கப்பட்டு, கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, கடவுளால் முடிவு செய்யப்பட்டு, கடவுளால் இயக்கப்படுவதே தனி மனித வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் என்பதை ஏற்றுக்கொண்டால், உலகத்தில் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள், ஏன் இத்தனை அநீதிகள், ஏன் இத்தனை கொடுமைகள், ஏன் இத்தனை போராட்டங்கள் என்று எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எல்லாம் கடவுளால் அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தியால் இயக்கப்படுவதுதான் என்று அமைதியாக இருந்துவிடலாம்.

ஆனால் யாரும் அப்படி இருக்க முடிவதில்லை. கடவுள் சித்தப்படி நடக்கிறது என்று யாராவது தேர்வுக்குப் படிக்காமல் இருக்கிறார்களா என்ன? தனக்கு வந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்களா என்ன? வாழ்க்கைத் தேவைகளுக்காக பணமீட்டுகிற வழிகளைத் தேடாமல் இருக்கிறார்களா என்ன?

அப்படியெல்லாம் சும்மா இருந்துவிட முடிவதில்லை என்பதே, உலகம் எந்தக் கடவுளாலும் படைக்ப்பட்டதில்லை என்பதற்குச் சான்றுதான்! கடவுளை இத்தோடு விட்டுவிடுவோம். இப்போது பொருளியம் என்ற பொருள்முதல்வாத அடிப்படையிலான ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம்’, ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’ பற்றிப் பார்ப்போம்.

“இயக்கவியல்” என்று சொல்கிறபோதே அதில் “இயக்கம்” வந்துவிடுகிறது. பேரண்டத்தில் எந்தப் பொருளுமே நிலையாக அசைவின்றி, மாற்றமின்றி இருப்பதில்லை. எல்லாமே மாறுகிறது. அந்த மாற்றம்தான் அசைவு. அந்த அசைவுதான் இயக்கம். அசைவு அல்லது இயக்கம் என்றால் ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவது மட்டுமல்ல. அந்தப் பொருள் தன்னளவிலேயே ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதும் மாற்றம்தான் இல்லையா? அந்த மாற்றமும் அசைவுதான், அந்த அசைவும் இயக்கம்தான்.

மண்ணில் விழும் விதை வேறு இடம் நகராமல் முளைவிடுவதும், செடியாவதும், மரமாக வளர்வதும் இயக்கமன்றி வேறென்ன? மரத்தில் துளிர்க்கும் இலை பச்சையாக இருப்பதும், பின்னர் உலர்ந்து போவதும், சருகாகிவிடுவதும் இயக்கமேயன்றி வேறு என்ன? சில மாற்றங்கள் விரைவாக நடக்கும், சில மாற்றங்கள் தாமதமாக நடக்கும். மண்ணில் விழுந்திடும் இலைகள் சில நாட்களிலேயே மக்கிவிடும், பிளாஸ்டிக் மக்குவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஆனால் நிச்சயமாக மாற்றம் நிகழும். இதைத்தான் ஆம், “மாற்றம்” ஒன்றைத் தவிர எல்லாமே மாற்றத்திற்குரியதுதான்.

இதை அப்படியே எல்லா உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். நடமாட்டமே இல்லாத மனிதர்களின் உடலிலும் ஒவ்வொரு நொடியிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மாற்றம் நிகழ்வதால்தானே குழந்தை வளர்கிறது, வளர்ச்சி குன்றுகிறது? மாற்றம் நிகழ்வதால்தானே நோய் வருகிறது, வந்த நோய் குணமாகிறது? மாற்றம் நிகழ்வதால்தானே வயதாகிறது, வாழ்க்கை முடிகிறது?

இவ்வாறு இயற்கையாகவே நடைபெறும் இந்த மாற்றங்களுக்கு அல்லது இயக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பது, ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு இயற்கையமைப்பிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கிற முரண்களுக்கு இடையேயான மோதல்தான். எல்லாப் பொருள்களிலும் முரண்கள் இருக்கின்றன, அந்த முரண்களுக்கிடையே மோதல் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த மோதலைப் போராட்டம் என்றும் சொல்லலாம்.

உங்களை இந்த பூமி தனது ஈர்ப்பு விசையால் உங்களைத் தன்னோடு வைத்துக்கொள்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி உங்கள் கால்கள் மேலெழுகிறது. இந்தப் போராட்டத்தில் நீங்கள் முன்னால் நடக்கிறீர்கள், ஓடுகிறீர்கள். ஒரு காயில் இருக்கும் வேதிப்பொருள்களுக்கிடையேயான முரண்களின் போராட்டத்தில் அது கனியாகிறது. கனியில் நடக்கும் போராட்டத்தில் அது அழுகிப்போகிறது. அழுகி விழுந்த கனியின் கொட்டை மண்ணில் புதைந்து திமிறுகிற போராட்டத்தில் புதிய தாவரம் எழுகிறது. நமது மூளையில் பதிவாகிற உணர்வுகள் முரண்களை ஏற்படுத்த, அப்போது தொடங்குகிற இயக்கத்தில் புதிய சிந்தனை பிறக்கிறது.

தாயின் கருவறையில் உருவாகும் சிசுவுக்குள் நிகழும் முரண்களின் போராட்டத்தால்தான் குழந்தையாகிறது, பின்னர் நடக்கிற போராட்டத்தில் பிறப்பு நிகழ்கிறது. பாயும் தண்ணீருக்கும் தடுக்கும் கரைக்கும் இடையேயான முரண் காரணமாகத்தான் வெள்ளப்பெருக்காகிறது. இதே இயக்கவியல் விதிப்படிதான் நிலத்தடி நீர் தேங்குகிறது. உங்கள் கற்பனையை விரித்து யோசிப்பீர்களானால், நீங்கள் பார்க்கிற, கேள்விப்படுகிற, அனுபவிக்கிற அத்தனை இயற்கை நிகழ்வுகளிலும் இந்த இயக்கமும் போராட்டமும் நிகழ்ந்துகொண்டே இருப்பதை உணரலாம்.

பொருள்கள் நிலையாக இருப்பதில்லை, தம்முள் இருக்கும் முரண்களின் மோதலில் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

இதை மனித சமுதாய வரலாற்றுக்குப் பொருத்திப் பார்ப்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதைப் பற்றி அடுத்த சந்திப்பில் பார்ப்போமே…

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here