இந்தியாவிலேயே முதன்முறையாக என கலைஞர் செய்த 5 சாதனைகள்

0
12658
views

1951 ஆம் ஆண்டு, திமுக வின் முதல் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணா அவர்களை பொதுச்செயலாளர் ஆக்க எல்லோரும் வழிமொழிந்து பேசிக்கொண்டிருந்தனர். இறுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் பேசத் தொடங்கினார்.

வாழ்வு மூன்று எழுத்து; வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; களத்திலே பெரும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து; அந்த அண்ணாவை தலைமை ஏற்க வழிமொழிகிறேன் என்று கூறியவுடன் மைதானமே கைதட்டலால் அதிர்ந்து கொண்டே இருந்தது. அண்ணா மைக்கை பிடித்த பின்பும் அந்த கர ஓசை ஓயவில்லை. அந்த இளைஞர் தான் கலைஞர் கருணாநிதி.

நூற்றாண்டை நெருங்கும் பொது வாழ்க்கை, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர், அரசியல் முதல் சினிமா வரை கலை, இலக்கியம் என எத்துறை எடுத்தாலும் இவரின் பங்கு என்பது இருக்கும்.

இந்தியா பல அரசியல்வாதிகளை கண்டிருந்தாலும் அவர்களில் மூத்த அரசியல் வாதி மட்டுமல்ல, அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக முதன்மையாக பல சாதனைகளை செய்துள்ளார் கலைஞர். அவற்றில் 5 சாதனைகளை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

இலவசங்களால் நம் நாடு நாசமாய் போனது என்று கூறுபவர்கள் உண்மையில் தமிழக வரலாறை தெரியாதவர்கள். இன்று இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்குவதற்கு காரணமே இலவசம் தான். இது பிச்சை கிடையாது. காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அனுபவித்து வந்த அனைத்தையும் ஏழைகள் பெற வேண்டும் என்பதற்கு இலவசமாக தந்து சமூக நீதி பேணியது 50 ஆண்டு கால திராவிட ஆட்சி தான்.

1 ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம்:

காமராஜர் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் அப்போது நிலவிய பஞ்சம் தான். தேர்தல் நெருங்கிய நேரம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு ஒரு படி அரிசி கொடுப்போம் என்றார் கருணாநிதி. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா. முடியும் என்று கூறினார் கருணாநிதி. திட்டமும் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையடையவில்லை. 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் அவர்கள் பதவியேற்றவுடன் மீண்டும் அத்திட்டம் கொண்டு வரப்பட்டு 1 ரூபாய்க்கு 1 படி அரிசித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக இதை செய்து காட்டியவர் கலைஞர்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம்:

விவசாயத்திற்கு பயன்படும் மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியவர் கலைஞர். இதன் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயம் செழுமை பெற்றது.

மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை தானே விற்க இந்தியாவிலேயே முதன்முறையாக உழவர் சந்தை அமைத்தது கலைஞர் தான். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டவர் கலைஞர்

குடிசை மாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம்

ஏழைகள் குடிசைகளில் வாழக்கூடாது என்பதற்காக தீ பற்றி எரியாத மேற்கூரை அமைத்து வீடுகள் கட்டித்தரும் குடிசை மாற்று வாரியம் இந்தியாவிலேயே அவர் தான் கொண்டு வந்தார்.

அதே போல கையை கொண்டு மக்களை ஏந்திச் செல்லும் ரிக்ஸா வை ஒழித்து சைக்கிள் ரிக்ஸாவை அவர்களுக்கு வழங்கினார் கலைஞர். குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து தண்ணீர் பஞ்சத்தையும் போக்கியவர் அவர் தான்.

சாதி ஒழிப்பு & மருத்துவம்

சாதி என்பது கிடையாது அனைவரும் சமம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும், எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்து சாதி ஒழிப்பை போக்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்தது கலைஞர் தான்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்து பல லட்சங்கள் செலவாகும் மருத்துவ செலவை இலவசம் ஆக்கியவர் கலைஞர். இன்று அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்ததும் கலைஞர் தான்.

 

கல்வி:

இந்தியாவிலேயே PUC வரை கல்வியை இலவசம் ஆக்கியவர் கலைஞர். மாணவர்கள் வெகு தூரம் சென்று கல்வி பயில வேண்டிய நிலை இருந்ததால், மக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை பேருந்து கட்டணத்திற்கே தரவேண்டி இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு இலவச பஸ் பாஸ் திட்டத்தை மாணவர்களுக்கு கொண்டு வந்தது கலைஞர் தான். இட ஒதுக்கீடை உறுதி செய்ததும், இந்தியாவிலேயே முதன்முறையாக சட்டக்கல்லூரியை அமைத்ததும் கலைஞர் தான்.

இந்த 5 திட்டங்கள் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஏன் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் அமைத்தது, அண்ணா நூலகம் அமைத்தது கலைஞர் தான். இந்தியாவிலேயே அரைநூற்றாண்டு காலம் தேர்தலில் தோற்காதவர் கலைஞர். இந்தியாவிலேயே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை சட்டம், திருமண உதவி திட்டம், நில உச்ச வரம்பு சட்டம், சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு என இந்தியாவிற்கு முதன்முறையாக முன்னோடித் திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இன்று பேசுபவர்களுக்கும் சேர்த்தே சமூக நீதிக்கான திட்டங்களை கொண்டு வந்தது தான் திராவிட ஆட்சி.

இன்றைக்கு தமிழக உரிமை பறிபோய் கொண்டிருக்கும் இந்த வேளையில் “இந்நேரம் மட்டும் அந்த அம்மா இருந்திருந்தால்” என்று எந்த அளவிற்கு குரல்கள் கேட்கிறதோ, அதை விட அதிகமாகவே “இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால்” என்கிற குரல்கள் கேட்கிறது என்கிறார்கள் அரசியல் அறிஞர்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நிற்கிறவர் கலைஞர் கருணாநிதி.

அரசியலில் அவர் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகளை பலர் சொன்னாலும் தமிழுக்கும், தமிழகத்திற்கும் அவர் செய்தது அளப்பரிய ஒன்று என்றால் மிகையாகாது. நூற்றாண்டை கடந்து வாழ வாழ்த்துகிறோம்.

(எங்கள் கட்டுரைகளுக்கு ஆதரவு தர நினைத்தால், நண்பர்களுக்கு பகிருங்கள்)

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here