கம்யூனிசம் தொடர் 4: வர்க்கம், வர்க்கப் போராட்டம்

0
995
views

கம்யூனிஸ்ட் மேடைகளிலும் புத்தகங்களிலும் வர்க்கம், வர்க்க வேறுபாடு, வர்க்கப் போராட்டம் என்ற சொற்பதங்கள் கையாளப்படுவதைக் காணலாம். கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் இருவரும் உலகத்திற்கு அளித்த ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம்,  “இன்றுள்ள சமுதாயத்தின் இதுவரையிலான வரலாறு என்பது வர்க்கப் போராட்ட வரலாறே,” என்றே தொடங்குகிறது. கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்லாமல், சமுதாய மாற்றத்தை நிகழ்த்தவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் விரும்புகிற, அதற்கான இயக்கங்களை நடத்துகிற எல்லோருமே இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

சமூகப் பாகுபாடுகளை ஒழித்துக்கட்ட வர்க்கப் போராட்டம் நடந்தாக வேண்டும். இந்தியச் சூழலில் சொல்வதானால், இங்கே சாதியச் சமுதாய அமைப்பைத் தகர்த்து சமத்துவச் சமுதாயத்தை நிலைபெறச் செய்ய வேண்டுமானால், சாதி ஒழிப்புப் போராட்டத்துடன் வர்க்கப் போராட்டம் இணைந்தாக வேண்டும். அதே போல் சாதி ஒழிப்பு என்ற இலக்கையும் இணைத்துக்கொள்ளாமல் இங்கே வர்க்கப் போராட்டம் முழு வெற்றியை அடைய முடியாது. பாலினப் பாகுபாடுகளை ஒழிப்பது, மதச் சண்டைகளுக்கு முடிவு கட்டுவது, மடமைகளைக் கொளுத்திவிட்டுப் பகுத்தறிவு ஒளியைப் படரச் செய்வது… எல்லாமே வர்க்கப் போராட்டத்துடன் இணைந்திருக்கின்றன. அரசியல் மாற்றங்களும் வர்க்கப் போராட்டப் பயணத்துடன் இணைந்தவையே. வர்க்கம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

‘ஒரு சொல் பல பொருள்’ என்று வகைப்படுத்தப்படுகிற சொற்கள் ஆங்கிலத்திலும் உண்டு. ‘கிளாஸ்’ (class) என்ற சொல்லுக்கு பிரிவு, வகை, வகுப்பு, உயர்தரம் என பல பொருள்கள் உண்டு. பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்துப் பொருள் மாறும். சமூகக் களத்தில் கிளாஸ் என்பது மக்களிடையே ஒரு குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரப் பிரிவைக் குறிக்கிறது. தமிழில் வகுப்பு என்றால் பள்ளிக்கூட வகுப்பறைதான் நினைவுக்கு வரும். ஆகவே, குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரப் பிரிவு என்று குறிப்பிடுவதற்கான சொல்லாக ‘வர்க்கம்’ என்ற சொல் எடுத்துக்கொள்ளப்பட்டது. வருக்கம் என்ற மூலத் தமிழ்ச்சொல், நடைமுறைப் புழக்கத்தில் வர்க்கம் என்றாகிவிட்டதாக மொழியறிஞர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

சமூகக் களத்தில் கிளாஸ் அல்லது வர்க்கம் என்கிறபோது, அடிப்படையில் பொருளாதார நிலை அடையாளப்படுத்தப்படுகிறது என்றாலும், அது மேலோட்டமாகப் பணக்காரர் – ஏழை என்ற நிலை மட்டுமே அல்ல. சிலர் அப்படி மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். மாறாக, தனது சுகத்துக்காக இன்னொரு பிரிவை ஒடுக்குகிற பிரிவும் வர்க்கம்தான். அந்தச் பிரிவால் ஒடுக்கப்படுகிற பிரிவும் வர்க்கம்தான். தனது ஆதாயத்துக்காக மற்றொரு பிரிவின் உழைப்பைச் சுரண்டுகிற பிரிவும் வர்க்கம்தான், அந்தப் பிரிவால் உழைப்பு சுரண்டப்படுகிற பிரிவும் வர்க்கம்தான்.

உழைப்புச் சுரண்டல் என்றால் என்ன?

இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருளை நேரடியாக நுகர்வதற்கு, அல்லது அந்தப் பொருளைப் பயன்படுத்தத்தக்க இன்னொரு பொருளாக மாற்றுவதற்கு அல்லது ஒரு நிலையில் இருக்கிற இயற்கைப் பொருளை வேறொரு நிலைக்கு மாற்றிக்கொள்வதற்கு ஒரு மனிதர் தனது கைகளையும் கால்களையும் பயன்படுத்துகிறார் என்றால் அது அடிப்படையான உழைப்பு. உடல் சார்ந்த இந்த உழைப்பை வழங்குகிறவர்களைத்தான் “கரத்தால் உழைப்போர்” என்கிறோம்.

கைகளையும் கால்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று மூளைதானே சிந்தித்து முடிவு செய்கிறது? அந்த மூளையின் செயல்பாடு கூட உழைப்புதான். இந்த உழைப்பை வழங்குவோரைத்தான் “கருத்தால் உழைப்போர்” என்கிறோம்.

மரத்தில் ஒரு கனி இருக்கிறது என்றால், அதைப் பறித்துச் சாப்பிடுவதை நேரடி நுகர்வுக்கான உழைப்பு எனலாம். கனியை உரித்துச் சுளையைப் பிரித்துச் சேகரித்து வைப்பது ஒரு உழைப்பு. சுளைகளைப் பதப்படுத்தி வைத்திருந்து பழச்சாறாக்குவது, சமையலுக்குப் பயன்படுத்திக் குழம்பாகவோ கூட்டாகவோ மாற்றுவது ஒரு உழைப்பு. இப்படியெல்லாம் செய்து பயன்படுத்தலாம் என்று அனுபவ அறிவின் அடிப்படையில் மூளை சிந்திப்பது ஒரு உழைப்பு.

இது என்ன கனி, சுளை என்று ரொம்பப் பழைய எடுத்துக்காட்டாக இருக்கிறதே என்கிறீர்களா? இரும்பை எடுத்து எதையாவது தட்டுவது, உடைப்பது நேரடி அடிப்படை உழைப்பு. அந்த இரும்பை உருக்கிக் கம்பியாக்குவதும் தகடாக்குவதும் இன்னொரு நிலைக்கு மாற்றுகிற உழைப்பு. இரும்புக் கம்பியைத் தீட்டி கத்தி முதல் பலமாடிக் கட்டடத்துக்கான கட்டுமான முறுக்குக் கம்பிகள் வரை செய்வது, இரும்புத் தகட்டை வளைத்து அலமாரி முதல் ரயில் பெட்டி வரையில் செய்வது ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாற்றுகிற உழைப்பு. இதில் கரத்தால் உழைப்பது மிகுதியாகவும், கருத்தால் உழைப்பது குறைவாகவும் இருக்கும்.

இதையெல்லாம் யோசித்து வடிவமைப்பது மூளையின் உழைப்பு. நவீன கணினியை ஒருவர் இயக்கி உலகத் தொடர்புகளோடு இணைவது ஒரு உழைப்பு. இதில் கருத்தால் உழைப்பது மிகுதியாகவும் கரத்தால் உழைப்பது குறைவாகவும் இருக்கும்.

மற்ற விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் முதுகுத்தண்டு நிமிர்ந்த பாலூட்டி இனமாக மனிதர்கள் வந்தார்கள். முதுகுத்தண்டு நிமிர்ந்ததால், அது வரையில் முன்னங்கால்களாய் இருந்த இரண்டு அங்கங்களும் தரையிலிருந்து விடுபட்டன. தரையில் ஊன்றி நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவகையில் இருந்த முன்னங்கால்களின் அமைப்பு, இப்போது அந்தத் தேவை இல்லாமல் போனதால் பிற்காலத் தலைமுறைகளில் மாற்றமடைகிறது. விரல்கள் நீள்கின்றன. கட்டை விரல் தனியாகப் பிரிகிறது. ஆம், இதுதான்  கை என்ற உறுப்பின் பரிணாமம். இது எந்தப் பொருளையும் பிடிப்பதற்கு, வளைப்பதற்கு, உடைப்பதற்கு, வீசுவதற்கு, மாற்றுவதற்கு ஏதுவாக இருக்கிறது. மரக்கிளையோ விலங்கின் எலும்போ அதைப் பிடிக்கிற, வளைக்கிற, உடைக்கிற, வீசுகிற, மாற்றுகிற செயல்பாடுதான் அத்தனை உழைப்புக்கும் தாய். கைகள் உழைக்க உழைக்கத்தான், அதுவரையில் மென்மையான, சுவையான, கொழகொழவென்ற (விலங்குகளுக்குப் பிடித்தமான?) மனிதக் கறியாக மட்டுமே இருந்த மூளை, உணர்வுகளைத் தொகுக்கிற, உணர்ந்ததைப் பகுக்கிற வேலைகளைச் செய்யத் தொடங்கியது. அதாவது சிந்திக்கத் தொடங்கியது.

மானுடவியல் வரலாறு தெரிவிக்கிற இந்தத் தகவலிலிருந்து ஒன்று தெளிவாகிறது. உழைப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கு ஆதாரம். ஒரு தனி மனிதர் தனக்காக மட்டும் உழைப்பதில்லை. சக மனிதர்களுக்காகவும் உழைக்கிறார். சக மனிதர்களின் பசி தீர்க்கவும், அவர்களை நோய்களிலிருந்து விடுவிக்கவும், பேரிடர்களிலிருந்து மீட்கவும், மேன்மையான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லவும் உழைக்கிறார்கள். மழை வெள்ளத்தில் ஊரே மூழ்கும் நிலை ஏற்படுகிறபோது, வேறுபாடுகள் பார்க்காமல் கூட்டாகச் சேர்ந்து தத்தளிக்கிறவர்களைக் காப்பாற்றவும், மேடான இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் தாங்களாக முன்வருகிறார்கள் பலர். அது எவ்வளவு மகத்தான உழைப்பு!

மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகத் தாங்களே முன்வந்து உழைப்பது மானுட இயல்பு சார்ந்த பண்பு. சிலர் தங்களுடைய சொந்த மகிழ்ச்சிக்காக மற்றவர்களை உழைக்க வைப்பது? அதுதான் சுயநல வேட்கை சார்ந்த உழைப்புச் சுரண்டல். அந்த உழைப்புச் சுரண்டல் பாரம்பரியமான  உள்ளூர் நிலத்திலும் நடக்கலாம், பொருள்களைத் தயாரிக்கிற உள்நாட்டுத் தொழிற்சாலையிலும் நடக்கலாம், உலகச் சந்தையை வளைத்திருக்கும் பன்னாட்டுத் தகவல்தொழில்நுட்ப அலுவலகங்களிலும் நடக்கலாம்.

இப்படித் தங்களுடைய வளத்திற்காகவும் நலத்திற்காகவும் மற்றவர்களுடைய உழைப்பைச் சுரண்டுகிறவர்கள் ஒரு வர்க்கம். அதுதான் சுரண்டல் வர்க்கம். அதுதான் ஒடுக்குகிற வர்க்கம். அனைத்திலும் உண்மையான அதிகாரம் செலுத்தும் வல்லமையோடு இருப்பதால் அதுதான் ஆளும் வர்க்கம்.

அந்த ஆதாய வர்க்கத்திற்காகத் தங்களுடைய வியர்வையையும் மூளைத் திறனையும் தாரைவார்த்தாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் ஒரு வர்க்கம். அதுதான் சுரண்டப்படுகிற வர்க்கம். அதுதான் ஒடுக்கப்படுகிற வர்க்கம். எல்லாவகையிலும் ஆளுமை அதிகாரத்திற்கு உட்பட வேண்டியிருப்பதால் அதுதான் ஆளப்படும் வர்க்கம்.

வர்க்கம் என்பது இனம், சாதி, மதம் போன்றதொரு பிரிவு அல்ல. அந்தப் பிரிவுகளிலாவது மக்கள்தொகை ஏறக்குறைய சம அளவில் இருக்கக்கூடும் (இந்தியாவில் மக்கள்தொகையில் மிகக்குறைவாக உள்ள ஒரு சமூகப்பிரிவு மற்ற எல்லாச் சமூகங்களையும் ஆள முடிவது எப்படி? அது தனிக்கதை, நிச்சயமாக அதைப் பிறகு பார்ப்போம்). ஆனால், வர்க்கப் பிரிவுகளை பார்த்தால், சுரண்டுகிற வர்க்கத்தினர் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பார்கள். அதன் சுரண்டலுக்கு உள்ளாகிற வர்க்கத்தினர் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பார்கள்!

சுரண்டல் அமைப்போடு தொடர்புடைய இதர சில சொற்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here