மோடி அரசின் “மாபெரும் கழிப்பறை ஊழல்” – சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்

2
8688
views

Swacch Bharat Mission – Gramin என்ற பெயரில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுப்பதற்கு மோடி அரசால் துவங்கப்பட்ட இத்திட்டத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான இந்த திட்டத்தின் மூலம் அக்டோபர் 2, 2019 க்குள் நாடு முழுவதும் திறந்த வெளி மலம் கழிப்பதை தடுக்க கழிப்பறை கட்டித் தரப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் திறந்தவெளி மலம் கழிப்பதற்கான பிரச்சாரங்கள் துவங்கப்பட்டு, அதற்காக பெருமளவு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டது.

மத்திய அரசின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 21 மாநிலங்கள் 100% திறந்தவெளி மலம் கழிப்பதை தடுத்த (ODF – Open defecation free) ஸ்டேட் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதாவது அக்டோபர் 2, 2014 முதல் தற்போது வரை 8.56 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 21 மாநிலங்கள், 460 மாவட்டங்கள், 2,08,653 பஞ்சாயத்துகள், 4,63,638 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 1.54 கோடி (1,54,36,971) கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் 100% ODF State ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கை எட்டியதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு.

ஊழலை வெளிப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை:

குஜராத் மற்றும் உத்திரகன்ட் மாநிலங்களில் ஆய்வு செய்த சி.ஏ.ஜி, இந்த இரு மாநிலங்களிலும் இன்னும் கழிப்பறைகள் முழுமையாக கட்டப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

குஜராத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 120 கிராம பஞ்சாயத்துகளில் சி.ஏ.ஜி ஆய்வு செய்தது. இதில் 29% வீடுகளில் இன்னும் சுகாதார வசதியையே பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 54,008 வீடுகளில் 15728 குடும்பங்களுக்கு இன்னும் சொந்த கழிப்பறையோ அல்லது பொது கழிப்பறை வசதியோ அரசு செய்து தரவில்லை. மாநில அரசு அறிவித்தது போல, குஜராத்தில் உள்ள மாவட்டங்கள் சுகாதார அமைப்பை பெறவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வல்சாத் மாவட்டத்தில், மொத்தம் 17423 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளன. சி.ஏ.ஜி அறிக்கைக்கு பதில் அளித்த காந்தி நகர் SBM-GRAMIN துணை ஆணையர், மோசமாக உள்ள17423 கழிப்பறைகளில் 2529 கழிப்பறைகள் புதிதாக மீண்டும் கட்டப்பட்டுள்ளது என்றார். குகா மற்றும் மஹ்வல் கிராமங்களில் இன்னும் ஒரு கழிப்பறை கூட கட்டப்படவில்லை என்று village square யில் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுரை ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மட்டுமல்ல உத்ரகாண்டும் தான்:

குஜராத் மட்டுமல்லாது உத்ரகாண்ட் மாநிலமும் ODF ஸ்டேட் என்ற நிலையை அடையவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உத்ரகாண்ட் மாநிலத்தில் 1143 கழிப்பிடங்கள் கட்டப்பட்டதாக கூறிய நிலையில், 63 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 41 கழிப்பிடங்களை காணவில்லை. 34 கழிப்பிடங்கள் தற்போது தான் கட்டப்பட்டு வருகிறது. 546 கழிப்பறைகள் தற்போது தான் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் 71% கழிப்பறைகள் சரியாக கட்டப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது சி.ஏ.ஜி.

SBM-Gramin என்ற திட்டம் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் அமைச்சராக மோடியின் நம்பிக்கைக்குரிய உமா பாரதி இருந்து வருகிறார். இந்த அமைச்சகத்திற்கு 2018-19 ஆண்டிற்கு மட்டும் 22,357 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் ஒதுக்கப்பட்டது. இதில் இந்த SBM-கிராமின் திட்டத்திற்கு மட்டும் 15,343 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கழிப்பறைகள் சரியாக கட்டவில்லை என்ற நிலையில் இந்த பணம் எங்கே சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கங்கையை சுத்தம் செய்ய மக்களின் வரிப்பணம் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், கங்கை சுத்தமாகாத நிலையில், தற்போது கழிப்பிடங்கள் கட்டுவதிலும் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் கழிப்பறைகள் சரிவர கட்டாத நிலையில், 100% கட்டப்பட்டதாக பொய்யான தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 மாநிலங்களில் இன்னும் எத்தனை மாநிலங்களில் கழிப்பறை கட்டாமலேயே கட்டியதாக கூறப்பட்டுள்ளது என்று இனிமேல் தான் தெரிய வரும்.

இன்னும் 10.3 மில்லியன் குடும்பங்களுக்கு கழிப்பறைகளை 12 மாதத்திற்குள் கட்டிதரப்படும் என்று அரசு கூறியுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 19 கழிப்பறைகள் கட்டப்போகிறது மத்திய அரசு. இது எப்படி சாத்தியம்? அவ்வளவு மோசமாக கழிப்பறைகள் கட்டப்படுவதையே இது காட்டுகிறது.

SBM-Gramin இணையதளம்:
http://swachhbharatmission.gov.in/sbmcms/index.htm
http://sbm.gov.in/sbmreport/home.aspx

CAG அறிக்கையை வாசிக்க:
https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Chapter_5_Rural_Sanitation_of_Report_No.39_of_2017_-_Performance_Audit_on_Ministry_of_Water_Resources%2C_River_Development_%26_Ganga_Rejuvenation_Union_Government.pdf

Young ambitious writer

2 COMMENTS

  1. விளங்கீரும்.கம்ப்யூட்டர் வச்சிருக்கிறவன் பூராவும் நியூஸ் சேனல் ஆரம்பிக்க தொடங்கீட்டாங்க.

  2. கருத்துக்களை மறுத்து பதிவிட வேண்டும். அதை விடுத்து புலம்பக் கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here