தனிமை – கண்ணீர் வரவைக்கும் சிறுகதை

0
1124
views

நான்கு மாதங்களுக்கு முன்பு கமலம் இறந்ததிலிருந்து சுப்புரத்தினம் உடைந்துவிட்டார். அவரது நடையும், பேச்சும், பார்வையும் தளர்ந்தே போயிருந்தன. அதுமட்டுமல்லாமல் தன் மகனின் சுட்டெரிக்கும் பேச்சுகளால் அவர் மிகவும் வருத்தத்தில் இருந்தார். இதையெல்லாம் விட அவருக்கு தனிமையே மேலும் மேலும் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது. என்னதான் வீரனாக இருந்தாலும் ஒரு ஆணுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு பெண்ணின் துணை தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

சுப்புரத்தினத்திற்கு வயது 75 தொட்டாலும் ஆள் செம திடகாத்திரமாகதான் காட்சி அளிப்பார். எப்பொழுதும் கண்ணைபறிக்கும் வெண்மையான கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிவார். வெளியே செல்லும் போதெல்லாம் கையில் ஒரு கைத்தடி, தோளில் துண்டும் அணிந்து தான் செல்வார். இதெல்லாமே கமலம் இருந்த வரைதான். ஆனால் இப்பொழுது அவரது உள்ளமே இருட்டடைந்து தான் இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல தனிமையின் கோர பசிக்கு தன்னையவே  இழந்து கொண்டிருந்தார்.

இப்படியாக கடந்து கொண்டிருந்த ஒரு நாளில்தான் அவரது மகன் துரை அவரை திட்டி தீர்த்துவிட்டான். இதற்கு மேல், தான் தனிமையில் இந்த வீட்டில் இருப்பது வீண் என நினைத்து எங்கேயாவது செல்வதே மேல் என்றெண்ணி அன்றிரவு வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது மூக்கு கண்ணாடி, கைத்தடி, துண்டு எடுத்துக்கொண்டு தனது மகன், மருமகள் வீட்டில் இல்லாத போது தன் மனைவி கமலத்தின் புகைபடத்திற்கு அருகே சென்று “நீ இல்லாத வீட்டில் என்னால் இருக்க முடியாது. இனி என் மீதி வாழ்க்கை எங்கேயோ கழியட்டும்”, என்று கூறிவிட்டு கமலத்தின் முகத்தை ஐந்து நிமிடங்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதுவரை பெயருக்காக மட்டும் சுப்புரத்தினத்தின் கைகளில் இருந்த கைத்தடி இன்றுதான் தனக்கான வேலையை செய்தது. தளர்ந்து இருந்த சுப்புரத்தினத்தின் முழு பாரத்தையும் தன்னகத்தே வாங்கிக்கொண்டு அவரை நடத்திக்கொண்டே தானும் நடந்து சென்றது. தனக்கு வயசானதே இப்பொழுது தான் உணர்ந்திருக்கிறார். சிறிது தூரத்திலேயே அவருக்கு கால் வலி ஆரம்பித்திருந்தது. அருகில் பயணிகள் நிழற்குடையில் இருந்த இரும்பு இருக்கையில் அமர்ந்தார். தனது கைத்தடியை அருகிலேயே சாய்வாக வைத்துவிட்டு தனது துண்டை எடுத்து தன் முகத்தை துடைத்துக் கொண்டார். மாடு தன் உணவை அசைபோடுறதும், மனிதன் தன் நினைவுகளை அசைபோடுறதும் ஓய்வான நேரத்தில் தான். இப்பொழுது அவரது இதயமும், மூளையும் கடந்து போன வாழ்க்கையின் நினைவுகளை  அசைபோட்டுக் கொண்டிருந்தன.

கமலத்தை கைபற்றியதிலிருந்து கமலம் கைவிட்டு போனது வரை முழுவதுமாக நினைத்துப்பார்த்தார். மேகம் கருக்கும்போது மழைநீரும், மனசு மருகும்போது கண்ணீரும் வருவதுதானே இயற்கை. மனதின் நினைவுகள் தந்த பரிசை தன் கண்கள் வழியே உலகுக்கு வெளிகாட்டினார் கண்ணீராய்.

இப்படி சுப்புரத்தினம் அழுதுகொண்டிருக்கும் போது தான் அந்த சத்தம் கேட்டது.

ஐயா… ஏன் அழுறீங்க?

ஐயா… ஏன் அழுறீங்க?

நினைவுலகில் இருந்த சுப்புரத்தினம் நிஜ உலகுக்கு வரும்பொழுதுதான் அவரது காதில் விழுந்தது..

ஐயா… ஏன் அழுறீங்க?

யாரப்பா அது? என்றார் சுப்புரத்தினம்.

“உங்களுக்கு நேராக இருக்கும் தெரு விளக்கு தான் ஐயா”

திடுக்கிட்டவராக, “நீ பேசுவயா என்ன”?

“ஆம் ஐயா. நாங்கள் பேசுவோம்”என்றது.

“நாங்களா”?

“ஆமாம். நான் , அதோ தெரிகிறதே அந்த குப்பைதொட்டி, அந்த டிராஃபிக் லைட், அந்த தபால் பெட்டி என நாங்கள் எல்லாரும் பேசுவோம்”.

“ஓ…நல்லது.”

“அதிருக்கட்டும் நீங்கள் ஏன் அழுது கொண்டிருந்தீர்கள்.”

“என்னோட வாழ்க்கையை நினைத்துத்தான். நான்கு மாதங்களுக்கு முன்பு என் மனைவி இறந்துவிட்டாள். அவள் இழப்பிற்கு பின் என்னால் தனிமையில் வாழ முடியவில்லை. மேலும் என் மகனுக்கும் என்னை பிடிக்காமல் போனது. எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறான். அதான் யாருக்கும் இனி பாரமாக இல்லாமல் என் தனிமையை உடைக்க எங்கேயாவது செல்லலாம் என்று வீட்டைவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது என் மனைவியின் நினைப்பு என்னை கலங்க வைத்துவிட்டது”. என்றார்.

“மன்னிக்கவும் ஐயா. நான் உங்களிடம் சில விசயங்களை பேசலாமா”? என்றது தெரு விளக்கு.

“கன்டிபாக பேசுங்கள். என்னிடம் யாரும் பேசவில்லையே என்றுதானே வருத்தப்படுகிறேன்”.

“ஐயா. நாங்கள் உயிரற்ற பொருட்கள் தான். எங்களுக்கு என்று யாரும் கிடையாது. தனிமை மட்டுமே எங்களுக்கான வாழ்க்கை. நாங்களே இப்போது வரை எந்த விதமான தனிமை எண்ணமும் இல்லாமல் தான் வாழ்கிறோம். அப்படி இருக்கையில் உங்களுக்காக உங்கள் மனைவி இப்பொழுது இல்லாமல் போனாலும் உங்களின் மகன், மருமகள்,  இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் இவ்வுலகில் கால் பதிக்க உள்ளார்கள். மேலும் அவர்களின்  பணிசுமையாலோ அல்லது வேறு காரணங்களாலோ உங்களை திட்டி இருக்கலாம். ஆனால் அதுவே நிரந்தரம் கிடையாது. எனவே நீங்கள் உங்களது மனதை மாற்றிக்கொண்டு உங்கள் பிள்ளையுடன் வாழ்வதே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்”. என்றது

“ஆனால், அவனுக்குதான் என்னை பிடிப்பதில்லையே. ஏதோ வேற்று மனிதனை பார்ப்பதைபோல் தான் பார்க்கிறான்”. என்றார்

“அப்படியெல்லாம் இருக்காது ஐயா. நீங்கள் இப்படி தனிமையில் கஷ்டப்படுவதினால் கூட உங்களை மாற்றுவதற்காக அப்படி செய்திருக்கலாம்”.

“எங்களுக்கு கொடுத்தது இவ்வளவுதான். உங்களை போன்று உயிரும் இல்லை, உறவுகளும் இல்லை, அந்த உறவுகள் இல்லாமல் போனால் வருத்தமும் இல்லை. எங்களுக்கே தனிமையில் வாழ பிடித்துவிட்டது. உங்களுக்கு என்ன ஐயா. உங்கள் பேர குழந்தைகளுக்கு கதைகளும் அவர்களுக்கு வாழ்க்கை அனுபவங்களும் சொல்வதென்றால் யார் சொல்வார்?. அவர்களுக்காகவாவது உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா”. என்றது குப்பைத்தொட்டி.

“ஆமாம் என் பேரகுழந்தைகளுக்காவது நான் இருக்க வேண்டும். ஏனென்றால் என் மனைவி அவர்களின் உருவங்களில் கூட எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது”. என்றார்.

“அப்புறமென்ன ஐயா. கிளம்புங்கள், உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். இனி தனிமையில் இருபதாக உணர வேண்டாம். நாங்களும் இருக்கிறோம். எப்பொழுது வேண்டுமானாலும் வாருங்கள். நாம் இப்படி பேசி தனிமையே இல்லாமல் செய்துவிடுவோம்”. என்றது டிராஃபிக் லைட்.

இவர்களின் துணையால் சுப்புரத்தினம் மீண்டும் பழைய கம்பீரத்துடன் நடைபோட்டு வீட்டுக்கு சென்றார். தனிமை என்பது தன் இனிமையே என மனதுக்குள் சொல்லிக்கொண்டார். வீட்டுக்கு சென்றவுடன் வீட்டின் மையபகுதியில் துரை உட்கார்ந்து இருந்தான். தன்னுடைய மனமாற்றத்தையும் தன் எண்ணத்தையும் சொல்வதற்கு சந்தோசமாக தன் மகனிடம் சென்றார் சுப்புரத்தினம்.

“எப்பொழுதும் உங்களுக்கு பொறுப்பே இருக்காதா? எங்கே போறோம் என்று கூட சொல்வதில்லை. வர வர உங்கள் நடவடிக்கை சரியில்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை. தனிமை தானே. இனி அதை விட்டுதள்ளுங்கள்” என்றான்.

மகனின் அந்த வார்த்தைகளில் மகிழ்ந்துபோனார் சுப்புரத்தினம்.

அப்பொழுது தான் துரை சொன்னான் “உங்கள் தனிமையை போக்க உங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட நினைத்திருக்கிறேன். நாளை நாம் அங்கு செல்ல வேண்டும்” என்றான்.

இதைவிட தன்னை உயிருடன் கொல்வதற்கு எந்த பொருளும் ஈடு இல்லை என்று தன் மனதுக்குள்ளே நினைத்து. ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு பின் அவர் அறைக்குச் சென்றார்.

மறுநாள் காலையில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் சுப்புரத்தினத்தின் நிலை புரியாமல் மகிழ்ச்சியாக தன் மகனுடன் பயணம் செய்கிறார் என்று நினைத்த தெருவிளக்கு ஒரு முறை எரிந்து அனைந்தது. நிலையில்லா தனிமையை மறக்க நிரந்தர தனிமை உலகத்திற்கு செல்லும் சுப்புரத்தினத்தை பார்த்து.

சிறுகதை ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here