தனது இறப்பிலும் சமூக நீதியை கற்றுக் கொடுத்த கலைஞர்

0
811
views

தமிழினத் தலைவராக அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. 50 ஆண்டு காலம் ஒரு இயக்கத்தின் தலைவராக பணியாற்றியவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். தனது வாழ்நாளில் 14 வயது முதல் சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவரான கலைஞர் அவர்கள், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

கலைஞர் வாழும் போது மட்டுமல்ல, இறந்த பின்பும் அவரது இறுதி சடங்கில் உருவான பிரச்சனைகள் மூலம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையை காட்டிச் சென்றுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் இறந்த பின்பு, அவரது ஆசைப்படியே அவரை அண்ணாவின் அருகே அடக்கம் செய்ய திமுக விரும்பியது. ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டிய அதிமுக அரசு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் அனுமதி தரமுடியாது என்று அறிக்கை வெளியிட்டது. இதனால் கலைஞர் மெரினாவில் தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது,

மெரினா பிரச்சனை:

இந்த பிரச்சனை திமுக வினரையும் தாண்டி, பொது மக்களையும் சமூக வலைதளங்களில் பேச வைத்தது. #மெரினா4கலைஞர் என்ற ஹெஸ்டேக்கை உருவாக்கிய இளைஞர்கள், கலைஞரை மெரினாவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

என்ன அரசியல் இருந்தாலும், ஒரு பெரிய அரசியல் தலைவர் இறந்து விட்டார். இதில் கூட மோசமான அரசியலை கையாளக்கூடாது என்றும், மனிதாபிமான அடிப்படையில் திமுக வைக்கும் கோரிக்கை என்னவாக இருந்தாலும் அதிமுக அதை ஏற்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தவர், பழம்பெரும் அரசியல் தலைவர், சமூக நீதிக்காக உழைத்தவரை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும், மாபெரும் தலைவரை இழந்த வீட்டில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் மக்கள் பேசத் தொடங்கினர்.

திமுக வழக்கறிஞர் அணி வழக்கு தொடர்ந்தது. அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. காலையில் தீர்ப்பு வருவதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருந்தது. மெரினா வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இந்த செய்தியை ராஜாஜி ஹாலில் இருந்த ஸ்டாலினிடம் ஆ.ராசா கூறுகிறார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய ஒரு மகனின் நிலையுடன், மக்களை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி, சரிந்து விழுந்து அழுதார் ஸ்டாலின். அவரது அந்த நிலையை கண்டு கண்ணீர் விடாத மனிதனே இருந்திருக்க முடியாது எனலாம்.

நமக்கான படிப்பினை’:

இதில் தான் நமக்கு ஒரு சமூக நீதியை கற்றுக்கொடுத்துள்ளார் கலைஞர். கலைஞரை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள், அதிமுகவினர், பொதுமக்கள் என எல்லோரும் கலைஞருக்கு மெரினா தர வேண்டும் என்று ஆதரவு கொடுத்ததற்கு காரணம், அவரது அரசியல் புகழ் மட்டுமல்ல. அதனை கடந்த ஒரு மனிதநேயம் தான். ஒருவரை இழந்த ஒரு வீடு, அவரது குடும்பம், உறவுகள், நட்புகள் என எல்லோரும் வேதனையில் இருக்கும் போது, அரசியல் செய்து சீண்டியது எல்லா தரப்பு மக்களையும் கலைஞருக்கு ஆதரவாக பேச வைத்தது.

இதே போன்று தான் தமிழகத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள்  இறந்து விட்டால், அவர்களின் இறுதி ஊர்வலத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்லக்கூடாது எனவும், அவர்களுக்கென்று தனிச் சுடுகாடில் தான் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசியல் செய்யப்படுகிறது. கலைஞருக்கு எப்படி மக்கள் ஆதரவு தந்தனரோ அதே போன்று ஆதரவை இம்மக்களுக்கு தரப்படுகிறதா என்றால் இல்லை என்பதே எதார்த்த உண்மை. ஒரு மாபெரும் தலைவரின் இறப்பால் நமக்கு ஏற்படும் மனிதநேயம், ஏன் சக மனிதனின் இறப்பால் நமக்கு ஏற்படவில்லை என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நம்மை தள்ளியுள்ளார் கலைஞர்.

கலைஞருக்கு எப்படி மெரினா மறுக்கப்பட்டதோ அதே போன்று தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொதுப்பாதை மறுக்கப்படுகிறது. ஒரு தலித் இறந்தால் அவரை எடுத்துச் செல்ல தனிப்பாதை, தனி சுடுகாடு என்ற நிலையே இன்றளவும் உள்ளது. இறந்த ஒருவரை தூக்கிச் செல்லும்போது என் பாதைக்குள், என் தெருவிற்குள் வரக்கூடாது என்று சொல்லும்போது, தடுக்கும் போது, இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஏற்படும் வலியை ஏன் நாம் உணர மறுக்கிறோம்.

சமீபத்தில் இச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சனையில் பிற மதத்தினர் பங்கு கொண்டால் உடனே சங்பரிவார்கள் உள்ளே புகுந்து கலவரத்தையும் ஏற்படுத்திவிட்டு செல்கிறார்கள். இது போன்று நடக்கும் சம்பவங்கள் தான் மனிதனுக்குள் இருக்கும் மனிதாபிமானமும், சமூக நீதியும் மறைய செய்கிறது.

இதை போக்கிட வேண்டும் என்பதற்காக தான் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் பெயரில் தமிழகம் முழுவதும் சமத்துவபுரத்தை துவக்கி வைத்தார். அதில் சாதி, மதம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் ஒரே பகுதியில் ஒரே மாதிரியான வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டன. அனைவருக்கும் ஒரு சுடுகாடு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றோ, “அவனை புதைத்த இடத்தில் என்னை புதைப்பதா” என சமத்துவபுர சுடுகாடுகள் பயன்படுத்தபடாமல் புதர் முண்டி கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதே வேளையில், இறுதி ஊர்வலம் என்ற பெயரில் ஆட்டம், பாட்டத்துடன் அடுத்தவருக்கு இடைஞ்சல் தரும் விதமாக வீர வசனங்களை எழுப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். சாதி ஒழிய வேண்டும் என்றே சமத்துவபுரத்தை உருவாக்கினார் கலைஞர். ஆனால் மண்ணில் உருவாகும் சமத்துவபுரத்தை விட மனதில் உருவாகும் சமத்துவபுரமே சமூக நீதியை கட்டிக்காக்கும்.

தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக உழைத்த அந்த மனிதன், தனது இறப்பிலும் சமூக நீதியை கற்றுக்கொடுத்து சென்றுள்ளார் என்றால் மிகையாகாது. சாதிகள் மறப்போம். மனிதநேயத்தை விதைப்போம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here