சைக்கிள் கனவை துறந்த சிறுமிக்கு புதிய சைக்கிள் வழங்கியது ஹீரோ நிறுவனம்

0
1056
views

தமிழகத்தை சேர்ந்த 9 வயது குழந்தை சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்திருந்தது நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் சிறுமியின் மனிதநேயத்தை பாராட்டும் விதமாக அவருக்கு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை பரிசாக தருவதாக அறிவித்திருந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம் சிறுமியிடம் சைக்கிளை ஒப்படைத்தது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி தான் அனுப்பிரியா. ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சியில் கேரளா வெள்ள செய்தியை பார்த்த அனுப்பிரியா, அம்மக்களின் துயர் துடைக்கும் விதமாக தான் சேமித்து வைத்த தொகை 9,000 ரூபாயை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த செய்தியை தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டன. சிறுமியின் உதவியால் நெகிழ்ந்து போன கேரள மக்கள், அனுப்பிரியாவை பாராட்டி ட்விட்டரில் எழுதி வருகிறார்கள்.

இது குறித்து அனுப்பிரியாவிடம் கேட்ட போது,

நான் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக நாலு வருசமா 9000 ரூபாயை சேமித்து வைத்தேன். கேரளாவில் வெள்ளம் போனதை டிவியில் பார்த்த போது, என் காசை அவர்களுக்கு கொடுக்க நினைத்தேன் என்றார்.

சிறுமி அனுப்பிரியாவின் மனிதநேயத்தை பாராட்டும் விதமாக ஹீரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி அவருக்கு ஒரு சைக்கிள் தருவதாக அறிவித்தது.

சரியான தருணத்தில் உங்களிடம் இருந்து வெளிவந்த அந்த மனிதநேயத்தை பாராட்டுகிறோம். உங்களுக்கு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தருகிறோம். உங்களது முகவரியை எங்களுக்கு அனுப்புங்கள் என்று ஹீரோ சைக்கிள் நிறுவனம் அறிவித்தது.

இதனையடுத்து ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் பங்கஜ் முஞ்சால் தனது ட்விட்டர் பக்கத்தில் அனுப்பிரியாவை பாராட்டினார்.

அனுப்பிரியா நீங்கள் ஒரு மனிதநேய பண்பாளர். உங்கள் மனிதநேய பண்பை பாராட்டுகிறேன். உங்களின் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு பைக்கை பரிசாக தருகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தமிழக சிறுமிக்கு உதவிய ஹீரோ நிறுவனத்தை கேரள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில், அனுப்பிரியாவின் தந்தை சண்முகநாதனை தொடர்பு கொண்ட விழுப்புரம் ஹீரோ ஷோரூம் மேனேஜர் மனோஜகுமார், சிறுமியின் மனிதநேயத்தை பாராட்டியதோடு, ஷோரூமுக்கு வரும் படி அழைப்பு விடுத்தார். தந்தை சண்முகநாதன், தாய் லலிதா அவர்களுடன் சென்ற சிறுமி அனுப்பிரியாவிற்கு நீல நிற ஸ்பிரிண்ட் 20T வகை சைக்கிளை பரிசாக அளித்தது ஹீரோ நிறுவனம்.

சிறுமி அனுப்பிரியாவின் மனிதநேயம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் எனலாம். எவ்வித பிரதிபலனையும் பாராமல் உதவி செய்த அந்த பிஞ்சு மனதிற்கு பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்திய ஹீரோ நிறுவனத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here