குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

1
1105
views

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சார்ந்த வன்முறை அதிகரித்து வரும் நிலையில் குழந்தை வளர்ப்பில்  கவனக்குறைவாக இருக்கும் பெற்றோரும் இத்தகைய தவறுகள் நிகழ  ஒரு காரணமாக அமைந்து விடுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை..

இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட  ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்….

* உங்கள் குழந்தை உங்களிடம் வரமாக கிடைக்கப்பெற்றது, குழந்தைகள் இல்லாத வேதனைகளை நீங்கள் அடையாமல் இருக்க இறைவனால் கொடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், குழந்தை வளர்ப்பு கூட ஒரு கலையே என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.

* ஆண் /பெண் என்கிற பாகுபாட்டினை அவர்களிடம் காட்டாதீர்கள், இருவரும் சமம் என செயல்படுங்கள்.

* உங்களது குழந்தை ஆணோ/பெண்ணோ எத்தனை வயதானாலும் அது நமக்கு குழந்தை தான், ஆனால் அடுத்தவர் பார்வைக்கு அப்படியல்ல, பிறரது கவனம் நம் குழந்தையின் செயல்பாட்டினை குறைத்துவிடும்.

* வீட்டிற்கு யார் வந்தாலும் திறந்த மேனியாக அவர்களை நிற்கவிடாதீர்கள். வெளியாட்கள் வந்தால் உடையின்றி அவர்கள் முன் வரக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* பள்ளிக்கு செல்லும் குழந்தையாக இருப்பின் அதனுடைய உடைகளை தானாக உடுத்த ஐந்து வயதில் இருந்து பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிக்கு அனுப்பும் ஆட்டோ, வேன் மற்றும் கார் அல்லது பள்ளியின் பேருந்து இவற்றின் ஓட்டுனர்களை பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ளுங்கள் அவர்களது செல்பேசி முதல் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் முகவரி வரை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

* குழந்தையிடம் பள்ளியின் ஐடென்டிடி கார்டு இருந்தாலும் தனியாக ஒரு நோட்டில் வீட்டின் முகவரி, பெற்றோரின் செல்பேசி எண்களை முழுதுமாக அதில் குறித்து வையுங்கள்.

* பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் குழந்தைகளை பெற்றோரில் ஒருவர் வாசலில் வரவேற்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பலநேரம் லிஃப்ட் ஆபரேட்டர்கள் மதிய நேரத்தில் வேலையில் இருக்கமாட்டார்கள். ஆகவே லிஃப்ட்களில் குழந்தைகளை தனியாக வர அனுமதிக்காதீர்கள்.

* குழந்தையுடன் சகஜமாக பழகுகிறார் என வீட்டில் வாட்ச்மேன், லிஃப்ட்மேன் இவர்களோடு விளையாடவோ பேசிக்கொண்டிருக்கவோ அனுமதிக்காதீர்கள்.

*அப்பா இல்லாத நேரத்தில்  நன்கு அறிமுகமில்லாத ஆண்கள் யார் வந்தாலும் அவர்களை வீட்டில் அனுமதித்துவிட வேண்டாம்…அம்மாவை அழைத்து அவர்களிடம் விபரம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

*காலிங்பெல் அழைத்த உடன் ஓடிச்சென்று கதவை திறக்கும் குழந்தைகளை அவ்வாறு செய்யகூடாது என அறிவுறுத்துங்கள். லென்ஸ் வழியாக வெளியே நிற்பவர் யார் என தெளிவாக கண்டபிறகு கதவை திறக்க வேண்டும். விளையாட்டிற்காக லென்சில் விரலை வைத்து மூடும் நபர்…விரலை எடுக்கும் வரை கதவை திறக்கவே கூடாது.

* பள்ளிவிட்டு வரும் குழந்தையை வரவேற்று அன்றாடம் பள்ளியிலும் வாகனத்திலும் நிகழ்ந்தவற்றை கேட்டறிந்துகொள்ளுங்கள்.

*தினமும் அவர்களது பள்ளி பைகளை திறந்து பார்த்து பரிசோதனை செய்யுங்கள், அவர்களிடமில்லாத பொருட்கள் அல்லது புதிய பொருட்களை கண்டால் அதை எடுத்து குழந்தைகளிடம் கேளுங்கள். இது யாருடையது, யார் கொடுத்தது என தெரிந்துகொள்ளுங்கள் அப்படி யாரிடமும் எந்த பொருளும் வாங்கியிருந்தால் இனிமேல் அதுபோல வாங்க வேண்டாம் என கூறிவிடுங்கள்.

* பெற்றோர் தவிர யார் என்ன பொருள் வாங்கி கொடுத்தாலும் அதனை பெற்றோரின் அனுமதியின்றி பெற கூடாது என கூறி வையுங்கள்.

* பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெற்றோர் பக்கத்து வீடுகளில் சாவியை கொடுத்துவிட்டு மகன்/மகள் வந்தால் கொடுங்கள் என கூறி அலுவலக பணிகளில் இருக்கிறார்கள். பள்ளிவிட்டு வந்த குழந்தை தானாக சாவி வாங்கி திறந்து பெற்றோர் வரும் வரை  வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. முடிந்தவரை இதனை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் அவர்களை பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது

* முந்தைய காலங்களில் முதியவர்கள் நம் வீடுகளில் இருந்தவரை குழந்தைகளை துரத்தும் பாலியல் வன்மங்கள் தூரமாக இருந்தது. தாத்தாவின் இரும்பு கேட் போன்ற கால்களை தாண்டியும், பாட்டிகளின் கண்காணிப்பு கேமரா போன்ற கண்களை ஏமாற்றியும் அந்நியர் யாரும் வீட்டில் நுழைந்துவிட முடியாது. ஆகவே பெற்றோர்களை முடிந்தவரை வீட்டில் வைத்து பராமரிப்பதால் நம் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் அவர்களுடைய தனிமை போக்கப்படும்.

* குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன கவலை என்று அலட்சியமாக இருக்காதீர்கள்… மாறுபட்ட குணாதிசயங்களை உடைய பல வீட்டு குழந்தைகள் படிக்கும் சமூகத்தில் வாழும் அவர்களுக்கு மன உளைச்சலும் , ஆற்றாமையும் நிச்சயமாக இருக்கும். ஆகவே அடிக்கடி அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினைகள் என்னவென்று காதுகொடுத்து கேளுங்கள். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்ட அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

* வீட்டிற்கு வரும் அத்தை,மாமாவிடம் குழந்தையை நிறுத்தி மாமாக்கு ஒரு டான்ஸ் ஆடு, அத்தைக்கு ஒரு பாட்டு பாடு என கூறி சங்கடப்படுத்தாதீர்கள். அவர்கள் கூச்சப்படும் போது மிருகக்காட்சி சாலையில் உள்ள பிராணிகளை போல அவர்களை மிரட்டாதீர்கள்.

*எந்த காரணம் கொண்டும் யாருடனும் அவர்களை ஒப்பிட்டு பேசாதீர்கள். வீட்டிற்கு வருபவர்களிடம் உங்கள் குழந்தைகளை பற்றி தரக்குறைவான விமர்சனங்களை கூறி அவர்களை அவமானம் செய்யாதீர்கள்.

* உடை விஷயத்திலும், உணவு விஷயத்திலும் எது நல்லது எது கெட்டது என எடுத்துக்கூறி அவர்களுக்கானதை மட்டும் தேர்ந்தெடுக்க கூறுங்கள்.

* எல்லோருக்கும் எல்லாவிதமான ஆடையும் பொருந்திப்போவதில்லை..ஆகவே நம் குழந்தைக்கு என்ன உடை பொருத்தமாக இருக்கிறதோ அவற்றை மட்டும் வாங்கி அணிவிப்போம். அதுபோல குழந்தைகளின் உடைகளில் அதிக கவனம் செலுத்தி முடிந்தளவு முற்றிலும் உடல் மூடிய ஆடைகளை அணிவியுங்கள்.

* கேட்டதையல்லாம் வாங்கி கொடுத்து அவர்களது மனதை கெடுக்காதீர்கள்

* தாய் தந்தை இருவரும் குழந்தைகளுக்காக படும் கஷ்டங்களை அவ்வப்போது மென்மையாக எடுத்துக்கூறுங்கள்

* இன்றைய கால பெண்கள் டிவி சீரியலிலும் , வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற சமூகவளைத்தளங்களிலும் மூழ்கி கிடப்பதால் அவர்களுக்கு கணவர் என்ன செய்கிறார், குழந்தை என்ன செய்கிறது என்கிற அக்கறையில்லை, வேளைக்கு உணவளித்து விட்டால் கடமை முடிந்தது என இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு

* குழந்தை எதற்காவது வந்து கூப்பிட்டால் அதனை அசட்டை செய்யாதீர்கள், அவர்களுக்காக நிறைய நேரத்தை ஒதுக்குங்கள், அவர்கள் கூறுவதை பொறுமையாக கேளுங்கள், எனக்கு நேரமில்ல போ..  என்று விரட்டிவிடாதீர்கள்.

* வேளா வேளைக்கு  உணவு கொடுப்பதையும் உறங்க வைப்பதையும் கடமையாக செய்யுங்கள்.

* பெண்கள் இப்போது குழந்தைகளுக்கு மூக்குச்சிந்துவதை கூட அசிங்கமாக கருதுகின்றனர். அப்படியல்லாமல் அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் முழுநேரமும் கவனித்தபடி இருங்கள்.

* டியூசன் கிளாஸ், கம்பியூட்டர் கிளாஸ் போன்றவற்றிற்கு தூரமான பகுதிகளை தேடாதீர்கள்..முடிந்தவரை வீட்டிலேயே படிக்க வையுங்கள்.

* கடைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் முடிந்தவரை அவற்றை தவிர்த்தல் நலம்.

* குழந்தைகள் கையில் காசு புரள அனுமதிக்காதீர்கள், எது கேட்டாலும் மெற்றோரே உடன் சென்று வாங்கி கொடுத்தல் நல்லது.

* அங்கம்பக்கத்து வீடுகளில் குழந்தைகளை விளையாட அனுப்பினால் அடிக்கடி அவர்களை எட்டிப்பார்த்துக்கொள்ளுங்கள். ஒருமணிநேரத்திற்கு மேலாக அங்கு இருந்தால், அவர்களை அழைத்து ஒரு நோட்டம் பார்த்துக்கொள்ளுங்கள்.

*மாலை நேரங்களில் குழந்தைகளை படிக்க வைக்க பழக்குங்கள், அவர்கள் படிக்கும் போது டிவி பார்க்கவோ பக்கத்து வீட்டில் அரட்டையடிக்க கிளம்பவோ செய்யாதீர்கள், அவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருங்கள். வீட்டுப்பாடங்களையும் படிப்பையும் முடித்த பிறகு டிவியில் கவனம் செலுத்துங்கள்.

* பரிட்சை நேரங்களில் குழந்தையை ஒரு அறையில் படி என்று கூறிவிட்டு மறு அறையில் அப்பா கிரிகெட் மேட்ச் பார்ப்பது, அம்மா சீரியல் பார்ப்பது கூடாது. அது அவர்கள் மனதை பாடத்தில் செல்ல விடாது. முடிந்தவரை பரீட்சை நேரங்களிலாவது டிவிக்கு ஓய்வு கொடுங்கள். இது குழந்தைக்காக நாம் செய்யும் தியாகம் என நினைத்துக்கொள்ளுங்கள்.

* மாலை நேரங்களில் பெண்கள் வீடுகளைவிட்டு சொந்தபந்த வீடுகளுக்கு சென்று குடும்பக்கதைகள் பேசுவதை, அடுத்த வீட்டு நியாயங்களை புறம் பேசுவதை தவிர்த்துவிடுங்கள்

* குழந்தைகள் முன் சண்டையிடுவது, தகாத வார்த்தை பேசுவது, அடுத்தவரை குற்றம் குறை காண்பது இவற்றையல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள், அதுபோல பெற்றோரை மனது புண்படும்படி குழந்தைகளின் முன் ஏசாதீர்கள்.

* அனைவருக்கும் மரியாதை கொடுக்கவும் பணிவுடன் நடக்கவும் கற்றுக்கொடுங்கள்.

வசதிகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் நாம் இருந்த இடத்தை விட்டு வேறு வேறு தரப்பு மக்கள் வாழும் பகுதிகளில் குடியேறுகிறோம்..நமக்கு அக்கம்பக்கம் இருப்பவர் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்கமாட்டோம்..ஒரே ஊரில் ஒரே சொந்தபந்தங்களுடன் வாழ்ந்த நமக்கு சமூக விரோதிகள் மற்றும் பாலியல் வக்கிரர்கள் பற்றிய பயம் இல்லாமல் இருந்தது. ஆனால் யாருக்கு யார் என்றே தெரியாமல் வாழும் நகரச்சூழலில் நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய ஒவ்வொரு பெற்றோரது கடமையாகும்.

எழுத்தாளர்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here