எதற்குமே சிபாரிசு செய்யாத காமராசர், இவர்களுக்கு சிபாரிசு செய்தார்

0
1495
views

காமராசர் அவர்கள் தனது பதவியை பயன்படுத்தியோ அல்லது அதிகாரத்தை பயன்படுத்தியோ எந்த ஒரு சிபாரிசும் செய்ததில்லை என்று தான் நாம் படித்திருக்கிறோம். ஆனால் காமராசர் வரலாறை முழுவதுமாக படித்தால், தனது அதிகாரம் மூலம், இருவருக்கு காமராசர் சிபாரிசு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இருவரில் ஒருவர் காமராசரின் நண்பர், இன்னொருவர் காமராசரின் குரு. இருவருக்கும் உதவியது சிபாரிசு என்பதை விட, அது கடமை என்று உணர்ந்திருந்தார் காமராசர். யாருமே கேள்விப்படாத வரலாறை கண்முன்னே கொண்டு வருகிறது இக்கட்டுரை.

தோழர் ஜீவாவிற்கு உதவி செய்த காமராசர்:

காங்கிரஸ் கட்சியில் காமராசர் அவர்கள் சேர்வதற்கு மிக முக்கிய காரணம் ஜீவா என்ற பா.ஜீவானந்தம். அவர் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் தான் காமராசர். கட்சியில் இருவரின் நட்பும் அன்பும் பிறரை வியக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த சாதிய ஆதிக்கத்தால், கட்சிலிருந்து விலகினார் ஜீவா. பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே வீட்டு வாடகை கட்ட முடியாமல், தாம்பரத்தில் முன்பு வசித்து வந்த குடிசை வீட்டிற்கு மாறினார்.

                        தோழர் ஜீவாவுடன் காமராசர்

அங்கு தங்கியிருக்கும் குடிசைவாசிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் போராடி வந்தார் ஜீவா. அச்சமயத்தில் தாம்பரத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றை திறந்து வைக்க முதல்வர் காமராசர் சென்ற போது, அருகில் தங்கியிருக்கும் ஜீவா வையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பினார். காரணம் அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியதே ஜீவா அவர்கள் தான். காரை ஜீவா வீட்டிற்கு போகச் சொன்னார் காமராசர்.

“நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகளே புகழ்ந்து கூறிய ஜீவா, ஒழுகும் குடிசை வீட்டில் வசிந்து வந்ததை பார்த்த காமராசர் கண் கலங்கிப் போனார். என்ன இந்த வீட்டுல இருக்கீங்க என்று காமராசர் கேட்க, நான் மட்டுமா எல்லோரும் இது போன்ற வீடுகளில் தான் வசிக்கிறார்கள் என்றார் ஜீவா. இருவரும் உட்கார்ந்து பேசுவதற்கு கூட நாற்காலி கூட வீட்டில் இல்லை. நீ அடிக்கல் நாட்டிய பள்ளியை திறக்கப் போகிறேன். அதான் உன்னையும் அழைத்துப் போக வந்தேன் என்றார் காமராசர்.ஜீவாவோ, நீ முதலமைச்சர், நீ திறந்தால் போதாதா நான் எதற்கு என்று மறுத்த போதும், காமராசர் காட்டிய பிடிவாதத்தால் சரி நீ முதலில் போ நான் பின்னால் வருகிறேன் என்றார் ஜீவா.

விழா தொடங்கியது. ஜீவா வரவே இல்லை. அரை மணி நேரத்தை தாண்டியது. ஜீவா வந்தார். லேட் பண்ணிட்டியே என்று காமராசர் ஜீவாவை திட்டினார். “நல்ல வேஷ்டி ஒன்னு தான்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காயவைத்து கட்டிட்டு வர தாமதமாகிடுச்சு. தப்பா நினைச்சுக்காதே” என ஜீவா சொன்னதை கேட்டதும் எதற்கும் கலங்காத காமராசர் கலங்கிப் போய்விட்டார்.

ஜீவா விற்கு உதவி செய்ய நினைத்த காமராசர், ஜீவாவுடைய நண்பர்களை அழைத்துப் பேசினார். அவனைப் போன்ற தியாகிகள் இப்படி கஷ்டப்படக்கூடாது. வீடு கொடுத்தால் போகமாட்டான். கார் கொடுத்தால் வாங்கமாட்டான். வேறு எதாவது செய்யலாம் என நினைக்கிறேன். என்ன செய்யலாம்? என்று கேட்டார். அப்போது ஜீவாவின் நண்பர் ஒருவர், ஜீவா வின் மனைவி படித்தவர்.அவருக்கு ஒரு பள்ளியில் அரசு வேலை கொடுத்தால் கொஞ்சம் கஷ்டம் தீரும் என்று அவர் கூறியதும் காமராசர் அளவில்லா சந்தோசம் அடைந்தார்.

நான் கொடுத்தேன்னு தெரிஞ்சா அவன் மனைவியை வேலை செய்யவிட மாட்டான். அதுனால நீங்களே ஜீவா மனைவியிடம் பேசி வீட்டுக்கு பக்கத்துல இருக்க பள்ளிக்கூடத்துல ஒரு வேலை இருக்கின்னு சொல்லி மனு போடச் சொல்லுங்கள். நான் வேலை போட்டுத் தருகிறேன். இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது என சொல்லி அனுப்பி வைத்தார். அந்த வேலை கிடைத்த பின்பு தான் ஜீவாவின் குடும்ப வறுமை கொஞ்சம் ஒழிந்தது.

தனது தாயார், தனது உறவினர் என்று யாருக்குமே சிபாரிசு செய்து உதவிகள் செய்யாத காமராசர் தனது நண்பர் ஜீவாவிற்கு செய்தார் என்று சொன்னால், ஜீவாவின் மீது காமராசர் வைத்திருந்த மதிப்புக்கு இணை எதுவுமில்லை. தனது வாழ்நாளில் இறுதிவரை மக்களுக்காக உழைத்த ஒரு தியாகிக்கு காமராசர் செய்தது சிபாரிசு என்பதை விட, காமராசரின் கடமை என்பதே எதார்த்த உண்மையாகும்.

பெரியாரை மதித்த காமராசர்:

காமராசர் என்ற முதல்வர் நமக்கு கிடைத்ததற்கு காரணமே தந்தை பெரியார் தான். தனது இளம் வயதில் தந்தை பெரியாரின் பேச்சில் ஈர்க்கப்பட்ட காமராசர், இளைஞராக இருந்த போதே, பெரியாரை அழைத்து பொதுக் கூட்டத்தை நடத்தியவர். அரசியலில் தனது குருவாக தந்தை பெரியாரையும், சத்தியமூர்த்தியையும் நினைத்தார் காமராசர்.

பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுவிடம், பெரியார் வழிகாட்டுகிறார். நாம் செயல்படுகிறோம். காலம் காலமாக அடிமைப்பட்டிருந்த நம்மை பெரியார் மீட்டிராவிட்டால் நம்ம நிலைமை இப்படியா இருந்திருக்கும். அவர் சொல்றார், நான் செய்யுறேன் என்றார் காமராசர். பெரியார் செய்ய சொன்ன அனைத்தையும் செய்தார் காமராசர்.

               தந்தை பெரியாருடன் காமராசர்

பெரியார் மீது வைத்திருந்த பற்று காரணமாக, தனது அதிகாரம் மூலம் பெரியாருக்கு பக்கபலமாக இருந்துள்ளார் காமராசர். எந்த மீட்டிங் சென்றாலும் காமராசரின் ஆட்சியை புகழத் தவறாத தந்தை பெரியார், இந்தியா கொண்டு வரும் அடக்கு முறைகளை எதிர்த்து போராடுவதை நிறுத்தவே இல்லை. காமராசர் ஆட்சியில் இருக்கும் போது தான், தேசிய கோடி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினார். அச்சமயங்களில் அரசாங்கம் கைது நடவடிக்கைகளை எடுக்கும்போதும், பெரியாரை மட்டும் அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதற்கு காரணம் காமராசர். உண்மையில் பெரியார் நடத்திய பல போராட்டங்களை ஆதரித்தவர் காமராசர். அவர் போராட்டத்தை காட்டியே, நேருவிடம் பேசி தமிழகத்திற்கு நல்லது செய்வது தான் காமராசரின் ஹைலைட்.

தட்சினா பிரதேசம் அமைக்க நேரு முற்பட்ட போது, மக்களிடம் அதனை எதிர்க்க வைக்கும் பொறுப்பை காமராசர் தந்தை பெரியாரிடம் கொடுத்துள்ளார் என்று வெளிப்படையாகவே பேசினார் மா.பொ.சி. அந்த அளவிற்கு தந்தை பெரியாரின் போராட்டத்தை காரணம் காட்டியே, பெரியாரின் நோக்கத்தை நிறைவேற்றியவர் காமராசர்.

1956 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. பர்மா வழியாக அவ்விரு நாடுகளுக்கும் செல்வதற்காக திட்டமிடப்பட்டு பெரியாரோடு நான்கு நபர்கள் செல்வது என்றும் முடிவானது. விசா உள்ளிட்ட எல்லா வேலைகளும் முடிந்த நிலையில், நாளை காலை ஏழு மணிக்கு கப்பலில் செல்வதாக இருந்தது. பயணச்சீட்டு வாங்கச் சென்ற போது, கப்பல் பயணம் செய்ய வேண்டுமானால், அரசிடம் இருந்து NOC பெற வேண்டும் என்று கப்பல் நிர்வாகம் அறிவித்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள் பெரியாரின் உதவியாளர்கள். காரணம் அப்போது மாலை 6 மணி ஆகிவிட்டது. இனி எப்படி அரசிடம் இருந்து சான்றிதழை பெற முடியும், பெரியாருக்கு தெரிந்தால் பயணத்தையே ரத்து செய்து விடுவாரே என்று கவலை கொண்டனர்.

விசயத்தை மணியம்மையிடம் கூறினார்கள். உடனே முதலமைச்சர் காமராசரை சென்று சந்திக்க சொன்னார். இது பெரியாருக்கு தெரிய வேண்டாம். தெரிந்தால் முதலமைச்சரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பார் என்றார். காமராசரை அவரது இல்லத்தில் சந்தித்த போது, காலை கோட்டைக்கு வாருங்கள். பத்து மணிக்கு சான்றிதழ் போட்டுத் தருகிறேன் என்றார். ஐயா மன்னிக்க வேண்டும் நாளை காலை ஏழு மணிக்கே கப்பல் சென்றுவிடும் என்றார்கள். என்னப்பா இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள். சரி நீ காலைல வா. பெரியார் கண்டிப்பா மலேசியா போவார் என்றார் காமராசர்.

ஆனால் உதவியாளர்கள் தயங்கிய படியே நின்றனர். உடனே தனது உதவியாளரை அழைத்த காமராசர், அந்த கப்பல் உரிமையாளர் சதக் தம்பிக்கு போனப் போடு என்றார். இந்தப்பா நாளைக்கு உன் கப்பல் எழு மணிக்கு பதிலா, மதியம் ஒரு மணிக்கு எடுங்க. முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவித்து விடுங்கள். NOC வாங்கிட்டு பெரியார் வர லேட் ஆகும். அதுனால கப்பல் லேட்டா எடுங்க. தம்பி நல்லா கேட்டுக்க போறது நம்ம பெரியார் தெரியும்ல என்றார். அதை போலவே கப்பலும் தாமதாக சென்றது. இது எதுவுமே தந்தை பெரியாருக்கு தெரியாது.

தனது அதிகாரம் மூலம் எந்த காரியத்தையும் தனக்கு சாதகமாக செய்யாத காமராசர், தந்தை பெரியாருக்காக கப்பலையே நிறுத்தச் சொல்லி அதிகாரமாக பேசினார் என்று சொன்னால் தந்தை பெரியார் மீது காமராசர் வைத்திருந்த மதிப்பும், மரியாதையையுமே காரணமாகும்.

காமராசர் முதலமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்காக சேவை செய்துள்ளாரே தவிர, தனி நபர்களுக்காக தனது அதிகாரத்தையோ சிபாரிசோ செய்தார் என்றால் அது தந்தை பெரியாருக்கும், தோழர் ஜீவாவிற்கும் தான். இருவருக்குமே செய்ய வேண்டியது கடமை என்று உணர்ந்திருந்தார் கர்ம வீரர் காமராசர்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here