கம்யூனிசம் 2; காதலுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் என்ன தொடர்பு?

1
659
views

கம்யூனிசம் பற்றிய இத்தொடருக்கான முன்னுரையைப் படித்துவிட்டுப் பல தோழமைகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர், எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனது பொறுப்பைக் கூட்டியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. அதேவேளையில், ஒரு பெரிய சுழலில் நானாகப் போய் சிக்கிக்கொண்டேனோ என்பது போன்ற எண்ணமும் ஏற்படுகிறது! தொடங்கியதை உருப்படியாகத் தொடர வேண்டுமே என்ற கவலை மட்டுமே அதற்குக் காரணமல்ல. சிலர், நான் வரலாறு சொல்லப்போவதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற காரணமும் இருக்கிறது. ‘குட்நியூஸ்’ அறிவிப்பில் கூட ‘வரலாற்றுத் தொடர்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

கம்யூனிசத்தைப் புரிந்துகொள்வதற்கான இந்த உரையாடலை நான் வழக்கமான வரலாற்றுத் தொடராக வைத்துக்கொள்ளப் போவதில்லை. உலக அளவிலும், உள்நாட்டளவிலும் மாநிலத்திலும் கம்யூனிச இயக்கங்களின் வரலாறுகளைச் சொல்வதற்குப் பல அருமையான நூல்களை மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் வழங்கியிருக்கிறார்கள். புத்தகக் கடைகளிலும் இணையத் தேடல் தளங்களிலும் அவை கிடைக்கின்றன. தேடிப் படிக்கிற முனைப்புதான் நமக்குத் தேவை. தேதிகளும் இடங்களும் நிகழ்வுகளுமாகிய வரலாற்றுக் குறிப்புகளின் அடித்தளம் என்று எதை நான் நினைக்கிறேனோ அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இங்கே நான் செய்யப்போவது கம்யூனிசத் தத்துவத்தின் இயற்கையியல், அறிவியல், அழகியல், அரசியலியல், சமூகவியல், வரலாற்றியல், வாழ்க்கையியல் ஆகியவை தொடர்பான எனது புரிதல்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதுதான். என்னை ஒரு கம்யூனிசக் காதல் பிறவியாய் ஆக்கியவை அந்தப் புரிதல்கள்தான், அப்படியே வைத்திருப்பவை அந்தச் சிந்தனைகள்தான். அவற்றைப் பகிர்கிறபோது சில வரலாற்றுத் தலங்களுக்குப் போய் வரக்கூடிய வாய்ப்பும் அமையலாம். இவற்றைப் பகிர்வதாலேயே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதற்கான தகுதியை நான் மேலும் கொஞ்சம் வளர்த்துக்கொள்ளலாம். ஆம், இதில் எனது சுயநலமும் இருக்கிறது!

ஏது ஆவணச்சான்று?

என்னைப் பொறுத்தவரையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு முக்கியமானது ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பது. நான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருக்கிறேன். அதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றுகள் இருக்கின்றன. ஆனால் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறேனா? அதற்கு நான் என்ன சான்றுகளைக் காட்டிவிட முடியும்?

இப்படிச் சொல்லலாம் – கம்யூனிஸ்ட்டாக இருக்க முயல்கிறேன். முயன்றுகொண்டே இருக்கிறேன். என்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வைத்துக்கொள்ள எனக்குள் நானே போராடுகிறேன். போராடிக்கொண்டே இருக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க, கட்சியின் அமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளைப் பின்பற்றுகிறவராக இருந்திட வேண்டும். கம்யூனிஸ்ட்டாக இருப்பதற்கு ஒரு தன்னிலைப் போராட்டம் நடத்திட வேண்டும். இயற்கையையும் உலகத்தையும் சக உயிர்களையும் மனிதர்களையும் புரிந்துகொள்வதற்கான போராட்டம் அது. நேசிப்பதற்கான போராட்டம் அது.

கம்யூனிஸ்ட் யார்? எப்படிப்பட்ட போராட்டம்? எப்போது பார்த்தாலும் அரசியல் பிரச்சனைகள், சமூகச் சிக்கல்கள், ஆளும் வர்க்கங்களின் சுரண்டல்கள், ஆளப்படும் வர்க்கங்களின் எழுச்சிகள் பற்றிய சிந்தனைகளுடனேயே இருப்பவர்தான் கம்யூனிஸ்ட்டா? ஒரு கம்யூனிஸ்ட் நிச்சயமாக இந்தச் சிந்தனைகளோடும் செயல்பாடுகளோடும் இருப்பார். ஆனால் இந்தச் சிந்தனைகளோடும் செயல்பாடுகளோடும் நின்றுவிட மாட்டார்.

காதலாய் ரசனையாய்

ஒரு கம்யூனிஸ்ட் ஆகச் சிறந்த காதலராக – அதாவது – காதல்மனம் கொண்டவராக இருப்பார். இருக்க வேண்டும். பாலினப் பாகுபாடற்ற தொடர்புகளையும் பாலியல் உறவுகளையும்தான் இப்படிச் சொல்வதாகச் சிலர் புரிந்துகொள்ளக்கூடும். பாலின வேறுபாட்டுத் தொலைவுகள் இல்லாமல் நெருங்கிப் பழகுவதை உடனே படுக்கையறையோடு தொடர்புபடுத்திக் கற்பனை செய்து மனம் புழுங்குகிறவர்களைப் பார்க்கிறோம், முதுகுக்குப் பின்னால் அவர்கள் கிண்டலடிப்பவர்களைக் கேட்கிறோம். ஒரு கம்யூனிஸ்ட் அப்படிப்பட்டவராக இருக்க மாட்டார்.

நான் இங்கே சொல்ல வந்தது, பெற்றோரின் இயக்கத்தால் தற்செயலாய் நமக்குக் கிடைத்த இந்த அரிய புவிவாழ்க்கை மீதான காதல். சக மனிதர்கள் மீதான காதல். உண்மையாகவே மனிதருக்கு முன்தோன்றிய மூத்த குடிகளான அனைத்து உயிர்களின் மீதான காதல். உயிரிகள் அல்லாத புவிப் பொருள்களின் மீதான காதல். புவியின் மீதான காதல். இந்தப் புவியை இணைத்துள்ள சூரியக் குடும்பத்தின் மீதான காதல். சூரியக் குடும்பம் உள்ளிட்ட பால்வெளியின் மீதான காதல். பால்வெளிகளாலான அண்டங்கள் மீதான காதல். அண்டங்கள் சூழ் பேரண்டத்தின் (பிரபஞ்சம்) மீதான காதல்.

அப்படியான கம்யூனிஸ்ட் மனதில் இனம், நாடு, மொழி, சாதி, மதம், பணம் என்ற பாகுபாட்டு உணர்வு குடியேறாது. ஏற்கெனவே குடியேறியிருந்தால் வெளியேற்றப்பட்டுவிடும்.

பொதுவாகக் காதல் என்றால் என்வென்று புரிந்துவைத்திருக்கிறோம்? மனிதப் பிறவிகள் இருவர் ஒருவரையொருவர் விரும்பித் தேர்வு செய்து உறவு கொள்வதையே காதல் என்கிறோம். அந்தக் காதல் ஒரு உரிமை. மனித உரிமைகளில் அடிப்படையான ஒன்று, ஒருவர் தனது தேர்வுப்படி மற்றொருவரைக் காதலிக்கிற உரிமை. ஒரு கம்யூனிஸ்ட் அந்தக் காதல் உரிமைக்காக நிற்பார். வெளியே உள்ள காதலர்களுக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, தனது வீட்டில் காதல் கொடி உயர்ந்து பறப்பதற்கான காற்றாக இருபபார். உடனே யாராவது, “அப்படியானால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்களா,” என்ற நியாயமான கேள்வியைக் கேட்க நினைக்கலாம். கேளுங்கள். அதுதான் உரையாடலின் அழகு. நான்தான் சொல்கிறேனே, அப்படி இருப்பவர்தான் கம்யூனிஸ்ட்.

காதலராக இருப்பதன் இன்னொரு கிளைதான் ரசிகராக இருப்பது. ஒரு கம்யூனிஸ்ட் இருபத்து நான்கு மணிநேரமும் கண்கள் சிவக்க ஆவேசமாகப் பேசிக்கொண்டும் போராட்டக்களத்தில் சுழன்றுகொண்டும் இருக்க மாட்டார். இடமும் சூழலும் அப்படி இருக்க வலியுறுத்துமானால் அதற்குத் தயாராகவே இருப்பார் என்பது வேறு விசயம்.

கம்யூனிஸ்ட்டின் பெருவிருப்பம்

உலக நடப்புகளை, வாழ்க்கை நிகழ்வுகளை ரசிக்கிறவர் கம்யூனிஸ்ட். அழகியலைப் பாராட்டுகிறவர், கவிதையைச் சீராட்டுகிறவர், கதை கேட்கிறவர், கதை சொல்கிறவர், கலைகளைக் கொண்டாடுகிறவர் கம்யூனிஸ்ட். நல்ல ரசிகராய் இருப்பதாலேயே நல்ல விமர்சகராகவும் தகுதி பெறுகிறவர் கம்யூனிஸ்ட். கவிதையையோ கதையையோ கலைப்படைப்பையோ ஒரு கம்யூனிஸ்ட் விமர்சிப்பது, அவற்றைக் குதறிப்போடுவதற்காக அல்ல. அவற்றைச் செம்மைப்படுத்துவதற்காக. அவற்றின் சமூகப் பயன்பாட்டிற்காக. கலை இலக்கியத்தை விமர்சிப்பதே அவற்றைச் செம்மைப்படுத்துவதற்காக என்றால், அரசியல் உள்ளிட்ட உலக நடப்புகளையும், குடும்பம் உள்ளிட்ட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர் விமர்சிப்பது அவற்றை முற்போக்கான திசையில் மாற்றுவதற்காகத்தான் என்று விளக்க வேண்டுமா என்ன?

இந்தக் காதல், ரசனை என்ற இரண்டு அடிப்படைகளிலிருந்தே இவற்றைத் தான் மட்டுமல்லாமல், எல்லோரும் அனுபவிக்கிற நிலை வர வேண்டும் என்ற பெருவிருப்பம் உள்ளவாகிறாகிறார் ஒரு கம்யூனிஸ்ட். ஒரு பொது இடத்தில் நடக்கிற ஒரு அநீதியைத் தட்டிக் கேட்பது அந்தப் பெருவிருப்பம் காரணமாகத்தான். அது, சாலையில் நடக்கிற முறைகேடாக இருக்கலாம் அல்லது தொழில்வளர்ச்சி என்ற பெயரில் ஊரின் இயற்கை வளத்தை நஞ்சாக்குகிற திட்டமாகவும் இருக்கலாம். சாதிய ஆணவக் கொலையாகவும் இருக்கலாம், மாதரை இழிவு செய்யும் மடமையாகவும் இருக்கலாம். ஒதுக்கப்பட்டோரின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிற பிரச்சனையாகவும் இருக்கலாம், வழிபாட்டின் பெயரால் மனிதம் சிறுமைப்படுத்தப்படுகிற பகுத்தறிவற்ற செயல்களாகவும் இருக்கலாம்.

நேரலை விவாதங்களுக்காக அழைக்கிற தொலைக்காட்சி அன்பர்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைப்பேன்.

“கம்யூனிஸ்ட் என்றால் சும்மா பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும், அரசியல் விவகாரங்களுக்கும் மட்டும் அழைக்காதீர்கள். பேரண்டத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் எமக்குக் கண்ணோட்டம் உண்டு, அக்கறை உண்டு, ஈடுபாடு உண்டு. ஆகவே அறிவியல், பண்பாடு, கல்வி, வரலாறு, இயற்கை, சுற்றுச்சூழல், சமூகம், ஊடகம், காதல், சாதி, மதம், பாலினம், பாலியல், விளையாட்டு, உளவியல், குழந்தைமை என்று விவாதப் பொருள் எதுவானாலும் கம்யூனிஸ்ட்டுகளை அழையுங்கள்.”

இதைப் புரிந்துகொண்டு இதர கருப்பொருள்கள் மீதான விவாதங்களுக்கு அழைக்கிற ஊடகவியலாளர்கள் சிலரே. மற்றவர்கள் இன்னமும் கம்யூனிஸ்ட் என்றாலே கூலி உயர்வுக் கோரிக்கை பற்றியும் அரசியல் போராட்டங்கள் பற்றியுமே பேசக்கூடியவர்கள் என்ற முடிவோடு அத்தகைய விவாதங்களுக்குத்தான் அழைக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுக்கான இந்த அடிப்படைகளிலிருந்து தொடங்குகிற நாம், அடுத்த கட்டமாக, கம்யூனிசம் பற்றிய உரையாடல்களில் கையாளப்படும் சொல்லாடல்களுக்குள் புகுந்து வருவோம்.

(உரையாடல் தொடரும்)

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here