கம்யூனிசம் என்றால் (6): இரண்டு பக்கம் இழுக்கிற முரண்பாடுகள்

0
972
views

“பொருள்கள் நிலையாக இருப்பதில்லை, தம்முள் இருக்கும் முரண்களின் மோதலில் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாதம். இதை மனித சமுதாய வரலாற்றுக்குப் பொருத்திப் பார்ப்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம்,” என்று பார்த்தோம். இது தொடர்பாக விவாதிக்க விரும்பிய ஒரு நண்பர், “வேறு ஏதோவொன்று குறுக்கிடாத வரையில் எந்தப் பொருளும் மாற்றமில்லாமல் நிலையாகத்தானே இருக்கிறது,” என்று கேட்டார்.

எழுதுகிற பணி இத்தகைய கேள்விகளால்தான் முழுமையடைகிறது என்பதால், அவர் இப்படிக் கேட்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்துவிட்டு, “மனிதர்களோ விலங்குகளோ இயற்கையான வேறு நிகழ்வுகளோ குறுக்கிடாதபோதும் பொருள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. முழு மாற்றம் அடைவதற்குக் காலம் அதிகமாகலாம், அவ்வளவுதான்,” என்று கூறினேன்.

“ஒரு காகிதத்தை நாம் கிழிக்கிறபோது அது துண்டுக் காகிதமாகிறது, துண்டுக் காகிதத்தை மேலும் கிழிக்க அது குப்பையாகிறது. நாம் கிழிக்காமல் விட்டுவைத்தால் அந்தக் காகிதம் உலர்ந்து காய்ந்து மக்கிப் போவதற்குச் சிலபல ஆண்டுகள் ஆகும் அவ்வளவுதான்,” என்றேன்.

“அப்படியானால், அழியாத பொருளே இல்லையா,” என்று மறுபடியும் கேட்டார் நண்பர்.

“பொருளுக்கு அழிவே இல்லை,” என்று சொன்னேன். என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புதிராகப் பார்த்தார் அவர்.

மாற்றமே நிரந்தரம்

ஆம், பொருள் மாறிக்கொண்டேதான் இருக்குமே தவிர அழியாது! அந்தக் காகிதத்தையே எடுத்துக்கொண்டால், அது காகிதமாக உருவெடுப்பதற்கு முன் மரப்பட்டைக் கூழாக இருந்தது. மரப்பட்டைக் கூழாக மாறுவதற்கு முன் மரப்பட்டையாக இருந்தது. வெறும் மரப்பட்டையாக மாறுவதற்கு முன் மரமாக இருந்தது. அதற்கும் முன்னால் செடியாக இருந்தது… காகிதத்தைக் கிழித்தெறிந்தால் அது துண்டுக் காகிதங்களாக மாறுகிறது. துண்டுக் காகிதங்கள் குப்பையாக மாறுகின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போனபோது குறுக்கிட்ட நண்பர், “காகிதத்தைக் கிழிக்காமல் தீயிட்டு எரித்துவிட்டால்?…” என்று கேட்டார்.

“எரித்தால் சாம்பலாக மாறுகிறது. சாம்பல் எதுவோடு கலக்கிறதோ அதுவாக மாறுகிறது. மண்ணோடு சாம்பல் கலந்தால் அதுவும் மண்ணாக மாறுகிறது, அல்லது அதுவரையில் வெறும் மண்ணாக இருந்தது இப்போது சாம்பல் கலந்த மண்ணாக மாறுகிறது. இப்போதுதான் சாம்பல் கலந்த சிமென்ட் தயார் செய்கிறார்களே…” என்றேன். அவரது மூளையில் புரிதல் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதை, அவரது முகத்தின் புன்னகை என்ற மாற்றம் காட்டியது.

தனி மனிதர்கள் மட்டுமல்லாமல் மனிதக் கூட்டமாகிய சமுதாயமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆதி மனிதர்கள் போல அதற்கடுத்த கட்டத்தில் வந்த மனிதர்கள் இல்லை. அவர்களைப் போல அதற்கடுத்த கட்டத்தில் வந்தவர்கள் இல்லை, அடுத்தடுத்த கட்டங்களிலும் மாற்றங்களுடனேயே வந்தார்கள். இன்றைய மனிதர்கள் முற்கால மனிதர்களிடமிருந்து எவ்வளவு மாறியிருக்கிறார்கள்! எதிர்கால மனிதர்கள் நம்மிடமிருந்தும் மாறியிருப்பார்கள்.

வரலாற்றின் அடித்தளம்

இந்த மாற்றங்களின் தொடர்ச்சிதான் வரலாறு. எப்படி ஒவ்வொரு பொருளிலும் இருக்கிற உட்கூறுகளின் முரண்களால் மாற்றம் நிகழ்கிறதோ அதே போல, மனித சமுதாயத்தில் இருக்கிற முரண்களால் மாற்றம் நிகழ்கிறது. ஒரு நிலையில் இருக்கிற சமூகம், அதே நிலையில் தொடர்ந்து இருக்க முயல்கிறது. அப்படி இருக்கவிடுவதில்லை என்று அதே சமூகத்தின் எதிர்க்கூறுகள் முயல்கின்றன. இந்த முரண்பாட்டில், எதிர்க்கூறுகள் வலுவடைய வலுவடைய சமூகம் மாறுகிறது.

நம் கண் முன்னால், நாம் வாழ்கிற சமூகத்திலேயே நடப்பவற்றைக் கவனித்தாலே போதும், மாற்றம் நிகழ்வதைப் புரிந்துகொள்ளலாம். ஊருக்குள், பொதுவெளியில் சில பிரிவு மனிதர்கள் நுழையவே கூடாது என்று பிரித்து வைத்திருந்ததுதானே இந்தக் கோரச் சமுதாயம்? சில பிரிவு ஆசாமிகளுக்கு மட்டுமே சாமிகளுக்குப் பூசை செய்யும் தகுதிகள், சில பிரிவு ஆட்களுக்கு மட்டுமே கல்வித் தலங்கள், சில பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க அதிகாரங்கள், சில பிரிவினருக்கு மட்டுமே வணிக வாய்ப்புகள், இதர பிரிவுகளில் வைக்கப் பட்டவர்களுக்கோ “மேலே” தங்களை வைத்துக் கொண்டவர்களுக்காக உழைக்கிற கடமைகள் என்ற பிரிவினை மிக வலுவாக இருந்ததுதானே “பெருமைக்குரிய” நம் பாரம்பரியம்?

அந்தப் பிரிவினை ஏற்பாடுகள் அப்படியே தொடர்வதற்காக, அதெல்லாம் இறைவனின் தீர்மானப்படி செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்று நம்பவைக்கும் புராணங்கள் புனையப்பட்டன, அந்தப் புராணங்களின் அடிப்படையில் சமயங்கள் கட்டப்பட்டன. பிரிவினைகள் தொடர அனுமதிக்க முடியாது என்ற எதிர் முயற்சிகளும் முளைவிட்டன, வேரூன்றின, வளர்ந்து பரவின. இந்த இரு வேறு நிலைகளின் மோதலில், எதிர் முயற்சிகள் வலுப்பெற வலுப்பெற சமுதாயத்தில் எத்தனை மாற்றங்கள்! சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்காக எனக் கல்விக்கூடங்களிலும் அரசுப் பணிகளிலும் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு முக்கியமான மாற்றம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் வந்ததும், அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதும் ஒரு முக்கியமான மாற்றம்.

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு பெருமைச் சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த பெண்கள் இன்று சமூக வாழ்வின் சகல துறைகளிலும் சாதிக்கிறார்களே, அது ஒரு முக்கியமான மாற்றம் இல்லையா? பெண்களுக்கு அப்படியெல்லாம் கதவுகளைத் திறந்துவிடக்கூடாது, அப்படித் திறந்துவிட்டால் சமுதாயமே நாசமாகப் போய்விடும் என்று எத்தனை முட்டுக்கட்டைகள் போடப்பட்டன! அந்த முட்டுக்கட்டைகள் முறிக்கப்பட்டது முதன்மையானதொரு முன்னேற்றம் இல்லையா?

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். அதேவேளையில், இன்று இட ஒதுக்கீட்டு நியாயங்களுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இட ஒதுக்கீட்டால் தகுதி புறக்கணிக்கப்படுகிறது என்றும், அதனால் தேசத்தின் முன்னேற்றம் தடைப்படுகிறது என்றும் வாதிடப்படுகிறது. பெண்கள் கட்டுப்பாடின்றித் திரிவதுதான் சமூக ஒழுங்கீனங்களுக்கெல்லாம் காரணம் என்பது போன்ற பொருமல்களும் ஒலிக்கின்றன. இயற்கையே ஆணை விடப் பெண்ணைத் தாழ்ந்த நிலையில்தான் உருவாக்கியிருக்கிறது தெரியுமா என்று கேட்கப்படுகிறது. இவையெல்லாம், சமுதாயத்தை மாறவிடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறவர்களும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகள்.

ஒரு வகையில், இவர்களும் கூட மாற்றத்தை விரும்புகிறவர்கள்தான் – அதாவது, தற்போதுள்ள முன்னேற்றங்களும் தடுக்கப்பட்டு சமூகம் பழைய அடிமைப்பட்ட நிலைமைக்கு மாற வேண்டும் என்று விரும்புகிறவர்கள்! அவர்கள் வெற்றிபெற்றுவிடலாகாது என்ற அக்கறையோடு சமூகநீதிக்காகவும், பாலின சமத்துவத்துக்காகவும் போராடுகிறவர்களும் முனைப்போடு இயங்குகிறார்கள். இவ்வாறு இரண்டு பக்கங்களிலுமாக இழுத்துக்கொண்டிருக்கிற முரண்பாடான சக்திகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? அது, இதைப் படித்துக்கொண்டிருக்கிற நீங்கள் எந்தப் பக்கத்தில் சேர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

உள்ளூரும் உலகமும்

முரண்பாடுகளின் மோதலில் நிகழ்கிற மாற்றங்களே வரலாறு நெடுகிலும் பதிவாகியிருக்கின்றன. இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அல்லது வரலாற்றுப் பொருள்முதல்வாதம். வரலாற்றியல் பொருளியம் அல்லது வரலாற்றுப் பொருளியம் என்றும் இதைக் குறிப்பிடலாம். உலகம் முழுவதும் மானுட வாழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களின் வரலாறு என்பது, சமூக முரண்களுக்கிடையேயான முரண்களின் மோதல்கள்தான். எந்தவொரு நாட்டிலும், அந்த நாட்டின் எந்தவொரு மூலையிலும் இப்படிப்பட்ட முரண்களின் மோதல்கள் நடந்திருக்கின்றன, இன்றைக்கும் நடக்கின்றன.

சமூகம் மாறுவதும் முன்னேறுவதும் நல்லதுதானே? அதை எதற்காகச் சில சக்திகள் எதிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும்? வர்க்கப் பிரிவினைகளும் வர்ணப் பிரிவினைகளும் அடிப்படையில் எந்த நோக்கத்திற்காக வகுக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் தொடராமல் அடிபட்டுப் போய்விடுமே, அதற்காகத்தான்!

மானுட வரலாற்றைத் தனிப்பட்ட நாயகர்களது சாகசங்களாக, அவர்களைச் சார்ந்த கூட்டங்களின் சாதனைகளாகப் பதிவு செய்துவந்த வழக்கமான கண்ணோட்டத்திலிருந்து விலகி, இப்படிப்பட்ட சமூக முரண்களுடைய மோதல்களின் விளைவாகப் பார்க்கிற ஒரு அறிவியல் அணுகுமுறைதான் மார்க்சியம். இந்த வரலாற்றுப் பொருளியத்தின் அடிவேராக இருப்பவை உற்பத்தி மூலங்கள், உழைப்பு சக்திகள். உள்ளூர் ஆதிக்கங்கள் முதல் உலகத்தையே வளைத்துப்போட்ட பேரரசுகள் வரையில், வட்டாரப் பேட்டைகள் முதல் வானளாவிய வல்லரசுகள் வரையில் நரம்பாக இருப்பது சமூக உற்பத்தியும் அந்த உற்பத்தியின் பலன்களைக் களவாடுகிற சுரண்டல் புத்தியும்தான். தொடர்ந்து பேசுவோம்.

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here