கம்யூனிசம் என்றால் – 3; இடதுசாரிகள் என்போர் யார்?

0
3676
views

அரசியல், அறிவியல், அழகியல் என மானுடச் சமூக வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் செயல்படுகிற சமத்துவ இயற்கைச் சித்தாந்தமாகிய கம்யூனிசத்துடன் கைகுலுக்குவதற்கு முன்பாக இத்துடன் இணைந்ததாகப் புழக்கத்தில் இருக்கிற சில சொல்லாடல்களைத் தெரிந்துகொள்வோம் என்று சென்ற கட்டுரையை முடித்திருந்தோம். இப்போது அந்தச் சொல்லாடல்களிடம் செல்வோம்.

பொதுவாக ஊடகங்களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் பற்றிச் சொல்கிறபோது “இடதுசாரி இயக்கங்கள்” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. மார்க்சியர்களை அடையாளப்படுத்த “இடதுசாரிகள்” என்ற சொல் கையாளப்படுகிறது. அதென்ன இடதுசாரி?

அதிலும், வலது கை புனிதமானதாகவும், இடது கை புனிதக்குறைவானதாகவும் கருதப்படுகிற இந்தியச் சூழலில் இடதுசாரி என்ற கருத்தாக்கத்தை எடுத்துச் செல்வது ஒரு சவாலான பணிதான். உணவு உண்ணுதல், பொருள்களை எடுத்து வைத்தல், புத்தகப் பக்கங்களைப் புரட்டுதல் உள்ளிட்ட செயல்களுக்கு வலது கையைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இடது கையைப் பயன்படுத்துகிறவர்கள் மிகக்குறைவு. பிறப்போடு இணைந்த உடலின் செயலமைப்பு காரணமாகச் சிலர் குழந்தைப் பருவத்திலிருந்தே இடது கையை இதற்கெல்லாம் பயன்படுத்துகிறவர்களாக இருப்பார்கள். அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காகப் பெற்றோர்களும் மற்ற பெரியவர்களும் படுகிற/படுத்துகிற பாடு இருக்கிறதே…

அய்யோ! வீட்டுக்கு வருகிறவர்களுக்குக் குழந்தை இடது கையால் தண்ணீரோ வேறு பொருள்களோ எடுத்துக்கொடுக்கிறதென்றால், “சே… எந்தக் கையால் கொடுக்கிற? வலது கையால கொடு,” என்று பதறிப்போய் சொல்வார்கள். வருகிறவர்களும்,  இடது கையால் தங்களுக்குப் பொருள்கள் தரப்படுவதை ஒரு அவமதிப்பாக எடுத்துக்கொள்கிற விருந்தினர்களும் இருக்கிறார்கள். இப்படி இயல்பை மீறி இடதுகைப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வற்புறுத்துவது குழந்தையின் சீரான மூளை வளர்ச்சிக்குத் தடையாகிவிடும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

இயற்கைக் கடனை முடித்த பிறகு உடல் கழுவுவதற்காக – போலி நாசூக்கில்லாமல் சொல்வதானால் குண்டி கழுவுவதற்காக – இடது கையைத்தான் மிகப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இடது கை புனிதக் குறைவானது என்ற எண்ணம் ஆழமாக அழுத்தமாக மனங்களில் பதிந்துபோயிருக்கிறது. உணவகங்களுக்கு வரக்கூடிய ஒரு வெளிநாட்டவர் இரண்டு கையாலும் தோசையைப் பிய்த்துச் சாப்பிடுவது கிண்டலோடு பார்க்கப்படுகிறது. இப்படி அவரவர் உடலிலேயே இடது கை புனிதக் குறைவான செயலுக்கு என ஒதுக்கப்பட்டிருப்பது போலத்தான், சமுதாயத்திலும் அந்தப் பணிகளைச் செய்கிற மக்கள் புனிதமற்றவர்களாக ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் (போகிறபோக்கில் இதையெல்லாம் பேசுவது கூட கம்யூனிசச் சிந்தனைதான்).

இடதுசாரிப் பெருமை

ஆனால், மக்களுக்காகப் போராடுகிறவர்கள் இடதுசாரிகள் என்று குறிப்பிடப்படுவது ஏன்? அதை அவர்கள் பெருமையோடு ஏற்றுக்கொள்வது எப்படி?

உலக வரலாற்றின் பிரெஞ்சுப் புரட்சி அத்தியாயத்தில் அறிமுகமான சொல் இடதுசாரி என்பது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் மன்னரின் சர்வாதிகாரத்துக்கும் அதற்கு ஒத்துழைப்பாக இருந்த கிறிஸ்துவ மத தலைமை பீடத்துக்கும் எதிராக நடந்த புரட்சி அது. அதுவரையில் அங்கே மூன்று வகையான அரசியல் தளங்கள் இருந்துவந்தன. அவை எஸ்டேட்டுகள் என்று குறிப்பிடப்பட்டன.

முதல் எஸ்டேட் மதகுருமார்களின் ஆதிக்கத்தில் இருந்தது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இவர்களுக்கு இருந்த இடம் 1 சதவீதம் மட்டுமே. ஆனாலும் அந்த எஸ்டேட் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தியது. (நமது நாட்டிலும் மிகக்குறைவான மக்கள்தொகை உள்ள மேல்தட்டுப் பிரிவு அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதோடு இதை ஒப்பிடலாமா?)

இரண்டாவது எஸ்டேட் அரசன், அரச குடும்பத்தினர், அரண்மனை அதிகார மட்டத்தில் இருந்தவர்கள், அரசனுக்கு உட்பட்ட சிறு ஆட்சி வட்டாரத் தலைவர்கள் (பிரபுக்கள்) போன்றோரைக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையில் இவர்களது பலமும் 1 சதவீதம்தான்.

98 சதவீத மக்களைக் கொண்டிருந்தது மூன்றாவது எஸ்டேட். தங்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்பட்டது, கொடூரமான வரிகள் விதிக்கப்பட்டது, கடுமையான தண்டனைகள் தரப்பட்டது போன்ற நிலைமைகளை மாற்றுவதற்காக இந்த மூன்றாம் தளத்தைச் சேர்ந்த மக்கள் போராடி வந்தார்கள்.

அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்

இந்த மூன்று தளங்களின் பிரதிநிதித்துவமும் கொண்டதாக ‘எஸ்டேட்ஸ் ஜெனரல்’ (பொதுத் தளம் அல்லது தலைமைத் தளம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்குத் தேர்தல் மூலமாகப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘எஸ்டேட்ஸ் ஜெனரல்’ சபை கூட்டப்பட்டபோது அவைத்தலைவரின் வலது பக்கத்தில் மன்னரின் ஆதரவாளர்களும் அரண்மனைவாசிகளும் பிரபுக்களும் மதகுருமார்களின் பிரதிநிதிகளும் இருந்தனர். அரண்மனையில் அரசனுக்கு வலதுபுறம் எப்போதும் சிறப்பு விருந்தினர்கள் அமர வைக்கப்படுவார்கள். அது ஒரு கௌரவ அடையாளம்.

சபையின் இடது பக்கத்தில் மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்தார்கள். பரம்பரை மன்னராட்சி அல்லாத குடியரசு, மத பீடத்தின் பிடியிலிருந்து விடுபட்ட மதச்சார்பற்ற அரசு, சமூகநீதி, தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றுக்காக இவர்கள் வலியுறுத்தினார்கள்.

இப்படியாகத்தான் மக்களின் பக்கம் நிற்கிறவர்கள் என்றால், உழைப்பாளிகளின் பிரச்சனைகளைப் பேசுகிறவர்கள் என்றால், மனித உரிமைகளுக்காக வாதாடுகிறவர்கள் என்றால், சமத்துவத்தை வலியுறுத்துகிறவர்கள் என்றால் அவர்கள் இடதுசாரிகள் என்ற அடையாளம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் நேர்மாறாக, மேல்தட்டினரின் பக்கம் நிற்கிறவர்கள், சுரண்டல் கூட்டங்களின் ஆதாயங்களுக்காகப் பேசுகிறவர்கள், மதவாதத்தோடு ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வாதாடுகிறவர்கள், அதிகாரக் குவிப்பை வலியுறுத்துகிறவர்கள் வலதுசாரிகள் என்ற அடையாளமும் ஏற்பட்டது.

இந்த ஏற்பாடு நீடிக்கவில்லை. மக்களுக்கான பல தீர்மானங்கள் சபையில் தோற்கடிக்கப்பட்டன. ஏனென்றால் அப்போது பொதுச்சபையில் ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் ஒரு வாக்கு என்ற விதி இருந்தது. மக்கள் தளத்தினர் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை, மதகுருமார் தளத்தினரும் அரசத் தளத்தினரும் சேர்ந்து எதிர்ப்பார்கள். பெரும்பான்மையாக இரண்டு வாக்குகள் அவர்களின் பக்கம் விழும் என்பதால், ஒரு வாக்கு மட்டும் பெற்ற மக்கள் தளத்தினரின் தீர்மானம் வெற்றி பெற முடியாது. இவ்வாறாக மக்கள் மீதான தாக்குதல்களும் சுரண்டல்களும் தொடர்ந்தன.

போராட்டம் புரட்சியானது

ஒரு கட்டத்தில் மக்கள் தளத்தினர் பெரும் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் பேராட்டம்தான் 1789ல் புரட்சியாகப் பரிணமித்தது. இருக்கிற நிலைமையைப் புரட்டிப் போடுவதுதான் புரட்சி. குடியரசு அமைப்பதற்கான ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்குவது, ஜனநாயக நடைமுறைகளைக் கொண்டுவருவது உள்ளிட்ட மாற்றங்களுக்கு பிரெஞ்சு மக்கள் விதையிட்டார்கள். அரசாங்க நிர்வாகத்தில் மதம் தலையிடுவதற்கு முடிவு கட்டப்பட்டது. பல வரிகள் விலக்கப்பட்டன. ஆயினும், புரட்சிக்கு எதிரான சக்திகளும் தொடர்ந்து சதிவேலைகளில் ஈடுபட்டன. 1799ல் நெப்போலியன் போனபார்ட் அதிகாரத்தைக் கைப்பற்ற, மாற்றத்திற்கான ஒரு அடிப்படை நம்பிக்கையை உலக மக்களுக்குக் காட்டிய பிரெஞ்சுப் புரட்சி ஒடுக்கப்பட்டது. உலகத்திற்கு இடதுசாரிகள் யார் என்பதையும் உணர்த்திவிட்டுதான் அந்தப் புரட்சி முடிவுக்கு வந்தது.

 

பிரெஞ்சுப் புரட்சிக்குத் தலைமை தாங்கியது கம்யூனிஸ்ட் இயக்கமல்ல. ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்வைக்கிற பல மாற்றுகள் அந்தப் புரட்சியில் எதிரொலித்தன. ஆம், இடதுசாரிகள் எல்லோரும் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் ஒவ்வொருவரும் இடதுசாரிகள்தான்!

கம்யூனிசத்தைப் புரிந்துகொள்வதோடு தொடர்புடைய வேறு முக்கிய சொல்லாடல்களை அடுத்தடுத்துப் புரிந்துகொள்வோம்.

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here