கம்யூனிசம் என்றால்.. தொடர் – 1; உலகப் போராட்டமும் சமத்துவ வேரோட்டமும்

2
1774
views

உலகம் முழுவதும் நாள் முழுவதும் ஏதாவது போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நாடுகளின் அரசுகளுக்கு இடையே, அரசுகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையே, பல்வேறு அமைப்புகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையே, மதங்களுக்கு இடையே, சமூகங்களுக்கு இடையே என வரலாறு நெடுகிலும் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. புதிய போராட்ட வரலாறுகளும் எழுதப்படுகின்றன. அந்தப் போராட்டங்களின் பின்னணிக் காரணங்கள் வெவ்வேறாக இருக்கின்றன. ஆனால் நுட்பமாகப் பார்த்தால், அனைத்துப் போராட்டங்களின் இலக்கு சமத்துவம்தான்.

எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று போதிக்கின்ற மதங்கள் கூட தங்களுடைய வழியில் மனிதர்கள் வந்து விட்டால் எல்லோருக்கும் சமமான வாழ்க்கை இன்பம் உறுதியாகும் என்று கூறுகின்றன. ஒவ்வொரு மதமும் தனது கடவுள்தான் உண்மையானவர், மனித ஆன்மா அந்த கடவுளை கண்டடைவதுதான் மோட்சம் என்கிறது. இந்த மாற்றம்தான் சமத்துவம் என்று கற்பிக்கின்றது. தான் சொல்கிற கடவுள்தான் உண்மையானவர் என்கிறபோது மற்ற மதங்களையும் அவை சொல்கிற கடவுள்களையும் போலியானவை என்று ஒவ்வொரு மதமும் தள்ளுபடி செய்கிறது. இந்த அடிப்படையில் கற்பனைக் கடவுள்களும் கற்பனை மதங்களும் நிஜ மனிதர்களை மோதவிட்டு, நிஜ பூமியின் நிஜ சமத்துவத்தைக் குத்திக் குதறிக் கொண்டிருப்பது வேடிக்கைதான்.

விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் போராடிக் கொண்டிருப்பது விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, தங்களுடைய சமத்துவ வாய்ப்புகளுக்கான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் தான். தொழிலாளர்கள் நடத்துகிற போராட்டம் மேலோட்டமாகப் பார்த்தால் கூலி உயர்வுக்காக என்பது போல் தெரியும், உண்மையில் அது சமத்துவத்திற்கான போராட்டமே. ஒடுக்கப்பட்ட சாதிகளும் சமூகங்களும் இனங்களும் நடத்துகிற போராட்டங்கள் சமத்துவத்திற்காக அல்லாமல் வேறு எதற்காக? அன்றாட வாழ்க்கையில் பெண்கள் நடத்துகிற போராட்டமும் ஆணாதிக்கத்தை வீழ்த்தி பாலின சமத்துவத்தை வேரூன்றச் செய்வதற்காகத்தான்.. ஏன், பெற்றோர்கள் உள்ளிட்ட பெரியவர்களுக்கு எதிராகக் குழந்தைகள் தங்களது சுதந்திரத்திற்காக நடத்துகிற போராட்டத்தின் லட்சியம் சமத்துவம்தான்.

சமத்துவத்திற்கான தத்துவம்தான் கம்யூனிசம். உன் விடுதலை உன் கையில்தான் இருக்கிறது, உன் விடுதலையில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் சமத்துவம் இருக்கிறது என்று கற்பனை கலக்காத உண்மையைச் சொல்கிறது கம்யூனிசம். உன் சொந்த மன ஆறுதலுக்காக எந்தக் கடவுளை வேண்டுமானாலும் கும்பிட்டுக் கொள், எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள், எல்லோருக்குமான சமத்துவத்தை நிலைநாட்ட எல்லோருடனும் இணைந்து போராட வா என்று அழைக்கிறது கம்யூனிசத் தத்துவம்.

இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம் யாரையும் கம்யூனிஸ்ட்டாக மாற்றுவது அல்ல. கம்யூனிசம் என்றால் என்ன என்று புரிய வைப்பதுதான். கம்யூனிசம் என்றால் என்ன என்பது முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து விட்டால் அதன் பிறகு ஒருவர் கம்யூனிஸ்ட்டாக மாறாமல் இருப்பாரா, இருக்க முடியுமா என்பது சுவையான கேள்வி!  “கம்யூனிசம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும், ஆனால் நான் கம்யூனுனிஸ்ட்டாக மாறவில்லை.” என்று யாராவது சொல்வாரானால் அவர் பொய் சொல்கிறார் அல்லது அறியாமல் சொல்கிறார் என்றே பொருள். அதாவது கம்யூனிசத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு விட்டதாக அவர் சொல்வது பொய் அல்லது அறியாமை.

கம்யூனிசம் நல்ல தத்துவம்தான் ஆனால் எதற்காக இத்தனை கம்யூனிஸ்ட் கட்சிகள்? அமைதியான வழியில் போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள், ஆயுதப் போராட்டமே தீர்வு என்று மோதிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். யாரை நம்புவது? தேர்தலைச் சந்தித்து மக்களின் ஆதரவைக் கோருகிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள், தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒரு மேற்கோளைச் சொல்லியபடி வேறு வழியில் செல்கிற கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் இருக்கிறார்கள். யாரோடு செல்வது?-இப்படியெல்லாம் யாரேனும் கேட்கத் தொடங்கினால் கூட, இப்போது நாம் தொடங்குகிற இந்த உரையாடல் வெற்றி பெறுகிறது என்று எடுத்துக் கொள்வேன்.

கம்யூனிசம் பற்றிய தவறான பல சிந்தனைகள் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளன. கம்யூனிசச் சிந்தனைகள் பரவக் கூடாது என்று நினைக்கிற சித்தாந்த எதிரிகளால் அந்தத் தவறான சிந்தனைகள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. அவற்றில் தலையாயதாக இருப்பது கம்யூனிசம் என்றால் வன்முறை என்ற கருத்துதான். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே வன்முறையால் எதிரிகளை வீழ்த்துவதற்கு ஆயுதங்களோடு அலைகிறவர்கள், அமைதிப் போராட்டங்களில் பங்கெடுப்பது போல் தெரிகிற கம்யூனிஸ்டுகளின் கைகளிலும் ஆயுதங்கள் மறைவாக இருக்கின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

கம்யூனிஸ இயக்கம் ஒரு வன்முறை இயக்கம் என்ற அச்சத்தின் காரணமாகவே அதற்குள் தங்களை இணைத்துக் கொள்ளத் தயங்குகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.

திரைப்படங்களில் கதாநாயகர்கள் கடைசியில் ரத்தக்களறியில்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள், அதைக் கை தட்டி வரவேற்கத் தயாராக இருக்கிற ரசிக மனநிலை, வாழும் சமுதாயம் என்று வருகிறபோது வன்முறைப் பாதையில் செல்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளை ஏற்க மறுக்கிறது.

அந்த வன்முறையின் மீதான ஒரு கவர்ச்சியின் காரணமாகவே கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்களும் உண்டு! ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு வன்முறை வழிதான் உத்தரவாதமானது என்று நம்புகிறவர்கள் இவர்கள். தாங்கள் சார்ந்துள்ள இயக்கம் அப்படிப்பட்ட அதிரடிப் பாதையில் போகாமலிருக்கிறதே என்று கூட இவர்கள் நொந்து கொள்வார்கள்!

தங்கள் நாடுகளில் நடக்கும்  வன்முறைகளை கண்டிக்கிற  கம்யூனிஸ்ட் கட்சிகள் ரஷ்யாவிலோ சைனாவிலோ புரட்சியின்போது நடந்த வன்முறைகளைக் கொண்டாடுகிறார்கள் அல்லது குறை சொல்லாமல் இருக்கிறார்கள் என்று விமர்சிப்பவர்கள் உண்டு.  அப்படிப்பட்ட புரட்சிகரப் பாதையில் செல்லாமல் மற்ற கட்சிகளைப் போல நீங்களும் தேர்தலில் நின்று வாக்காளர்களிடம் கையேந்தத்தானே செய்கிறீர்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே இருந்து கேட்பவர்களும் உண்டு.

ஒருவர் பாடுபட்டு உழைத்து சம்பாதித்துப் பணக்காரராக இருக்கிறார். சமத்துவம் என்ற பெயரில் அவருடைய சொத்தை கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றி, சொத்து இல்லாதவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதுதான் கம்யூனிசமா என்று கேட்கிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு முதலாளி தனது முதலீட்டால் மட்டுமல்ல மூளையாலும் முன்னேறுகிறார். அவரைச் சுரண்டல் பேர்வழி என்று சொல்லி தொழிலாளர்களின் எதிரி போல அவரை சித்தரிப்பது தான் கம்யூனிசமா என்று விமர்சிப்பதைக் கேட்டிருக்கிறோம்.

உண்டியல் அமுக்கிகளை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளைப் பார்த்து உண்டியல் குலுக்கிகள் என்று சொல்லி வக்கிரமாக மகிழ்கிறார்கள் சிலர். தேர்தலில் தோல்வியடைந்த ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர் கொஞ்சமும் அந்த தோல்வியின் வேதனை இல்லாதவராக, எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரால் மட்டுமல்லாமல் தொகுதி மக்களாலும் தோற்கடிக்கப்பட்டதில் தாழ்வுமனப்பான்மை ஏதுமற்றவராக அதே மக்களுக்கான ஒரு பிரச்சினைக்காக போராட்டக் களத்தில் இறங்கி நிற்கிற காட்சியைக் கண்டு வியக்கிறார்கள் பலர்.

கம்யூனிஸ்ட்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் ஆலய நுழைவுரிமைப் போராட்டத்தில் அதே கம்யூனிஸ்டுகள் முன்வரிசையில் இருக்கிறார்கள். அது எப்படி என்று குழம்பு கிறவர்களையும் பார்க்கலாம். கம்யூனிஸ்ட்டுகள் தலையிட்டு விட்டார்கள், இனி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத வரையில் விடமாட்டார்கள் என்று தெளிவடைகிறவர்களையும் பார்க்கலாம்.

கம்யூனிஸ்ட் கட்சியால் இனிமேல் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்று ஒருபுறம் சொல்வார்கள். இன்னொருபுறம், ஏதேனும் கடுமையான பிரச்சனை வருகிறதென்றால், இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எங்கேயப்பா போனார்கள் கேட்கிறார்கள்.

1991ல் சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தது, வேறு பல நாடுகளின் சோசலிச அரசுகள் காணாமல் போயின. இனிமேல் கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்று உலகம் முழுவதுமே சிலர் முடிவுரை எழுதினார்கள். ஆனால் கம்யூனிசத்திற்கான முன்னுரை இப்போது முடிந்திருக்கிறது இனிமேல் தொடர் உரை இருக்கிறது என்று முன்னைக் காட்டிலும் வேகமாக நம்பிக்கையோடும் உறுதியோடும் உற்சாகத்தோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். அண்மையில் உலக நாடுகளையெல்லாம் கலக்கிய பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டபோது, அதன் காரணத்தையும் தீர்வையும் அறிய அனைத்து நாடுகளின் பொருளாதார வல்லுனர்களும் கம்யூனிச தத்துவத்தின் பேராசான் கார்ல் மார்க்ஸ் உலகத்திற்கு வழங்கிய ‘மூலதனம்’ நூலைத் தேடித் தேடிப் படித்தார்கள்.

பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமல்ல, சமூகம் பண்பாடு கல்வி அறிவியல் கலை இலக்கியம் இயற்கை என வாழ்க்கையின் எந்த ஒரு அத்தியாயத்திலும் மார்க்சியம் வந்து நிற்கிறது. சமூக உளவியலில் மட்டுமல்ல, தனிமனிதர் உளவியலிலும் மார்க்சியம் செம்மையான பங்காற்றுகிறது. கம்யூனிச தத்துவத்தை உள்வாங்கிய ஒருவர் வாழ்க்கையின் எந்தச் சோதனையையும் புன்முறுவலோடு எதிர்கொள்ளும் வல்லமையைப் பெறுகிறார். ஆம், கம்யூனிசம் வெறும் அரசியல் கொள்கை அல்ல, வெறும் பொருளாதார விதி அல்ல.

அப்படியானால் கம்யூனிசம் என்றால் என்ன? தொடர்ந்து நாம் உரையாடுவோம்.

தீக்கதிர் மேநாள் ஆசிரியர்

2 COMMENTS

  1. மிக சிறப்பு தொடருங்கள்….வாசிக்க ..காத்திருக்கிறோம்…..

  2. சிறப்பான தொடக்கம்….. முதல் பதிவு மிகவும் ஆழமாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here