உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் வெற்றிபெற்றதில் பாகிஸ்தானின் பங்கு

0
1331
views

பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதன் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் பங்கு என்ற தலைப்பை பார்த்தவுடன் எதுவும் சதியா? தீவிரவாதமா? சூதாட்டமா? என்றெல்லாம் யோசிப்பவர்களே இங்கு அதிகம். அந்த நாட்டின் மீதான பார்வை உலக நாடுகள் முழுவதும் அப்படி தான் உள்ளது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை சொல்லத் தேவையே இல்லை. ஆனால் அந்த நாடு அப்படி அல்ல என்பதை அங்கு நடக்கும் சில சம்பவங்கள் அவ்வபோது நமக்கு உணர்த்தியே வருகின்றன. அதே போல தான் தற்போது நடைபெற்று வரும் FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்.

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரேசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதே போல தான் பாகிஸ்தான் நாட்டினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FIFA World Cup 2018

ஒரு அணி விளையாடினால் அந்த அணியின் நாட்டினர் மட்டுமே கொண்டாடுவர். ஆனால் எந்த அணி விளையாடினாலும் பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் நாட்டு அணியினர் விளையாடியதைப் போலவே கொண்டாடினர். அதற்கு காரணமும் உண்டு.

உலக கால்பந்து அணிகள் தர வரிசையில் 198 வது இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான் கால்பந்து அணி. இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவில்லை என்றாலும், ஒவ்வொரு போட்டியும் அந்நாட்டு மக்கள் ரசித்துப் பார்த்ததற்கு காரணம், இந்த கால்பந்து தொடரில் அவர்கள் அணிக்கு பதிலாக அந்நாட்டினர் தயாரித்த கால்பந்துகள் விளையாடியதால் தான்.

ஆம். ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பயன்படுத்தப்பட்ட கால்பந்துகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த தொடர் மட்டுமல்ல, உலகில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய தொடர்களுக்கு கால்பந்துகள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து தான் செல்கின்றன. உலகில் உள்ள கால்பந்துகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டால், பாதிக்கும்மேல் அதாவது 60% கால்பந்துகள் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்டவை தான்.

football made from pakistan

இது குறித்து ரஷ்யாவின் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அலெக்சி டிரோவ், ரஷ்யாவில் நடைபெற்ற போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட Telstar 18 என்ற கால்பந்துகள் பாகிஸ்தான் நாட்டில் தயாரானவை என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

உலகக்கோப்பை கால்பந்துகளை தயாரித்து தரும் Forward Sports நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கவாஜா மசூத் கூறுகையில்,

உலகக்கோப்பை தொடருக்கு கால்பந்துகள் தயாரித்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நாட்டின் கால்பந்துகள் போட்டியில் பங்கேற்பது எங்கள் அணி பங்கேற்பதை போன்ற மகிழ்ச்சியை எங்களுக்கு தரும் என்றார்.

பாகிஸ்தான் கால்பந்து அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும், தங்கள் அணி பங்கேற்றதைப் போல அந்நாட்டினர் ஒவ்வொரு போட்டியும் ரசித்துள்ளனர் என்கிறார்கள் கால்பந்து தயாரிக்கும் ஊழியர்கள்.

workers are making football

மசூத் அவர்களின் இந்த நிறுவனம் தான் அடிடாஸ் பிராண்ட் கால்பந்துகளை தயாரித்து வருகிறது. இவரின் நிறுவனத்தில் மாதம் சுமார் 7 லட்சம் கால்பந்துகள் தயாரிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டும் இதுவரை 10 மில்லியன் கால்பந்துகள் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகியுள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஹுஷ்னைன் சீமா கூறினார். ஒரு ஆண்டுக்கு மட்டும் 40 மில்லியன் முதல் 60 மில்லியன் கால்பந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கால்பந்தின் தாய் நகரம்:

பாகிஸ்தானில் உள்ள சியல்காட் நகரில் தான் கால்பந்துகள் தயாராகின்றன. மற்ற ஆசிய நாடுகளை விட, பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்படும் கால்பந்துகள் தரமாக இருப்பதற்கு காரணம் அந்நாட்டில் தயாராகும் பந்துகள் அனைத்தும் கைத்தையல் மூலமாக தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தான் கால்பந்துகள் தயாரிப்பதில் ஈடுபடுகிறார்கள்.

சீனா போன்ற பிற நாடுகளில் இயந்திரங்கள் மூலம் கால்பந்துகள் தயாரிக்கப்படுகிறது. கைகள் மூலம் தைத்து தயாரிக்கப்படுவதால் அதிக தரத்துடன் இருப்பதுடன் விலையும் குறைவாக இருப்பதால், உலகின் முன்னணி பிராண்ட்களான Nike, Puma, Adidas போன்ற அனைத்து நிறுவனங்களும், இங்கு தான் குறைந்த விலையில் ஆர்டர் கொடுத்து, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

கால்பந்து தயாரித்த வரலாறு:

இங்கிலாந்து நாட்டவர்கள் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க காலத்தில், இங்கிருந்த இங்கிலாந்து நாட்டினரும் கால்பந்து விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளனர். விளையாடும்போது பந்துகள் பழுதாகிவிட்டால், புதிய பந்து கடல் வழியாக கப்பல் வழியாக வந்து சேர பல மாதங்கள் ஆகும். இதனால் கால்பந்து விளையாட முடியாமல் இருந்து வந்துள்ளார்கள். 1889 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து பழுதாகிவுள்ளது. இதனால் கவலையடைந்த பிரிட்டிஷ் நாட்டவர்கள் பந்தை சரி செய்ய நினைத்தனர்.

அப்போது பாகிஸ்தான் நாட்டின் சியல்காட்டில் வசிக்கும் குதிரையில் அமருவதற்கு பயன்படும் சேணம் தயாரிக்கும் ஒருவரிடம், பந்தை பழுது பார்த்து தரும்படி கொடுத்துள்ளனர். அவரும் சரி செய்து கொடுத்துள்ளனர்.

முன்பு பயன்படுத்தியதை விட, அவர் சரி செய்து கொடுத்த கால்பந்து மிக வலிமையாக இருப்பதை கண்ட இங்கிலாந்து நாட்டவர்கள் அவரை புதிய பந்துகள் தயாரித்து தர கேட்டுள்ளனர். அவருக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளனர். அவரும் கால்பந்துகளை தயாரித்து கொடுத்துள்ளார். இப்படி தான் பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்நகரம் கால்பந்தின் தாய் ஆகிவுள்ளது.

இந்த உலகக்கோப்பை மட்டுமல்ல, 1982 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தான் நாட்டின் கால்பந்துகள் தான் பயன்படுத்தப்படுகிறது. உலககோப்பை மட்டுமல்லாது கவுண்ட்டி போட்டிகளிலும் சியல்காட் பந்துகளே பயன்படுத்தப்படுகிறது.

இந்த நகரில் மட்டும் சுமார் 100 நிறுவனங்கள் கால்பந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும், அவர்கள் தயாரிக்கும் பந்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பளம் தரப்படுகிறது. அடுத்த முறை கால்பந்து போட்டிகளை பார்த்தால் அந்த பந்தை பாருங்கள். எட்டி உதைக்கப்படும் அந்த பந்திற்கு பின்னால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வியர்வை துளிகள் உள்ளன.

கிரிக்கெட்டில் ஒரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், மைதானத்தில் பயன்படுத்திய ஸ்டெம்ப், பேட், பால் என அனைத்தையும் பத்திரமாக எடுத்துச் செல்வார்கள். அந்த வகையில் உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸ் அணி, தங்கள் வெற்றியில் பங்கு கொண்ட பாகிஸ்தானின் பந்தையும் என்றென்றும் தங்கள் நினைவாக வைத்திருப்பார்கள் என்பதையே தங்களது பங்காக நினைக்கிறது பாகிஸ்தான்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here