இழுத்தடிக்கப்படும் பாபர் மசூதி வழக்கு | பின்வாங்கும் நீதிபதி!

0
714
views

473 சாட்சிகளை இன்னும் விசாரிக்காத நிலையில் எப்படி 2019 ஆம் ஆண்டிற்குள் பாபர் மசூதி வழக்கை முடித்து வைப்பீர்கள் என்று வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

கெடு நாள் நிர்ணயம்:

பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் CBI நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அவர்களுக்கு, பாபர் மசூதி வழக்கை தினந்தோறும் விசாரித்து எந்த தாமதமும் இல்லாமல் 2019 ஆம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19, 2017 ஆம் ஆண்டு கெடு நிர்ணயம் செய்திருந்தது. அதுவரை நீதிபதியை மாற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, CBI நீதிபதி யாதவ் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கு முடியும் வரை இவ்வழக்கில் இருந்து மாற்றக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், 2019 ஆம் ஆண்டிற்குள் இந்த வழக்கை முடிக்க முடியாது என்றும், இதனால் எனது பதவி உயர்வு பாதிப்படைவதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் விதித்த ஏப்ரல் 19, 2019 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க முடியாது என்று ஒரு நீதிபதியே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் நீதிபதியின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், புதிய நீதிபதி நியமித்து, புதிதாக விசாரணை மீண்டும் நடத்த முடியாது என்றும், வழக்கு முடியும் வரை நீதிபதியை மாற்ற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே தள்ளிவைக்க வேண்டுமே தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் தள்ளி வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

வழக்கின் தற்போதைய நிலை:

1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் இரு வேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க வின் முக்கிய தலைவர்களான அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரேபரேலி நீதிமன்றத்திலும், ஆர்.எஸ்.எஸ் உடைய கரசேவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் லக்னோ நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது. பின்பு இரு வேறு வழக்குகளும் லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஏப்ரல் 19, 2019 க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது.

மொத்தம் 21 அரசியல் தலைவர்கள் மீது குற்றசாட்டு பதியப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதில் இதுவரை எட்டு பேர் இறந்துவிட்டனர். வழக்கை தொடர்ந்த ஹாஜி மகபூப் அஹமத் அவராலும் இறந்து விட்டதால், தற்போது வழக்கை சிபிஐ அப்பீல் செய்து விசாரித்து வருகிறது.

சாட்சிகள் விசாரணை:

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 வருடங்கள் கடந்தும், இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. 2017 ஆம் ஆண்டின் கணக்குப்படி, கரசேவர்களுக்கு எதிரான 800 சாட்சிகளில் 195 சாட்சிகளை மட்டுமே விசாரித்துள்ளது லக்னோ நீதிமன்றம். தலைவர்களுக்கு எதிரான 108 சாட்சிகளில் 58 சாட்சிகளை மட்டுமே விசாரித்துள்ளது. கெடு முடிய இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில் இன்னும் 656 சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.

இந்நிலையில் வழக்கில் இருந்து பின்வாங்க நினைக்கும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது மனுவில், மொத்தமுள்ள 1026 சாட்சிகளில் 313 சாட்சிகளே விசாரிக்கப்பட்டுள்ளனர். 73 பேர் விலகி விட்டனர். 81 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 88 பேர் இறந்து விட்டனர். எனவே தற்போது 473 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. இது சிரமமான வேலை என்றாலும் என்னால் முடிந்த வேலையை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் மெத்தன போக்கை நீதிமன்றம் கடைபிடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தனை சாட்சிகளை விசாரிக்காமலேயே 2013 ஆம் ஆண்டு எதன் அடிப்படையில் முரண்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

பாபர் மசூதியை வைத்து மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலை செய்து வரும் அரசியல் கட்சிகளுக்கு இந்த மெத்தனப்போக்கு மேலும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here